Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 31 ஜனவரி, 2020

சத்யவதியின் யோசனை...!


 ஷிகர் முனிவர் சொன்னதைப் போல், சகண்டி விபஜனம் விழா நடைப்பெறும் இடத்திற்குச் சென்றாள். அங்கு பல கந்தர்வர்கள் வந்து இருந்தனர். அங்கு சிகண்டியை பார்த்த ஒருவன், அவளிடம் சென்று நாம் இருவரும் நம் உருவத்தை மாற்றிக் கொள்ளலாமா? எனக் கேட்டான். சகண்டியும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள். இருவரும் உருவத்தை மாற்றிக் கொண்டனர். சிகண்டி ஆணாகவும், அவன் பெண்ணாகவும் உருவம் மாறினர். அதன் பின் சிகண்டி பல கலைகளை கற்று சிறந்த வீரனாக திகழ்ந்தாள். சிகண்டி, தன் தந்தை துருபதனிடம் திரும்பிச் சென்று, நடந்த விஷயங்களை விரிவாக எடுத்து கூறினாள். அதன் பின் சிகண்டி தன் தந்தையை பார்த்து! இனி தாங்கள் பீஷ்மரை பார்த்து பயப்பட வேண்டாம் எனக் கூறினாள். துருபதனும் மகனாக மாறி இருக்கும் மகளை அன்புடன் ஏற்றுக் கொண்டான்.

அஸ்தினாபுரத்தில்,

 அம்பை அஸ்தினாபுரத்தை விட்டு சென்ற பின் பீஷ்மர், ஒரு நன்னாளில் விசித்திரவீரியனுக்கு அம்பிகை மற்றும் அம்பாலிகையை திருமணம் செய்து வைத்தார். ஏழு ஆண்டுகள் கடந்த பின்னர் விசித்திரவீரியன் கடும் காச நோயால் இறந்தான். சில நாட்கள் கடந்தது. சத்யவதி பீஷ்மரைப் பார்த்து, மகனே! உன் தம்பி, மக்கள் பேறு இன்றி இறந்து விட்டான். சந்தனுவின் குலம் தழைக்க வேண்டும். அதனால் நீ அம்பிகை மற்றும் அம்பாலிகையை திருமணம் செய்து சந்தனுவின் குலம் தழைக்க சந்ததியை உண்டாக்கு என்றாள். பீஷ்மர், அன்னையே! தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நீங்கள் கூறியது தருமமே என்றாலும் நான் என் சபதத்தை மீற மாட்டேன் என்றார்.

 அதற்கு சத்யவதி, மகனே! ஆபத்து காலங்களில் தருமத்தை மீறுவது தவறில்லை. அதனால் நீ அவர்களை திருமணம் செய்துக் கொள் என்றாள். ஆனால் பீஷ்மரோ தன் சபதத்தில் பிடிவாதமாக இருந்தார். அன்னையே! என்னால் சபதத்தை மீற முடியாது. இதற்கு வேறு ஏதேனும் வழி இருந்தால் கூறுங்கள் என்றார். அதன் பின் யோசித்த சத்யவதி வியாசர் பிறந்த கதையை கூறினாள். முன்பு வசு என்ற மன்னனின் வீரியத்தை மீன் ஒன்று தாங்கியது. பின் அம்மீன் கர்ப்பமானது. அம்மீனை செம்படவன் அவனது வீட்டிற்கு கொண்டுச் சென்றான். அம்மீனில் இருந்து தோன்றிவள் தான் நான். அதன் பிறகு செம்படவன் என்னை தன் மகளாக வளர்த்து வந்தான். நான் பருவ வயது அடைந்தவுடன் பரிசல் ஓட்ட ஆரம்பித்தேன்.

 பராசர மகரிஷி ஒரு முறை, யமுனை நதியின் அருகே பயணித்துக் கொண்டிருந்த போது, மீனவ குடும்பத்தை சேர்ந்த என்னை கண்டார். பார்த்த உடனேயே பாரசர முனிவர் என்னை விரும்பினார். அதன் பிறகு அவர் என்னிடம் வந்து தன்னை அக்கரைக்கு அழைத்து செல்ல சொன்னார். இருவரும் மரப்படகில் அக்கரைக்குச் செல்லும் வழியில் பராசர மகரிஷி, என்மீது கொண்டுள்ள விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

 அவருடைய விருப்பத்திற்கு நான் முதலில் தயங்கினாலும், பராசர மகரிஷியின் தொடர் வற்புறுத்தலின் பேரில் வேறு வழியின்றி, என்னுடைய நிபந்தனைக்கு சம்மதம் தெரிவித்தால் நான் உங்கள் விருப்பத்திற்கு சம்மதிக்கிறேன் என்றேன். பராசர மகரிஷி, என்ன நிபந்தனை கூறு என்று கேட்டார். என்னுடைய முதல் நிபந்தனையாவது, நம் இருவரையும் யாரும் காணக் கூடாது என்றேன். உடனே அவர் சூரியனை மறைத்து இருளாக்கினார். இரண்டாவது நிபந்தனை, என்மீதுள்ள மீன் வாசனை மாற வேண்டும் என்றேன். உடனே மீன் வாசனையை போக்கி நறுமண வாசனை வீசியது.

 மூன்றாவது நிபந்தனை, நான் உங்களின் விருப்பத்தை நிறைவேற்றிய பின் கன்னிப்பெண்ணாக இருக்க வேண்டும். எனக்கு பிறக்கும் குழந்தை நல்ல அறிவாளியாகவும், ஒரு முனிவனாகவும் இருக்க வேண்டும். முனிவர் அவ்வாறே ஆகும் என்றார். பின்னர் இருவரும் அன்றைய தினம் ஒரு தீவில் இல்வாழ்க்கை நடந்தினர். அன்றைய தினம் நான் ஒரு மகனைப் பெற்றெடுத்தேன். அவன் வேத வியாசர் என அழைக்கப்பட்டான்.

 நீ சம்மதித்தால், வியாசர் அம்பிகை மற்றும் அம்பாலிகைக்கு புத்திர பாக்கியம் கொடுப்பான் என்றாள். பீஷ்மரும் தன் குலம் தழைக்க வேண்டும் என்பதால் அன்னை சத்யவதி கூறியதற்கு சம்மதம் தெரிவித்தார். அதன்பின் சத்யவதி தன் மகன் வியாசரை மனதில் நினைக்க, வியாசர் அவள் முன் தோன்றினார். வியாசர் சத்யவதியை பார்த்து, அன்னையே! தாங்கள் என்னை அழைத்தற்கான காரணம் என்ன? என்று கேட்டார்.

சத்யவதி, மகனே! நீ எனக்கு மூத்த மகனாக பிறந்திருக்கிறாய். பீஷ்மர் உனக்கு அண்ணன் ஆவான். உனது இளைய சகோதரன் விசித்திரவீரியன். அவன் காச நோயால் இறந்து விட்டான். நான் நம் குல விருத்திக்காக உன்னை இங்கு அழைத்தேன். பீஷ்மர் பிரம்மசர்ய விரதத்தை மேற்கொண்டிருப்பதால் அவன் உதவ முடியாமல் இருக்கிறான். உன்னால் என் சந்ததி உருவாக வேண்டும். இது எனது கோரிக்கை என்றாள். உன் இளைய சகோதரனின் மனைவிமார்கள் அம்பிகை மற்றும் அம்பாலிகை. இவர்கள் இருவரும் தேவமாதர்கள் போன்றவர்கள். நீ இவர்கள் மூலம் சந்ததி உருவாக்க வேண்டும் என்றாள்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக