Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 31 ஜனவரி, 2020

அரக்கியை வீழ்த்திய இராமபிரான்



ன்று அவர்கள் அங்கு சிவ பக்தியுடன் தங்கினார்கள். மறுநாள் இராமர், இலட்சுமணர், விசுவாமித்திரர் மூவரும் தங்கள் காலை கடன்களை முடித்துவிட்டு புறப்பட்டு சென்றார்கள். போகும் வழியில் அவர்களுக்கு ஒரு கொடிய பாலைவனம் தென்பட்டது. அக்கானகத்தில் தாங்கமுடியாத வெப்ப நிலையாலும், தாகத்தாலும் இராமரும், இலட்சுமணரும் வெகுவும் சிரமப்பட்டார்கள். விசுவாமித்திரர் இராம இலட்சுமணர்களுக்கு பலை, அதிபலை (விசுவாமித்திரர் இராமபிரானுக்கு உபதேசித்த ஒரு மந்திரம்) என்று இரண்டு விஞ்ஞைகளை உபதேசித்தார்.  அப்பொழுது பதினாயிரம் யானையின் பலம் அவர்களுக்கு கிடைத்தது. பசி, தாகங்கள் எல்லாம் மறைந்தன. இராமர் விசுவாமித்திர முனிவரை பார்த்து, குருவே! இக்கானகம் பாலைவனமாக இருக்க காரணம் என்னவென்று கேட்டார். அல்லது சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் இக்கானகம் எரிந்ததா? என வினாவினர். என் தந்தையின் ஆட்சிக்காலத்தில் இப்படி அழியக் கூடாதே! என்று வினாவினர்.

விசுவாமித்திர முனிவர், குமாரர்களே! இதுதான் தாடகை என்னும் அரக்கி வாழும் கானகம். இந்த வளமான கானகத்தை தாடகை தனியாக அழித்துப் பாலைவனமாக்கி விட்டாள். சகெது என்ற யட்சன் பிரமதேவரை வேண்டி தவம் புரிந்து ஆயிரம் யானை பலம் கொண்ட ஒரு பெண் மகளைப் பெற்றான். தான் பெற்ற மகளுக்கு தாடகை என்று பெயர் சூட்டினான். தாடகையோ சுந்தன் என்ற யட்சனை திருமணம் செய்து கொண்டாள். அவர்களுக்கு சுபாகு, மாரிசன் என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள்.

ஒரு நாள் தாடகையின் கணவன் சுந்தன், அகஸ்தியரின் சிவபூஜைக்குரிய பூ மரங்களை ஒடித்துவிட்டான். அதனால் கோபத்தில் அகஸ்தியர் நெருப்பு எழ கண் விழித்தார். உடனே அவன் அவ்விடத்திலேயே சாம்பலாகினான். இதனை அறிந்த தாடகையும், அவளுடைய புதல்வர்களும் அகஸ்திரியிடம் தன் கணவர் செய்த குற்றத்தை மன்னிக்க வேண்டும் என்று கேட்கும் பண்பை விட்டு, அசுரர்களைப்போல் கல்லும் மண்ணும் வீசி ஆரவாரம் செய்தார்கள். இதனால் சினம் கொண்ட அகஸ்தியர், நீங்கள் அசுரர்களாகப் போக கடவது என்று சாபம் கொடுத்தார். யட்சர்களாகிய அவர்கள் அரக்கர்களாக மாறினர். அரக்கர்களாக மாறியபின் அவர்கள் முனிவர்களுக்கு எண்ணற்ற கொடுமைகளை செய்து கொண்டு இருக்கின்றார்கள். தாடகையோ கையில் மலைப்பாம்புகளைக் வளையல்களாக அணிந்திருப்பாள். சூலத்தை கையில் ஏந்திக் கொண்டிருப்பாள். இராமா! உலக நலன் கருதி நான் செய்யும் வேள்விகளைத் தடுத்து அரக்கர்கள் கெடுத்து விடுகின்றார்கள். தாடகை இராவணனின் உதவியால் எண்ணற்ற கொடுமைகளை செய்து வருகின்றாள் என்றார்.

தாடகை மனிதர்கள் வரும் வாசனையை மோப்பத்தால் உணர்ந்து சீறி எழுந்தாள். இராமர் அவளைப் பெண் என்று நினைத்து போர் புரிய தயங்கி நின்றார். விசுவாமித்திரர் ராஜகுமாரா! இவள் பெண் அல்ல, அவள் தான் தாடகை. அளவற்ற கொடுமைகளை செய்பவள். முனிவர்களாகிய எங்களைக் கொன்று தின்னாமல் விட்டிருக்கின்றாள். ஏனென்றால் நாங்கள் தவத்தால் உடம்பை வாட்டிச் சதைப்பற்று இல்லாமல் இருப்பதனால் எங்களை விட்டு வைத்து இருக்கிறாள். ஆகையால், இவளைக் கொல்லுவது அறம் ஆகும் என்றார், விசுவாமித்திரர். தாடகை, இராமன் மீது சூலத்தை ஏவினாள். அதனை இராமர் பொடியாக்கினார். இராமர் தாடகைமீது சிறந்த அம்பினை ஏவினார். இராமர் ஏவிய அம்பினால் தாடகை மாண்டு விழுந்தாள். தேவர்கள் பூ மழை பொழிந்தார்கள். அதற்கு பின் நடந்ததை நாளை காண்போம்...

தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக