கந்தன் என்பவர் ஒருநாள் கோவிலுக்கு
சென்றார். அந்த கோவில் சுவற்றில் பெருமாள் விக்ரகம் இருந்ததை பார்த்து அருகில்
நின்று கவனித்தார். அதன் கீழே ஒரு கல்வெட்டு இருந்தது. அந்த கல்வெட்டு
எழுத்துக்கள் ஒன்றுமே புரியாது போல் இருந்தது. ஆனால் அவருக்கு அந்த எழுத்துக்களை
படிக்க தெரியும். அதனால், அதை படித்து பார்த்தார்.
அந்த
கல்வெட்டில் இந்த பெருமாளுக்கு யார் ஒரே சமயத்தில், நூறு குடம் தண்ணீர் அபிஷேகம்
செய்கிறாறோ, அவருக்கு ராஜ பதவி கிடைக்கும்! என்று எழுதி இருந்தது. அதை படித்த
கந்தன் அடடா... ராஜ பதவி என்றால் சும்மாவா?
ஒரு
மந்திரி பதவிக்கே லட்ச, லட்சமாக செலவழித்து, அலையாய் அலைகின்றனர். அப்படி
இருக்கும் போது, நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்தால், ராஜ பதவி கிடைக்கிறதே!
என்று நினைத்து வியந்து நின்றார்.
உடனே,
ஓடிச்சென்று ஒரு குடத்தை எடுத்து, பக்கத்திலிருந்த குளத்திலிருந்து தண்ணீர் கொண்டு
வந்து, அபிஷேகம் செய்ய ஆரம்பித்தார். மனதிற்குள் ஒன்று, இரண்டு என எண்ணிக் கொண்டே
அபிஷேகம் செய்ய ஆரம்பித்தார். இப்பொழுது எழுபது, எண்பது, தொண்ணூறு குடம்
ஆயிற்று..!
உடனே
கந்தன் புலம்ப ஆரம்பித்தார், என்னடா இது.! 95 குடம் அபிஷேகம் செய்தாயிற்று, ராஜ
பதவிக்கான அறிகுறி ஒன்றுமே தெரியவில்லையே! கிரீடத்தை எடுத்துக்கொண்டு யாராவது வருகின்றனரா?
என்று சுற்றும், முற்றும் பார்த்தார். அப்படியாரும் அங்கு வரவில்லை. கந்தனுக்கு
இருந்த பொறுமையும் குறைந்தது.
சரி
எப்படியாவது நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்து விடுவோம் என்று எண்ணி, மறுபடியும்
குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தார். 96, 97, 98. குடம் ஊறினார்.
மீண்டும் ராஜ பதவிக்கான அறிகுறியே காணோம் என்று புலம்பினார்.
பொறுமையை
இழக்க ஆரம்பித்தார். 99வது குடமும் அபிஷேகமாகி விட்டது பலன் தெரியவில்லை. நூறாவது
குடம் தண்ணீர் கொண்டு வந்து, நூறு என்று சொல்லி குடத்தை பெருமாள் தலையில் போட்டு
உடைத்தார். உடனே, இவர் முன் பெருமாள் தோன்றி, பக்தா! நீ நூறு குடம் தண்ணீர்
அபிஷேகம் செய்தது குறித்து மகிழ்ந்தேன்; ஆனால், பொறுமையை இழந்து, நூறாவது குடத்தை
என் மேல் போட்டு உடைத்தது பெரிய அபசாரம்.
நூறாவது
குடத்து தண்ணீரையும் பொறுமையுடன் அபிஷேகம் செய்திருந்தால், உனக்கு ராஜ பதவி
கிடைக்க ஏற்பாடு செய்திருப்பேன். நீ, கடைசி நேரத்தில் பொறுமையை இழந்து, அபசாரம்
செய்து விட்டதால், பொறுமைக்கு அடையாளமாக, கழுதையாக ஏழு பிறவி எடுத்து, பின்னர்
மனித ஜென்மம் கிடைக்கும் போது, மீண்டும் எனக்கு நூறு குடம் தண்ணீர் அபிஷேகம்
செய்தால், ராஜ பதவி கிடைக்கும்! என்று கூறி மறைந்து விட்டார்.
தத்துவம் :
பொறுமை
என்பது வெற்றியைப் பெற்றுத்தரும் முக்கியமான குணம் ஆகும். ஒருவருக்கு எல்லாத்
திறமைகளும் இருந்து பொறுமை இல்லாவிட்டால் அவர் வெற்றி பெறுவது கடினம். பொறுமையுடன்
செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக