ஆயுள் ரேகை நம்முடைய ஆயுளைப் பற்றி தெரிந்துக்கொள்ள உதவுகிறது. மேலும், இதைக்கொண்டு நம்முடைய உடல் அமைப்பையும், பலத்தையும் மற்றும் உயர்வையும் தீர்மானிக்கலாம்.
ஆயுள் ரேகை என்பது ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலுக்கு நடுவில் இருந்து கீழ் நோக்கிச் சென்று மணிக்கட்டுடன் இணையும். உங்கள் ஆயுள் ரேகை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.....!
ஆயுள் ரேகை உடைபடாமல் சிவந்து காணப்பட்டால் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டை அடையாமல் பாதியில் நின்றால் மத்திம ஆயுளாகும். ஆயுள் ரேகையில் இருந்து கிளைகள் மேல் நோக்கிச் சென்றால் நன்மைகளையும், கீழ் நோக்கிச் சென்றால் ஓரளவு நன்மைகளையும் அடைவர்.
குறுக்கே சிறுரேகைகள் தென்பட்டால் நோய்களால் பாதிப்பு ஏற்படும். ஆயுள் ரேகை இரண்டு ரேகைகளாக ரயில் தண்டவாளம் போன்று இணையாக காணப்பட்டால் மகா அதிர்ஷ்டசாலிகளாகத் திகழ்வர்.
ஆயுள் ரேகையானது அதிகமாக விரிந்து காணப்பட்டால் அப்படிப்பட்ட கை அமைப்பினை உடையவர் மிகவும் முரட்டு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அத்துடன் உடல் பலம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
ஆயுள் ரேகை துவக்கத்தில் சங்கிலி கோர்த்தாற் போல இருந்து பின்னர் போக போக நிதானமாகவும், ஒழுங்காகவும் காணப்பட்டால் வாழ்க்கையில் ஒரு சில காலங்கள் வரை ஆரோக்கியத்தில் பலவித கோளாறுகளும், சில சங்கடங்களும் உண்டாகும். அதன் பின் நிவர்த்தியாகும்.
ஆயுள் ரேகை சங்கிலி கோர்த்தாற் போல இருந்து அப்படிப்பட்ட கை மிருதுவாக இருந்தால் இவர்கள் ஆரோக்கியத்தில் கோளாறு உள்ளது என்று பொருளாகும். இவர்கள் பலவீனமான மனம் உடையவர்களாகவும், மற்றவர்களை ஒருபோதும் நம்பாதவர்களாகவும் இருப்பார்கள். மேலும், மிகவும் சோர்ந்து போன உள்ளம் உடையவர்களாக இருப்பார்கள். உடலும் மெலிந்தே காணப்படும். இவர்களுக்கு வெகுவிரைவில் நரம்புத் தளர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக