தென்காசி, காசி விஸ்வநாதர் திருக்கோவில் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசி எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலம் உலகம்மன் கோவில் என்றும், தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
மூலவர் : விஸ்வநாதர்.
சுவாமி : அருள்மிகு காசிவிஸ்வநாதர்.
அம்பாள் : அருள்மிகு உலகம்மன்.
தீர்த்தம் : சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.
தலவிருட்சம் : செண்பக மரம்.
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்.
ஊர் : தென்காசி.
மாவட்டம் : திருநெல்வேலி.
தல வரலாறு :
சுமார் 700 வருடங்களுக்கு முன்பு தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் சிவ பெருமானை வழிபட காசிக்கு செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தான்.
மன்னனின் குலதெய்வமான முருகப்பெருமான் மன்னனுக்கு சக்தி வாய்ந்த அபூர்வ குளிகை ஒன்றைக் கொடுத்து வான் மார்க்கமாக காசி சென்று வழிபடச் செய்தார். இவ்வாறு காசிக்குச் சென்று தினமும் காசி விஸ்வநாதரை வழிபட இயலாததை எண்ணி, மன்னன் மனம் வருந்தினான்.
ஒருநாள் மன்னன் கனவில் தோன்றிய இறைவன், வடக்கே உள்ள காசிக்கு வருவதற்கு பதிலாக இவ்விடத்திலேயே தட்சிண(தென்) காசியில் கோவில் அமைத்து வழிபடும்படி கூறினார்.
நான் இருக்குமிடத்தை நீ காண உனக்கு எறும்புகள் சாரைசாரையாக ஊர்ந்து சென்று வழிகாட்டும் என்று கூறி மறைந்தார். மறுநாள் எறும்பு சாரைசாரையாக செல்லுமிடத்தை மன்னன் அடையாளம் கண்டு அங்கு சிவலிங்கமும், நந்தியும் இருப்பதைக் கண்டு வணங்கினான்.
அது சிற்றாற்றங்கரையில் செண்பக வனத்திற்கு வந்து சேர்ந்தது. அந்த இடத்தில் புற்றில் சுயம்புலிங்கம் கண்டு கோவில் கட்டி, கோபுரமும் கட்டி, தென்காசி நகரையும் நிர்மாணித்து தென்காசி கண்ட பாண்டியன் ஆனான்.
தல சிறப்பு :
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், இத்தலத்து இறைவனை வணங்கினால் வடகாசியில் உள்ள இறைவனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.
கோவில் மூலவரான காசி விஸ்வநாதரை ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்தே பார்க்கலாம். அந்த அளவிற்கு சுவாமி சன்னதி அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த கோவில் கோபுரத்தின் ஒன்பது நிலைகளிலிருந்தும் தென்காசியின் இயற்கை அழகை பார்க்க அகலமான பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பாதையில் நடந்து சென்றால் வான் வெளியில் வலம் வருவது போல் இருக்கும். கோபுரத்தின் 9வது நிலையில் இருந்தபடியே கோபுரத்தை சுற்றி வரும் பால்கனி வசதி உள்ளது.
மற்ற தலங்களில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் துர்க்கை இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
இந்திரன், மைநாகம், நாரதர், அகத்தியர், மிருகண்டு முனிவர், வாலி, கண்ம முனிவர் போன்றோர் வழிபட்ட தலம். நந்தியின் அவதார தலம் எனவும் போற்றப்படுகிறது.
பிராத்தனை :
இத்தலத்து இறைவனை வணங்கினால் வடகாசியில் உள்ள இறைவனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தல இறைவனை வழிபட்டால் மன நிம்மதி உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக