சனி, 25 ஜனவரி, 2020

கங்காதேவியின் நிபந்தனைகள்...!


ருநாள் பிரதீப மன்னன், சந்தனுவை அழைத்து, மகனே! முன்பு ஒருநாள் நான் கங்கை நதிக்கரையில் தியானித்துக் கொண்டிருந்தபோது, தேவலோகத்துப் பெண் ஒருவள், என் மருமகளாக விரும்புவதாகக் கூறினாள். அதனால் அவள் உன்னைப் பார்க்க வருவாள். அப்பொழுது அந்தப் பெண்ணை நீ யார்? என்று கேட்காமல் அப்பெண்ணை ஏற்றுக்கொள்! இது என் கட்டளை எனக் கூறினான். பிறகு சில நாட்கள் கழித்து பிரதீப மன்னன், தன் மகனான சந்தனுவிற்கு முடி சூட்டி நாட்டிற்கு அரசனாக்கிவிட்டு, காட்டுக்கு தவம் மேற்கொள்ளச் சென்றுவிட்டான். சந்தனுவிற்கு வேட்டையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். ஒருநாள் சந்தனு, காட்டில் வேட்டையாடிக் கொண்டிருக்கும்பொழுது, ஒரு அழகிய பெண் வருவதைப் பார்த்தான். இருவரும் ஒருவரையொருவர் பார்த்தனர். பார்த்த நொடியில் இருவரும் காதல் கொண்டனர்.

 பிறகு சந்தனு அப்பெண்ணை பார்த்து, பெண்ணே! உன்னைப் போன்ற அழகுடைய கன்னியை நான் இதுவரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை என்றான். மேலும் அப்பெண்ணிடம் சந்தனு, நான் இந்த பூவுலகில் மிகச்சிறந்த அரசன். உன்னை மணந்து கொள்ளும் தகுதி எனக்கு இருக்கிறது. ஆகையால் நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது. நீ என்னைத் திருமணம் செய்து கொள்வாயா? என்று தயங்கியபடி கேட்டான். சந்தனு கூறிய வார்த்தைகளைக் கேட்டு, அப்பெண் (கங்காதேவி) வெட்கப்பட்டு தலை குனிந்தபடி மௌனமாக நின்று கொண்டிருந்தாள். கங்காதேவியின் மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பதை உணர்ந்த சந்தனு, பெண்ணே! உன் மவுனத்தைக் கலைத்து நேரடியாக பதில் சொல், என்றான்.

 அப்பெண் (கங்காதேவி) சந்தனுவிடம், மன்னா! உங்களைத் திருமணம் செய்து கொள்ள நான் சம்மதிக்கிறேன். ஆனால், இதற்கு சில நிபந்தனைகள் உண்டு. அதற்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும் என்றாள். என்னுடைய நிபந்தனைகளுக்கு நீங்கள் சம்மதித்தால், நம் இருவருக்குமான திருமண ஏற்பாடுகளைச் செய்யலாம் என்றாள். கங்கா தேவியின் அழகில் மயங்கிய சந்தனு, கங்காதேவி விதித்த நிபந்தனைகளை கேட்டான். மன்னா! என்னைப் பற்றி தாங்கள் எதுவும் கேட்க கூடாது. நான் என்ன செய்தாலும் நீங்கள் என்னைக் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது. நான் உங்களின் மனம் கஷ்டப்படும்படி நடந்து கொண்டாலும், என்னிடம் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது. உலகமே வெறுக்கும் காரியத்தைச் செய்தாலும், ஏன் இப்படி செய்தாய்? என்று கேள்வி கேட்கக்கூடாது என்று நிபந்தனை விதித்தாள்.

இந்த நிபந்தனைகளை கேட்ட சந்தனு மன்னனுக்கு, கங்காதேவி கூறிய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் இருந்தது. ஆனால் கங்காதேவியின் மேல் கொண்ட ஆசையினால், அந்த நிபந்தனைகளுக்கு சரியென்று சம்மதம் தெரிவித்தான். அதன்பிறகு ஒரு நன்னாளில் சந்தனுவிற்கும், கங்காதேவிக்கும் திருமணம் நடந்தது. சந்தனு, கங்காதேவியிடம் இன்பமாக வாழ்ந்து வந்தான். பல ஆண்டுகள் கழித்து, கங்காதேவி! ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். பெற்றெடுத்த உடனே, அக்குழந்தையை கங்கையில் வீசினாள். அதைக் கண்டு மன்னன் அதிர்ச்சியடைந்தான். அப்போதுதான் திருமணத்திற்கு முன் கங்காதேவி விதித்த நிபந்தனைகள் சந்தனுவிற்கு நினைவுக்கு வந்தது. அதனால் ஏதும் பேசாமல் சூழ்நிலைக் கைதியாக இருந்தான். இதேப்போல் தொடர்ந்து ஏழு குழந்தைகளை கங்கா தேவி, கங்கையில் வீசினாள்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்