கையில் உள்ள முக்கிய ரேகைகளில் ஒன்று தான் இதய ரேகை. இந்த ரேகை சுண்டு விரலின் கீழே ஆரம்பமாகி நடுவிரல் அல்லது ஆள்காட்டி விரலை நோக்கி சென்றவாறு இருக்கும்.
இதய ரேகை என்பது பெரும்பாலும் குரு மேட்டில் இருந்து உற்பத்தியாகி புதன் மேட்டில் சென்று நிறைவடையும். ஒரு சிலருக்கு குரு மேட்டுக்கும், சனி மேட்டுக்கும் இடையில் ஆரம்பமாகலாம். இந்த இதய ரேகையின் மூலம் ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்று அறிந்து கொள்ளலாம்.
இதய ரேகையானது சனி மேட்டுக்கு நடுவில் இருந்து ஆரம்பிக்குமானால் இவர்கள் எப்போதும் கள்ளங்கபடம் உடையவர்களாக விளங்குவார்கள். சுயநலவாதியாக விளங்குவார்கள்.
இதய ரேகையானது சனி மேட்டுக்கு நடுவில் ஆரம்பமாகி இருந்தது என்றாலோ, அந்த ரேகையில் இருந்து ஒரு கிளை ரேகை கிளம்பி குருமேட்டினை அடைந்து இருந்தாலோ இவர்கள் நீதிக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். நேர்மையாக இருப்பார்கள். உதவி செய்தவர்களுக்கு பிரதி உபகாரம் செய்ய விரும்புவார்கள்.
இதய ரேகையானது குரு மேட்டின் கீழ் இருந்து ஆரம்பமாகி, புதன் மேட்டின் கடைசிப் பாகம் வரை முடிந்திருந்தது என்றால் இவர்கள் உயர்வான நல்ல எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கென்று சரியான லட்சியம், குறிக்கோள் இருக்கும். ஒரு காரியத்தை எடுத்தால் அதை முடிக்காமல் விடமாட்டார்கள்.
இதய ரேகையானது சனி மேட்டுக்கு கீழ் இருந்து ஆரம்பமாகி அந்த ரேகையில் இருந்து ஒரு கிளையானது பிரிந்து சனி, குரு மேட்டுக்கு இடையில் சென்றிருக்குமேயானால் இவர்கள் தாம் விரும்பியதை அடைபவர்களாக இருப்பார்கள்.
இதய ரேகையானது குருமேட்டில் இருந்து புதன் மேடு வரை மிக நெருக்கமாக ஒட்டிச் செல்லுமாயின் இவர்கள் பொறாமைக் குணத்தை உடையவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் இவர்கள் மிகவும் அவசரக்காரர்களாக இருப்பார்கள். அத்துடன் மூர்க்கத்தனம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.
இதய ரேகையின் ஒரு கிளை குரு மேட்டுக்கும், மறு கிளை சனி மேட்டுக்கும் சென்றிருக்குமேயானால் இவர்கள் பெரும் நியாயவாதியாக இருப்பார்கள். சுயசிந்தனையாளர்கள். தம்முடைய முயற்சியினால் அதிக பொருளை ஈட்டுவார்கள். யாராவது இவருக்கு தீமை செய்தால் அதை மறக்கவே மாட்டார்கள்.
இதய ரேகையுடன் சூரிய மேட்டில் இருந்து ஒரு ரேகை தோன்றி இணைந்தால் இவர்கள் மிகவும் நாணயத்துடன் திகழ்வார்கள். நேர்மை இவர்களின் மூச்சாக இருக்கும். பேச்சுத் திறமையுடன் இருப்பர். அத்துடன் இவர்களுடைய செயல்கள் எப்போதும் பிறரை கவர்வதாக இருக்கும். இவர்களின் புகழ் மரணத்திற்கு பின்னாலும் நிலைத்திருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக