Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 31 ஜனவரி, 2020

டி.எம்.கிருஷ்ணா நூல் வெளியீடு இடம் மாற்றம்: சாயம் வெளுக்கிறதா ‘கலாஷேத்ரா’?

பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணாவின் நூல் வெளியீட்டு விழா நடத்த அனுமதி வழங்கியிருந்ததை கலாஷேத்ரா ரத்து செய்துள்ளதைத் தொடர்ந்து மாற்று இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடகராக மட்டுமல்லாமல் சமூக செயற்பாட்டாளராகவும் அறியப்படுகிறார் டி.எம்.கிருஷ்ணா. மக்களைப் பாதிக்கக்கூடிய அரசின் திட்டங்களுக்கு எதிராக தனது கலையைப் பயன்படுத்துபவர்களில் டி.எம்.கிருஷ்ணா முக்கியமானவர்.

இவர் தற்போது எழுதியுள்ள நூல், ‘செபாஸ்டியன் & சன்ஸ்’. மிருதங்கம் செய்பவர்களின் வரலாறாக இந்த நூல் உருவாகியுள்ளது. மிருதங்கம் மாட்டுத் தோலால் செய்யப்படுகிறது. அதை உபயோகிக்கும் இசைக் கலைஞர்கள் மாட்டை புனிதமாக கருதுகிறார்கள். இந்த முரண் குறித்தும் இந்தப் புத்தகம் பேசுகிறது.

இதன் நூல் வெளியீட்டு விழா பிப்ரவரி 2ஆம் தேதி திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா மையத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வரலாற்று ஆய்வாளர் ராஜ்மோகன் காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் வெளியிடுவதாக அழைப்பிதழ்கள் விநியோகிக்கப்பட்டன.

 இந்நிலையில் நேற்று கலாஷேத்ரா மையம் நூல் வெளியீட்டிற்கான அனுமதியை ரத்து செய்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலாஷேத்ரா அரசு நிறுவனமாக இருப்பதால் அரசியல், கலாச்சாரம், சமூக ரீதியாக ஒற்றுமையைக் குலைக்கும் எந்த நிகழ்வையும் இங்கே அனுமதிக்க முடியாது.

இன்றைய செய்தித் தாள்களில் வெளிவந்த புத்தக மதிப்புரைகளில் சில பகுதிகளைப் பார்க்கும்போது இந்தப் புத்தகம் சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தொட்டுச் செல்வது தெரிகிறது. மேலும் நிறைய அரசியல் கருத்துகளும் உள்ளன. புத்தக வெளியீட்டு விழாவிற்காக அரங்கத்தை அளிக்க ஒப்புக்கொண்டபோது, இந்த விவகாரத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் குறித்து எங்களுக்குத் தெரியாது. ஆகையால் புத்தக வெளியீட்டு விழாவிற்காக எங்கள் அரங்கத்தை பயன்படுத்திக்கொள்ள அளிக்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
கலாஷேத்ராவின் இந்த ‘திடீர்’ அனுமதி ரத்திற்கும், அதற்கான விளக்க அறிக்கைக்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இது குறித்து மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், “கலாஷேத்ராவின் முக்கியப் பணி கலையையும், கலாச்சாரத்தையும் ஊக்கப்படுத்துவதே ஆகும். இந்த புத்தகம் மிருதங்கம் செய்யும் தலித் மக்களின் வாழ்க்கையைப் பற்றியும் ஒரு செவ்வியல் கலைக்கு அவர்கள் அளிக்கும் பங்களிப்பு பற்றியும் பேசுகிறது. டிஎம் கிருஷ்ணா அவர்களது பங்களிப்பை ஒப்புக்கொள்கிறார். சமூக, அரசியல், கலாச்சார ரீதியாக இந்த புத்தகம் எந்த வகையில் ஒற்றுமையை குலைக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த நிகழ்வை ரத்து செய்ததன் மூலம் கலாஷேத்ரா தனது சமூக வண்ணத்தைக் காட்டிக்கொண்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

கலாஷேத்ரா அனுமதியை ரத்து செய்தாலும் திட்டமிட்டபடி பிப்ரவரி 2ஆம் தேதி, மாலை 6.45 மணிக்கு புத்தக வெளியீடு மாற்று இடத்தில் நடைபெறும் என டி.எம்.கிருஷ்ணா அறிவித்துள்ளார்.

அந்தவகையில் தரமணியில் உள்ள ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் வளாகத்தில் எம்.எஸ்.சுப்பு லட்சுமி அரங்கத்தில் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக