தட்சன், சூரியபகவான் மற்றும் அக்னிதேவன் ஆகிய மூவரும் சாப விமோச்சனம் பெற்ற தலமாக விளங்குகிறது நாகை மாவட்டம், பொன்னூர் கிராமத்தில் இருக்கும் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்.
மூலவர் - ஆபத்சகாயேஸ்வரர், இலிகுசாரண்யேஸ்வரர், அக்னீசுவரர், பாண்டதவேசுவரர், இரதீசுவரர்.
அம்மன் - பெரியநாயகி, பிருகந்நாயகி.
தல விருட்சம் - எலுமிச்சை.
தீர்த்தம் - அக்னி, வருண தீர்த்தம்.
ஆகமம் - காமீகம்.
பழமை - 1000 வருடங்களுக்கு முன்.
புராணப் பெயர் - திருஅன்னியூர்.
ஊர் - பொன்னூர்.
மாவட்டம் - நாகப்பட்டினம்.
தல வரலாறு :
பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன் எனும் அசுரன், தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அசுரர்களிடம் இருந்து தங்களை காத்தருளும் படி சிவனை வேண்டச் சென்றனர்.
அச்சமயம் சிவபெருமான் யோகத்தில் இருந்ததால் தேவர்கள் மன்மதனின் உதவியால் சிவபெருமானின் யோகத்தை களைத்தனர். கோபம் கொண்ட சிவபெருமான், மன்மதனை எரித்து விட்டார். மனம் கலங்கிய மன்மதனின் மனைவி ரதிதேவி, சிவபெருமானிடம் தன் கணவனை மீட்டுத் தரும்படி வேண்டினாள்.
சிவபெருமான் உரிய காலத்தில் மன்மதன் உயிர்பெற்று வருவான் என்று கூறினார்.
கணவன் விரைவில் உயிர் பெற்று வரவேண்டும் என்பதற்காக இத்தலத்தில் சிவபெருமானை எண்ணி தவமிருந்து வழிபட்டாள் ரதிதேவி. மன்மதன் சிவபெருமான் அருளால் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி மன்மதனுக்கு மீண்டும் வாழ்வு அளித்தார்.
பிறகு, இத்தல இறைவனை மன்மதன் ரதியுடன் சேர்ந்து வழிபட்டான். இருவருக்கும் காட்சி தந்த சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
தல சிறப்பு :
இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், இவரது இன்னொரு பெயர் அக்னிபுரீஸ்வரர் ஆகும். மேலும் இங்கு ஆதிசங்கரருக்கும் சன்னிதி உள்ளது.
வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியர், காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பம்சம்.
இத்தல சுவாமியை வருணன், அரிச்சந்திரனும் வழிபட்டுள்ளனர்.
பங்குனி மாதத்தில் 5 நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது.
சனி தோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.
பிரகாரத்தில் சனீஸ்வரர், சூரியன், பைரவர் மூவரும் அருகருகில் இருக்கின்றனர். தந்தையான சூரியனுக்கு அருகில் இருந்தாலும், இங்கு சனி, சுபசனீஸ்வரராகவே இருக்கிறார்.
பிராத்தனை :
ஆடிப்பூரம், ஆவணி மூலம் நட்சத்திரத்தன்று திருமணத்தடை உள்ள பெண்கள், அம்பாளுக்கு வளையல் கட்டி பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். இதனால், விரைவில் திருமணம் நடக்கவும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்கவும், மேலும் மனக்குறைகள் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். மேலும் முன்னோர்களுக்கு ஆத்மசாந்தி பூஜை செய்பவர்கள் இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக