Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 9 ஜனவரி, 2020

முதலாளியின் செயல்..!

 Image result for முதலாளியின் செயல்..!"

  முருகன் என்பவர் தன் ஊரில் யாரும் அவருக்கு ஆதரவாக இல்லாததால் ஊரை விட்டு வேறு ஊருக்கு வந்து ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வேலையில் சேரும் போதே கடையின் முதலாளி ஒரு நிபந்தனையுடன்தான் சேர்த்துக் கொண்டார். என்னவென்றால் அத்தியாவசியம் தவிர வேறு எந்த செலவுக்கும் அவர் காசு கேட்கக்கூடாது என கண்டிப்புடன் நிபந்தனை விதித்தார். முருகனுக்கு தேவையான நேரத்தில் அவரே மொத்தமாக கொடுப்பேன் என்றும் கூறினார். பசியால் வாடி வதங்கியிருந்த முருகனுக்கு அப்பொழுது உணவு மட்டுமே தேவையாயிருந்தது. அதனால் முருகன் சரியென்று ஒப்புக்கொண்டார்.

அதற்கு பிறகு அவர் தன்னை முழுமையாக வேலையில் ஈடுபடுத்திக் கொண்டு கடுமையாக உழைத்தார். இடையில் ஊருக்கு போகவேண்டும் என்று முருகன் பலமுறை பணம் கேட்டும் முதலாளி தரவில்லை. ஒருவேளை சாப்பாடு போடக்கூட வழியின்றி உன்னை விரட்டியடித்த ஊருக்கு நீ ஏன் செல்கிறாய் என்று அவரை அடக்கி அமைதியாக இருக்க வைத்தார்.

சில வருடங்கள் ஓடியது. முருகனுக்கும் முதலாளியின் அன்பும், கண்டிப்பும் பிடித்துப்போனது. எதைப்பற்றியும் கேட்பதில்லை. சில விடுமுறை தினங்களில், முதலாளிக்கு தெரியாமல் கடையில் இருந்த மற்ற ஊழியர்கள் முருகனை பெண் பார்க்க அழைத்து சென்றார்கள்.

ஓட்டல் கடையில் வேலை செய்பவருக்கு பெண்ணை தர முடியாது என்று பல இடங்களில் மறுத்துவிட்டனர். அதை எல்லாம் முதலாளி கண்டும் காணாமலும் இருந்தார். அவனை ஏதும் கேட்கவும் இல்லை. அவன் மேல் பரிதாபப்படவும் இல்லை. முருகன் வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் ஆனது. ஒரு நாள் முதலாளி முருகனை அழைத்து, அதிக ஓட்டல் இல்லாத, ஆனால் பரபரப்பு நிறைந்த ஒரு இடத்திற்குக் கூட்டிச் சென்று புதிய கடையை பார்த்தார்.

முருகா இந்த இடத்தில் கடையை வைத்தால் ஓடுமா என்று கேட்டார். முருகனும் ஆமாங்க முதலாளி இது நல்ல இடம் இங்கு நல்ல வியாபாரம் ஆகும் என்றார். உடனே முருகனிடம் பணம் கொடுத்து அந்த கடைக்கு தேவையான எல்லாத் தட்டு முட்டு சாமான்களையும் வாங்குவதற்கு அனுப்பி வைத்தார். முருகனோடு இணக்கமாக இருந்த சக தோழர்களையும் பணிக்கு ஒத்தாசையாக இருக்க சொன்னார்.

மேலும், புதுக்கடை ஆரம்பமாக நாள் குறிக்கப்பட்டது. முதலாளி அதற்கு ஐந்து நாள் முன்பு முருகனை அழைத்து கடை வேலை எல்லாம் சரியாக செல்கிறதா என கேட்டார். பின்னர் கடை சாவியை முருகனிடம் கொடுத்து, நீதான் முருகா கடைக்கு சொந்தக்காரன் என்றார். அதைக்கேட்ட முருகன் முதலாளி என்ன இது திடீரென்று இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டான்.

அதற்கு முதலாளி உன்னுடைய பணம்தான் முருகா. அதில் எனது பங்கும் கொஞ்சம் இருக்கிறது. அது உன்மேல் நான் வைத்திருக்கும் அன்பின் சிறிது சன்மானம் தான். நீ உன்னுடைய உறவுக்காரர்களை கடை திறப்பு விழாவிற்கு தற்பொழுது அழைத்து உபசரி. பிறகு தானாக எல்லாம் நடக்கும் என்றார். அப்படியே கடை திறப்பு விழாவும் தடபுடலாக இருந்தது. சாப்பாடு போடாமல் விரட்டியடித்த உறவினர்கள் கடை அருமை, சாப்பாடும் அருமை என சொன்னார்கள். பிறகு முதலாளியின் தலைமையில் முருகன் மாமா பெண்ணை திருமணம் செய்து மிகவும் வசதியாக வாழ்ந்து வந்தான்.

அந்த முதலாளி முருகனிடம் சொன்ன ஒரு தாரக மந்திரம் உனக்காக மட்டும் வாழாதே! உன்னை நம்பி இருக்கும் அனைவரையும் வாழ வை! என்பதை இன்றுவரை முருகன் கடைபிடித்து வருகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக