சுக்கிராச்சாரியார் ததீசி முனிவரின் உடலில் ஏற்பட்ட காயங்களை தன்னுடைய யோக சக்தியினால் குணமாக்கினார். பின்பு, சுக்கிராச்சாரியாரோ முனிவரிடம் தாங்கள் கேட்கும் வலிமையையும், சக்தியையும் அளிக்க வல்லவன் நானல்ல. இச்சக்தியினை அளிக்க வல்லவர் ஒருவர் மட்டுமே.
இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரமான மிருத சஞ்சீவினியை உபதேசித்த, இவ்வுலகத்தில் அனைத்துமாய் உள்ள பரம்பொருளான சிவபெருமான் ஒருவரால் மட்டுமே நீங்கள் வேண்டிய சக்தியையும், வலிமையையும் அளிக்க இயலும். ஆகவே, சிவபெருமானை நோக்கி தவம் புரிந்து அவருடைய அருளை பெறுக என்று கூறி அவ்விடம் விட்டு மறைந்தார் சுக்கிராச்சாரியார்.
சுக்கிராச்சாரியாரின் ஆலோசனைப்படியே ததீசி முனிவர் சர்வேஸ்வரரான சிவபெருமானை நோக்கி தவம் புரிய தொடங்கினார். பின்பு, சிவபெருமானை நோக்கி உணவின்றி மிகவும் கடுந்தவம் புரிந்தார். முனிவரின் தவத்தால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் ததீசி முனிவருக்கு காட்சி அளித்தார்.
சர்வேஸ்வரரான சிவபெருமானை ததீசி முனிவர் பணிந்து வணங்கினார். சிவபெருமான், ததீசி முனிவரே... உம்முடைய தவத்தினால் மனம் மகிழ்ந்தோம். எம்மை எண்ணி தவமிருக்க காரணம் என்ன? என்று அனைத்தும் அறிந்த சர்வேஸ்வரன் வினவினார்.
பின்பு, ததீசி முனிவர் எம்பெருமானே... மானிடர்கள் வாழும் இந்த பூவுலகில் தவம் புரியும் முனிவர்கள் பெரியவரா? அல்லது நாட்டை ஆளும் அரசர்கள் பெரியவர்களா? என்ற விவாதத்தில் நானும், சுபனும் ஈடுபட்டோம். அவ்விவாதத்தில் நான் அவருக்கு புரியும் விதத்தில் எடுத்துக்கூற அதில் சினம் கொண்ட சுபன் என்னை வச்சிராயுதத்தால் தாக்கி என்னை நிலை குலையச் செய்தான்.
அதனால் நான் மிகவும் அவமானம் அடைந்துள்ளேன் என்றும், அதனால் தாங்கள் எனக்கு வச்சிராயுதம் போன்ற எந்த ஆயுதங்களாலும், எந்தவிதமான படை பலத்தாலும் துன்பம் நேராத உடல் வலிமையை எனக்கு தாங்கள் தந்தருள வேண்டுகிறேன் என்றும் வேண்டினார்.
எம்பெருமானான சிவபெருமானும் முனிவர் வேண்டிய வரத்தினை அருளி அவ்விடம் விட்டு மறைந்தார். ததீசி முனிவரின் இந்த வரமே பின்னொரு காலத்தில் மாபெரும் பலம் கொண்ட ஆயுதம் உருவாக காரணமாகும் என்பதை அறிந்து அவர் வேண்டிய வரத்தினை அளித்தார் சிவபெருமான்.
சிவபெருமானிடம் தான் விரும்பிய வரத்தினை பெற்ற ததீசி முனிவர் சுபனின் அரண்மனையை அடைந்தார். சுபனை கண்டதும் தான் அடைந்த அவமானத்தால் அவரின் குரலானது அரண்மனையில் ஒரு சிங்கத்தின் கர்ஜனை போல் எட்டுத் திக்குகளிலும் பரவியது. அடே மூடனே, வச்சிராயுதம் இருக்கும் அகந்தையில் என்னை தாக்கினாய் அல்லவா? இப்பொழுது உன்னுடைய வீரத்தை என்னிடம் காட்டு என்று அனல் சிவந்த கண்களுடன் ஒரு வனத்தின் ராஜாவைப் போன்று கர்ஜித்தார்.
ததீசி முனிவரின் கோபமான பேச்சுகளை சற்றும் எதிர்பாராத சுபன் மிகுந்த கோபத்துடன் நீர் அன்று புரிந்த செயலுக்கான தண்டனையை மட்டுமே நான் அளித்தேன். ஆனால் இன்றோ... நீ உன்னுடைய எல்லையை கடந்து உனது அழிவிற்கான பாதையை உருவாக்கி கொண்டாய். பார் போற்றும் வேந்தனான என்னிடம், எதுவும் அற்ற முனிவன் என்னை இகழ்வதா...? இக்கணமே உனது அழிவானது உறுதியானது என்று கூறி தன்னுடைய மனதில் வச்சிராயுதத்தை எண்ணிய நொடிப்பொழுதில் கரங்களில் வச்சிராயுதம் தோன்றியது.
வேந்தனான சுபன், நீர் என்னுடைய தோழனாக இருந்த காரணத்தினால் அன்று உயிர் பிழைத்தாய். ஆனால் இன்றோ உனது செயலுக்கான தண்டனையை நான் உனக்கு அளிப்பேன் என்று கூறி வச்சிராயுதத்தை மிகுந்த ஆவேசத்துடன் முனிவரின் மீது செலுத்தினார். ஆனால், நிகழ்ந்ததோ வேறு.
சுபனின் கரங்களில் இருந்து முனிவரை நோக்கி மிகுந்த ஒளியுடனும் அதாவது மின்னலை போன்று தாக்கிய வச்சிராயுதம் முனிவரின் உடல் பலத்தால் அதாவது சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் வச்சிராயுதமானது இமைப்பொழுதில் வெடித்து நொறுங்கியது.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத சுபனுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், எவராலும் அழிக்க இயலாத பலம் வாய்ந்த வச்சிராயுதமானது முனிவரின் உடலில் பட்டதும் சிறு சிறு துண்டுகளாக சிதறிப்போனதை கண்டு ஆச்சரியம் அடைந்தார். அதே சமயத்தில் வேதனையையும் கொண்டார் சுபன்.
இதைக் கண்டதும் ததீசி முனிவர் இவ்வளவு தான் உன்னுடைய பலமா? என வாகை சூட்டிய வேந்தனை போன்று மனதில் இருந்த கவலைகள் எல்லாம் நீங்கி சுபனைக் கண்டு ஏளனமாக சிரித்து விட்டு ததீசி முனிவர் தனது இருப்பிடத்தை நோக்கி புறப்பட்டார்.
சிறிது தூரம் சென்றதும் கவலை வேண்டாம்.. நான் என்னுடைய இருப்பிடத்தில் தான் இருப்பேன். எப்போது வேண்டுமாயினும் நீ உன்னுடைய படை பலத்துடன் வந்து என்னை சந்திக்கலாம் என்று இன்முகத்துடன் வெற்றி களிப்பில் கூறி தனது இருப்பிடத்தை நோக்கி பயணத்தை தொடங்கினார்.
முனிவரின் இச்செயலானது சுபனின் கோபத்தை மென்மேலும் அதிகப்படுத்தின. ஆனால், கோபத்தில் எடுக்கும் முடிவானது சரியாக இருக்காது என்று அறிந்த சுபன், ததீசி முனிவருக்கு அவருடைய வழியிலே சென்று பாடம் புகட்ட வேண்டும் என எண்ணினார். இதை மனதில் கொண்டு வைகுந்த நாதனாகிய திருமாலை நோக்கி கடுந்தவம் செய்தார் சுபன்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக