பிரபஞ்சத்தின் காப்பாளரான திருமாலும் சுபனின் தவத்தால் மகிழ்ந்து அவருக்கு காட்சி அளித்தார். சுபனின் முன் தோன்றிய திருமால் உன் தவத்தால் மனம் மகிழ்ந்தோம்... வேண்டும் வரத்தினை கேட்பாயாக.. என்று கூறினார்.
சுபனும் திருமாலை மிகவும் பக்தியுடன் வணங்கி தனது ராஜ்ஜியத்தில் வாழ்ந்து வந்த முனிவரான ததீசிக்கும், தனக்கும் ஏற்பட்ட வாதத்தில் அம்முனிவர் என்னை மிகவும் அவமானப்படுத்தி விட்டார். மேலும், என்னுடைய ஆயுதமான வச்சிராயுதத்தையும் அழித்து விட்டார். இனி அவரை வெல்ல உதவக்கூடிய வலிமை வாய்ந்த ஆயுதத்தை தாங்கள் எனக்கு அளிக்க வேண்டும் என வேண்டி நின்றார் சுபன்.
திருமாலோ எம்பெருமானான சிவபெருமானால் அளிக்கப்பட்ட வரத்தைக் கொண்ட ததீசி முனிவரை உன்னால் எதுவும் செய்ய இயலாது என்று கூறினார். மேலும், வேறு வரத்தினை கேட்டு பெறுவீராக என்று கூறினார்.
திருமாலின் பதிலை சற்றும் எதிர்பாராத சுபன் தனக்கு வேறு வரங்கள் யாவும் வேண்டாம் என்றும், ததீசி முனிவர் தான் செய்த செயலுக்கு என்னிடம் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார். பாற்கடலில் வீற்றிருப்பவரான திருமால் பக்தரின் வேண்டுதலுக்கு ஏற்ப ததீசி முனிவரை உன்னிடம் அமைதியாக செல்லுமாறு கூறுகிறேன் என்று கூறி அவ்விடம் விட்டு மறைந்தார்.
பின்பு, சுபனும் ததீசி முனிவரின் வருகையை எதிர்நோக்கி அரண்மனையில் காத்திருக்க தொடங்கினார். தனது பக்தரின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு பாற்கடலில் பள்ளிக்கொண்ட திருமால் பிராமணர் உருவம் தரித்து எம்பெருமானின் பக்தனான ததீசி முனிவரை காண அவருடைய இருப்பிடம் நோக்கி சென்றார்.
சிவபெருமானை வழிபட்டு கொண்டிருந்த ததீசி முனிவரை அந்தணர் உருவத்தில் இருந்த திருமால் கண்டு என் வாழ்நாளில் என்ன புண்ணியம் செய்தேனோ..? நான் உங்களை காண நேர்ந்தது. இந்த சந்திப்பால் மிக்க பெருமையையும், மகிழ்ச்சியையும் அடைவதாக கூறினார். மாயைகளுக்கு அப்பாற்பட்ட சிவ சிந்தனை கொண்ட ததீசி முனிவர் அந்தணர் உருவத்தில் இருப்பவர் யார் என்பதை அறிந்து கொண்டார்.
பின்பு, தனது இருப்பிடத்திற்கு வருகை தந்த அந்தணரை வணங்கி பிரபஞ்சத்தில் உள்ள உயிர்களை காப்பவரும், செல்வ மகளை தன்னருகில் கொண்டு பாற்கடலில் வீற்றிருப்பவருமான திருமால் தனது பக்தனுக்கு அருள் புரிவதற்காக வந்துள்ளதை அறிவோம் என்று கூறினார். முனிவரின் கூற்றுக்களை கேட்ட திருமால் பின்பு தனது சுயரூபத்துடன் அவர் முன்னே தோன்றினார்.
அந்தணரின் சுய உருவத்தைக் கண்ட ததீசி முனிவரும் திருமாலை மிகுந்த பக்தியுடன் வணங்கினார். பின்பு திருமால், ததீசி முனிவரிடம் சிவபெருமானின் மீது மிகுந்த பக்தியும், அன்பும் கொண்ட முனிவரே!! என் மீது அன்பும், பக்தியும் கொண்ட சுபனுடன் ஏன் இந்த பகை? சுபனும், நீங்களும் பலம் வாய்ந்தவர்கள். எனவே, நீங்கள் இருவரும் ஒன்றிணைந்து இருப்பதே நல்லதாகும் என்று கூறினார்.
பரந்தாமனின் கூற்றுக்களைக் கேட்ட முனிவர்.. சுபனுடன் எனக்கு எந்த பகையும் இல்லை. ஆனால், சுபனோ இறைவனிடத்தில் செலுத்தும் பக்தியை காட்டிலும் இந்த உலகில் நிரந்தரமில்லா ஆட்சி பலமும், செல்வ வளமும் உயர்ந்தது என்று கூறியதை என்னால் ஏற்க இயலாது என்றும், இதனால் எவரிடத்திலும் பகை உண்டானாலும் அதை எதிர்த்து போராட தயராக உள்ளேன் என்றும் கூறினார்.
முனிவரின் இந்த பதிலானது நாராயணனின் கோபத்தை அதிகப்படுத்தியது. பரந்தாமனான என்னிடமே நீர் இவ்வளவு அகந்தையுடன் பேசுகின்றாய் என்றால் உன்னுடைய வேந்தனான சுபனிடம் எவ்விதம் அகங்காரத்துடன் பேசி இருப்பாய்? உன்னுடைய அகங்காரத்திற்கு உண்டான தண்டனையை அளித்து உன்னை தண்டித்தே ஆக வேண்டும் என கூறியப்படி தனது கரங்களில் இருந்த சக்கராயுதத்தை அதிவேகத்துடன் ததீசி முனிவரை நோக்கி ஏவினார்.
சூரியனிடமிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களை போலவும், அதனிடத்தில் கொண்ட வெளிச்சத்தை போலவும் பலகோடி பிரகாசத்துடன் முனிவரை நோக்கி சக்கராயுதம் வந்துக் கொண்டிருந்தது. தன்னை நோக்கி வரும் சக்கராயுதத்தை கண்டு எவ்விதமான அச்சமுமின்றி மனதில் சிவபெருமானின் திருநாமத்தை எண்ணியவாறு நின்றுக் கொண்டிருந்தார் ததீசி முனிவர்.
ததீசி முனிவரின் அருகில் சென்ற சக்கராயுதம் அவரை வதம் செய்வதை தவிர்த்து அவரை மும்முறை வலம் வந்து பின்னர் திருமாலிடமே சென்றது. ததீசி முனிவரோ பரந்தாமா!!... இந்த சக்கராயுதம் சிவபெருமானின் அருளைப்பெற்ற, எம்பெருமானின் சிந்தனை கொண்ட பக்தர்களை என்ன செய்ய இயலும் என்று இருமாப்புடனும், ஏளனமாகவும் திருமாலை நோக்கி கூறினார்.
தனது சக்கராயுதம் முனிவரிடம் பலமற்று போனதைக் கண்டும், முனிவர் ஏளனமாக பேசியதும் திருமாலின் கோபத்தை அதிகப்படுத்தின. எனவே, மாயைகள் பல புரிந்து மாயக்கலையில் உன்னதவரான திருமால் முனிவரின்மீது கோபம் கொண்டு முனிவரை அழிக்க ஆயத்தமானார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக