திட்டத்துய்மன், சுயம்வரத்திற்கான போட்டியின் விளக்கத்தை நான் உங்களுக்கு கூறுகிறேன். அரசர்களே! இங்கு வில்லும் அம்பும் வைக்கப்பட்டுள்ளது. துவாரத்துடன் கூடிய சக்கரம் மேலே சுழன்றுக் கொண்டிருக்கிறது. அதற்கும் மேலே மீன் வடிவத்தில் ஒரு இலக்கு இருக்கிறது. அதன் நிழல் கீழே உள்ள தண்ணீரில் உள்ளது. இந்த நிழலைப் பார்த்தவாறு, மேலே உள்ள மீன் இலக்கை சுழலும் சக்கரத்தின் துவாரம் வழியே அம்பை செலுத்தி வீழ்த்த வேண்டும். சரியாக யார் வீழ்த்துகிறார்களோ அவர்களுக்கே திரௌபதி மாலை சூடுவாள் என்றான். அங்கு கூடியிருந்த மன்னர்கள் திரௌபதி தனக்கு தான் என்று கர்வம் கொண்டிருந்தனர்.
ஒவ்வொருவராக சென்று போட்டியில் கலந்து கொண்டனர். ஆனால் அவர்களால் சரியான இலக்கை குறி வைக்க முடியாமல் போனது. சில மன்னர்கள் தலைகுனிவுடன் திரும்பி வந்தனர். துரியோதனனும் சென்றான். அவனும் தோல்வியுடன் திரும்பி வந்தான். துரியோதனனின் தம்பிமார்களும் சென்றனர். அவர்களும் தோல்வியை அடைந்தனர். இவ்வாறு ஜராசந்தன், சிசுபாலன், சல்லியன் முதலானோர் போட்டியில் கலந்துக் கொண்டு தோல்வியுடன் திரும்பிச் சென்றனர். கடைசியில் கர்ணன் போட்டியில் கலந்து கொள்ள வந்தான். கர்ணன் வில்வித்தையில் சிறந்தவன் என்பதால் நிச்சயம் இவன் வெற்றி பெற்று விடுவான் என அர்ஜுனனுக்கும், கிருஷ்ணனுக்கும் தெரிந்தது. திரௌபதி, ஒருவேளை கர்ணன் இலக்கை சரியாக வைத்து வென்று விட்டால் அர்ஜூனனை தன்னால் திருமணம் செய்யாமல் போய்விடும் என நினைத்தாள்.
கர்ணன வில்லை கையில் எடுக்கும் போது, என்னால் ஒரு சூத்திரனை திருமணம் செய்துக் கொள்ள முடியாது. இவர் அங்க நாட்டின் அரசனாக இருக்கலாம். ஆனால் இவர் பிறப்பால் ஒரு சூத்திரன். சூத்திரன் இப்போட்டியில் கலந்து கொள்ள முடியாது. வேறு எவரேனும் இருந்தால் கலந்துக் கொள்ளலாம் என்றாள். திரௌபதியின் பேச்சு கர்ணனுக்கு கோபத்தையும், மன சங்கடத்தையும் உண்டாக்கியது. மன்னர்கள் பலரும் கலந்துக் கொண்டு தோற்றுவிட்டனர். அதனால் திட்டத்துய்மன் போட்டியின் நிபந்தனையை தளர்த்தினான். இப்போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம் எனக் கூறினான். அப்பொழுது பிராமணர்கள் வீற்றிருக்கும் இருக்கையில் இருந்து அர்ஜூனன் எழுந்தான். கிருஷ்ணர், அர்ஜூனனை கண்டவுடன் இவர்கள் பாண்டவர்கள் என்பதை நன்கு உணர்ந்துக் கொண்டார்.
அர்ஜுனன் சபையின் நடுவில் இருக்கும் வில்லை எடுத்து, போட்டியின் விதிப்படி சக்கரத்தை பார்க்காமல் ஒரே அம்பில் மீனின் கண்களை துளைத்தார். இதைப் பார்த்த கர்ணனுக்கு இவன் அர்ஜூனனாக இருக்ககூடுமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. இதைப் பார்த்த திரௌபதி நிச்சயம் இவர் அர்ஜுனனாக இருக்கக்கூடும் என நினைத்து அர்ஜூனனனுக்கு மாலை சூடினாள். இதைப் பார்த்த மற்ற மன்னர்கள் ஒரு பிராமணனுக்கு நாட்டின் அரசி மனைவியாக அமைவதா? எனக் கூறி கடும் கோபம் கொண்டனர். துருபதன், தன் மகளை பிரமணாக இருக்கும் அர்ஜூனனுக்கு மணமுடித்து வைத்தான். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் தங்களுக்கு கிடைக்காத பெண் ஒரு பிராமணனக்கு கிடைத்ததை கண்டு மிகவும் கோபங்கொண்டனர்.
அதன் பிறகு அவர்கள் பாண்டவர்களிடம் சண்டைக்குச் சென்றனர். பாண்டவர்களும் திரும்பி அவர்களை தாக்கினர். துரியோதனன் பீமனிடம் சண்டைக்குச் சென்றான். இருவரும் தங்கள் பலங்களை கொண்டு சண்டையிட்டனர். அர்ஜூனனும் கர்ணனும் தங்களின் வில் திறமைகளை கொண்டு சண்டையிட்டனர். அர்ஜூனனின் வில் திறமைகளை கண்டு இவன் அர்ஜுனன் தான் என்பதை தீர்மானித்துக் கொண்டான் கர்ணன். அதன் பிறகு பீமன் பலத்தையும், யுதிஷ்டிரன் ஈட்டி எரிவதிலும், நகுலன் சகாதேவன் வாள் வீச்சிலும் சண்டையிடுவதை பார்த்து இவர்கள் பாண்டவர்கள் என்பதை உறுதி செய்தான் கர்ணன்.
அதன் பிறகு கிருஷ்ணர் அவர்களை தடுத்து நிறுத்தி மன்னர்களே! இவர்கள் சத்திரியர்கள் தான். நாம் இறந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் பாண்டவர்கள் தான் இவர்கள் என்றார். அதன் பிறகு மன்னர்கள் அமைதியாக அவரவர் இருப்பிடத்திற்கு சென்று அமர்ந்தனர். அதன் பின் பாண்டவர்கள் துருவதனிடம் இருந்து விடைப்பெற்று தங்கள் தாயை காணச் சென்றனர். பாண்டவர்கள் குயவன் வீட்டை அடைந்தனர். தர்மர், வெளியில் இருந்தப்படியே தாயே! தங்களுக்காக கனியை கொண்டு வந்துள்ளோம் எனக் கூறினர். குந்தி, வந்திருப்பது தனது மருமகள் திரௌபதி என்பதை அறியாமல், பாண்டவர்களிடம் நீங்கள் ஐவரும் சமமாக பிரித்துக் கொள்ளுங்கள் எனக் கூறினாள்.
தன் தாயின் இத்தகைய பதிலை எதிர்ப்பார்க்காத பாண்டவர்கள் திகைத்து நின்றனர். ஐவரும் எவ்வாறு திரௌபதியை மணப்பது. அவ்வாறு மணந்தால் உலகம் இதை ஏற்றுக் கொள்ளுமா? என குழம்பினர். யுதிஷ்டிரன், திரௌபதியை அர்ஜுனனே திருமணம் செய்துக் கொள்ளட்டும் என்றான். அப்பொழுது குந்தி குடிசையில் இருந்து வெளியில் வந்தாள். அப்பொழுது தான் அவளுக்கு தாம் எத்தகைய தவறு செய்துள்ளோம் என்பது தெரிந்தது. ஆனால் அர்ஜூனன் தாய் சொல்லை எவ்வாறு மீறுவது? அதனால் நாம் ஐவரும் திரௌபதியை மணந்துக் கொள்ளலாம் என்றான். இதனால் சகோதரர்கள் இடையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. கடைசியில் ஐவரும் திரௌபதியை திருமணம் செய்துக் கொள்ள ஒப்புக்கொண்டனர்.
தொடரும்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக