ஒரு மனிதன் ஒரு வயதான குருவுக்குத் தினமும் சேவை புரிந்து
வந்தான். உணவு தருவது, கிணற்றிலிருந்து நீர் இறைப்பது, கால்களை அமுக்கிவிடுவது
போன்ற சேவைகள். வயதான குருவோ, “ஏன் உன் நேரத்தை வீண் செய்கிறாய்?“ என்று கூறுவது
வழக்கம். ஏனெனில் அந்த குருவுக்கு இந்த சேவையின் நோக்கம் ஏதோ ஆசைதான் என்பது
தெளிவாகப் புரிந்திருந்தது.
முடிவில்
ஒருநாள் அந்த மனிதன், “நான் உங்களுக்கு சேவை புரியக் காரணம் – எனக்கு ஏதாவது
ஓர் அதிசயம் செய்ய கற்றுக் தர வேண்டும்” என்றான்.
அதற்கு அந்த
வயதான குரு, “எனக்கு எந்த அதிசயமும் செய்யத் தெரியாது. நீ உன் நேரத்தை தேவையின்றி
வீண் செய்து விட்டாய். நீ வேறு யாராவது அதிசயங்கள் செய்ய தெரிந்தவரைப் போய் பார்”
என்று கூறினார்.
ஆனால் அந்த
மனிதனோ, "நீங்கள் எப்போதும் அதிசயங்களை நடத்திதான் வருகிறீர்கள். பிறர்
என்னிடம் கூறியுள்ளார்கள் – நீ அவர் கூறுவதைக் கேட்காதே. அவருக்கு சேவை
செய்துகொண்டே வா. ஒருநாள் அவர் உனக்கு ஏதாவது ரகசியம் கூறுவார். ஆனால் அதற்கு நீ
ஏற்றவனாக இருக்கிறாயா என்று பார்த்துவிட்டுத்தான் கூறுவார் என்று கூறியுள்ளனர்.
ஒருவேளை நான் இன்னும் அதற்குத் தக்கவாறு கனியவில்லையோ என்னவோ?” என்று கூறினான்.
சில நாட்கள்
கழித்து, அந்த வயதான குரு, இந்த மனிதன் இன்னும் தேவையேயின்றி வேலை செய்து வருவதைக்
கண்டார். யாரோ இவன் மனதில் நான் அதிசயம் புரிபவன் என்ற எண்ணத்தை விதைத்து
விட்டனர். “ஒருவேளை அதிசயங்கள் நடக்கலாம். ஆனால் அவை தாமாகவே நடப்பவை. நான்
அவற்றை செய்வதில்லை” என நினைத்தார்
அந்த வயதான
குரு, “நான் உனக்கு ஏதாவது ரகசியத்தைக் கூறினால் அன்றி நீ என்னை விட்டுப்
போகமாட்டாய் போலிருக்கிறதே! நான் உனக்கு ஒரு ரகசிய மந்திரம் கூறுகிறேன்.
“ஓம் மணி பத்மீ ஹம் ” என்பதை எழுதித்தருகிறேன்” என்றார். இது முக்தி நிலை
என்பதன் அர்த்தமாகும்.
அந்த வயதான
குரு, “முதலில் குளி. புத்தாடைகளை உடுத்திக்கொள். கதவுகளை மூடிக்கொண்டு
தனியே ஓரிடத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை ஐந்தே ஐந்து முறை கூறு. பிறகு நீ எந்த
அதிசயம் வேண்டுமானாலும் செய்யலாம்” என்று கூறினார்.
அந்த மனிதன்
வேகமாக வெளியேறத் துவங்கினான். நன்றி என்று கூறக்கூட முயலவில்லை. உடனே கோயில்
படிகளில் இறங்கி ஓடி விட்டான். அவன் பாதிதூரம் போனபோது, அந்த குரு, “நில்! ஒன்றைக்
கூற மறந்து விட்டேன். இந்த மந்திரத்தைக் கூறும்போது குரங்கைப் பற்றி
நினைக்கவே கூடாது!“ என்று சத்தமாகக் கூறினார்.
அந்த மனிதன்,
“நான் ஏன் குரங்கைப் பற்றி நினைக்கப் போகிறேன், என் வாழ்வில் இதுவரை நான்
நினைத்ததே இல்லை” என்றான். குரு, “சரிதான், ஆனால் நினைவிருக்கட்டும்! குரங்கு
மட்டும் கூடவே கூடாது. குரங்கின் நினைவு வந்தால் நீ மறுபடி ஐந்து தடவை மந்திரம்
கூற வேண்டும்” என்றார்.
ஆனால் அவன்
படிகளில் இறங்கத் துவங்கும் முன்பே குரங்குகளைப் பற்றி நினைக்கத் துவங்கி
விட்டான். அவன், “அடக் கடவுளே! நான் இன்னும் மந்திரம் கூறக் கூட ஆரம்பிக்கவில்லை.
ஆனால் குரங்குகள் வந்துவிட்டனவே!” என்று கூறினான். அவன் கண்களை மூடியபோதும்
குரங்குகள் அவனைப் பார்த்து மூஞ்சியைக் காட்டின.
அவன், “இது ஒரு
விநோத மந்திரம்தான். நான் இன்னும் துவங்கவேயில்லை, அதற்குள்ளா?” என்றான்.
அவன் வீட்டைச்
சென்றடைந்தபோது குரங்குகளால் சூழப்பட்டிருந்தான். அவன் எங்குப் பார்த்தாலும்
குரங்கைத்தான் கண்டான்.
அந்த
மந்திரமான ஓம் மணி பத்மீ ஹம் என்ற நான்கு வார்த்தைகளை ஒரு முறை கூட முடிக்கவிட
வில்லை. அத்தனை குரங்குகள். அன்றிரவு முழுவதும் அவன் முயன்றான். குரங்குகள் அவனை
துரத்தின. கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தது போல் ஆகி விட்டது.
அந்த
மனிதன், “நான் எல்லா அதிசயங்களை பற்றியும் மறந்தே போய்விட்டேன். இந்த மந்திரத்தைத்
திருப்பி எடுத்துக் கொண்டு என்னை குரங்குகளிடமிருந்து விடுவியுங்கள். ஏனெனில்
எனக்கு மந்திரம் போனாலும் குரங்குகள் போகாதோ என்று பயமாக இருக்கிறது. என்னால்
இரவும் பகலும் அந்த குரங்குகளுடன் சண்டையிட முடியாது” என்று வேண்டினான்.
குரு, “அந்த
மந்திரத்தை நீ என்னிடம் திருப்பி தந்து விட்டதால் இனிமேல் குரங்குகள் வராது. அவை
மிகவும் நேர்மையானவை” என்றார். அந்த மனிதன் சென்று நாலாபக்கமும் பார்த்தபோது
எங்குமே குரங்குகள் தென்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக