பிரம்மதேவர், சந்திரனிடம் நான் வழங்கிய சாபம் விலக வேண்டுமாயின் தாராதேவியை குருவுடன் இணைத்து வைக்க வேண்டும். குருவின் கனிந்த பார்வையால் மட்டுமே நான் இட்ட சாபம் விலகும் என்று கூறினார். எனவே, சந்திரன் போரை நிறுத்திவிட்டு சிவபெருமானிடம் தான் செய்த தவறை மன்னிக்க வேண்டும் என வேண்டினார். தன் தவறை உணர்ந்த சந்திரனை சிவபெருமானும் மன்னித்தார். பின்னர் சந்திரன், தாராதேவிக்கு தகுந்த அறிவுரைகளை கூறி குருதேவருடன் இணைத்து வைத்தார்.
குருதேவரும் நடந்த அனைத்து விஷயங்களையும் மறந்து தாராதேவியை ஏற்றுக்கொண்டார். பின்னர், சந்திரனின் சாபம் நீங்க குருதேவரும் அருள் புரிந்தார். தாராதேவி கருவுற்றாள், தான் கருவுற்றதற்கு காரணம் சந்திரன் என தன் கணவரான குருதேவரிடம் கூறினார். பின் தாராதேவி ஒரு அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள். அந்த குழந்தையை தாராதேவியுடன் வளர விரும்பாத குருதேவர், சந்திரனை அழைத்து அந்த குழந்தையை சந்திரனிடமே ஒப்படைத்தார்.
குழந்தையை பெற்றுக்கொண்ட சந்திரனும், தன் 27 தேவிமார்களையும் அழைத்து, அந்த குழந்தையை தன் குழந்தை போல் வளர்க்கச் சொல்கிறார். பின்பு, அந்த குழந்தைக்கு புதன் என பெயர் சூட்டினார். சந்திரன் கூறிய வார்த்தைகளை மதித்து 27 தேவிமார்களில் கார்த்திகை, ரோகிணி தேவிமார்கள் மட்டும் புதனை நன்றாக அன்புடன் வளர்த்தார்கள். இதில் கார்த்திகையை விட ரோகிணியே அதிக பாசத்துடன் புதனை வளர்த்தார்.
அதனால் சந்திரன் அந்த இரண்டு தேவிமார்களிடம் மட்டும் அதிக அன்பையும், நேரத்தையும் செலவிட்டார். மற்ற தேவிமார்களை சந்திரன் அலட்சியம் செய்தார். இதனால் கோபம் அடைந்த 25 தேவிமார்கள் தன் தந்தையான தட்ச பிரஜாபதியிடம் சென்று இங்கு நடந்தவற்றை கூறி, சந்திரன் தங்களுடன் அன்புடனும், நேசத்துடனும் நடந்து கொள்ளச் சொல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள். தன் மகள்கள் கூறியதைக்கேட்டு தட்ச பிரஜாபதி கோபம் கொண்டு, சந்திரனை அழைத்து நடந்தவற்றை எதையும் கேட்காமல், தன் மகள்கள் கூறியதை கேட்டு சந்திரனுக்கு சாபமிட்டார்.
தன் மகள்களை கவரக் காரணமாக இருந்த கலைகள், அதாவது சந்திரனின் அழகு பதினைந்து நாட்களில் தேய்ந்து போகும் படி சாபமிடுகிறார். சந்திரன் பல வரங்கள் பெற்றவராயினும், பல ஆயிரம் ஆண்டுகள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்கள் மற்றும் அரிய சக்திகளை பெற்றவர் தட்ச பிரஜாபதி. எனவே அவரின் சாபத்தை தடுத்து நிறுத்தும் சக்தி தனக்கில்லை என்பதை உணர்ந்தார் சந்திரன்.
சந்திரன், தேவேந்திரனிடம் நடந்த அனைத்து நிகழ்வுகள் மற்றும் தான் பெற்ற சாபத்தைப் பற்றியும், அந்த சாபத்தில் இருந்து நிவர்த்தி பெறுவதற்கான வழியை கூறுமாறும் வேண்டினார். எனவே தேவேந்திரன், சந்திரனின் பல தவறுகளை எடுத்துரைக்கிறார். நீ தேவையில்லாமல் பல தவறுகள் மற்றும் சாபங்களையும் பெற்றுவிட்டாய்.
குருபத்தினியான தாராதேவியால் சிவபெருமானை எதிர்த்தாய். அதை தடுக்க வந்த பிரம்மதேவரை அலட்சியம் செய்து அவரிடம் சாபம் பெற்றாய். பின், உன் பிறவியின் அவசியத்தை உணர்ந்த பிரம்மதேவரும் சாப விமோசனம் அளித்தார். தற்போதோ நீ... உன் மாமனாரும், கடும் தவம் செய்து பல வரம் பெற்ற தட்ச பிரஜாபதியிடமும் சாபத்தை பெற்றுள்ளாய்.
அவருக்கு அளித்த வாக்குறுதியை மீறி நடந்ததால் அதிருப்தி அடைந்த தட்ச பிரஜாபதியின் சாபம் உன்னை கடுமையாக தாக்கியுள்ளது. இதுவரையில் படைப்புக் கடவுளும், தட்ச பிரஜாபதியின் தந்தையான பிரம்மதேவரே உனக்கு பல உதவிகளை செய்துள்ளார். எனவே, அவரை சரணடைவது தான் உனக்கு சரியாக இருக்கும் என தேவேந்திரன், சந்திரனிடம் கூறுகிறார்.
சந்திரனும் தேவேந்திரன் வழங்கிய ஆலோசனைப்படி பிரம்மதேவரை சந்திக்கச் செல்கிறார். பிரம்மதேவரை சந்தித்த சந்திரன் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினார். சந்திரன் கூறியதைக் கேட்ட பிரம்மதேவர், நீ பெற்ற மகனை அன்புடன் வளர்க்க வேண்டும் என எண்ணியது சரியே. ஆயினும், என் மகனான தட்ச பிரஜாபதி உண்மையை உணராமல் உனக்கு சாபம் அளித்து விட்டான்.
தட்ச பிரஜாபதி என் மகன் தான். ஆனாலும், அவன் கடும் தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று விட்டான். அழியா வரம் பெற்றுள்ளோம் என்னும் செருக்கிலும், கர்வத்துடனும் பேரரசனாக ஆட்சி புரிந்து வருகிறான். அதிகார எண்ணங்களினால் என் வார்த்தைகளையும் அவன் அலட்சியம் செய்து விடுவான். அவனிடம் சென்று காலத்தை விரயம் செய்வதைக் காட்டிலும் சிவபெருமானிடம் சென்று சரணடைவதே நல்லது.
மேலும், அவர் உன் பிறவியின் அவசியத்தையும் உணர்ந்தவர். உன் சாபம் நீங்க ஏதேனும் உபாயம் மேற்கொண்டு உனக்கு நல்வழி காட்டுவார். ஆகவே அவரை சரணடைவதே உனக்கு சிறப்பு என்று பிரம்மதேவரும் ஆலோசனைக் கூறினார். பிரம்மதேவரின் அறிவுரைப்படியும், வேறு வழியும் இல்லாமையால் சிவபெருமானை காண கயிலாயம் செல்கிறார் சந்திரன்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக