சிவபெருமானுக்கும், தாட்சாயிணி தேவிக்கும் நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்த தட்ச பிரஜாபதி பலவிதமான தடைகளை செய்து கொண்டிருந்த காலத்தில் அத்திரி ரிஷி மற்றும் அனுசுயா தேவிக்கு பிறந்த மூன்று குழந்தைகளில் முதலாவது குழந்தை சந்திரன் ஆவார். இவர் மகாவிஷ்ணுவை நோக்கி பல காலங்கள் தவம் இருந்து பல வரங்களைப் பெற்று மாவீரனாகவும், மகாராஜனாகவும் வாழ்ந்தார்.
சந்திரனுக்கு தன்னுடைய 27 பெண்களையும் திருமணம் செய்து வைத்தார், தட்ச பிரஜாபதி. திருமணத்தின்போது தட்ச பிரஜாபதி, சந்திரனிடம் இருந்து ஒரு உறுதிமொழியை பெற்றுக்கொள்கிறார்.
அதாவது சந்திரன் தனது 27 மனைவிகளிடமும் சம அளவிலான அன்பினை செலுத்த வேண்டும். எந்த மனைவிக்கும் வேறுபாடு பார்க்கக்கூடாது என்பதே உறுதிமொழி ஆகும். சந்திரனும் சம்சார பந்தத்தில் ஈடுபட்டு வாழத் தொடங்கினார்.
ஒரு நாள் சந்திரன் ராஜசூய யாகம் நடத்த எண்ணினார். யாகம் நடத்துவதற்கு முன்பாக பிரம்மலோகம் சென்று நான்முகனான பிரம்மதேவரை வணங்கி ஆசி பெற்றார்.
பின் தேவலோகத்திற்கு சென்று இந்திரனையும் மற்றும் பல தேவர்களையும், அவர் நடத்தும் ராஜசூய யாகத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
தேவர்களின் குருவான பிரகஸ்பதியை நேரில் கண்டு தான் நடத்தும் யாகத்திற்கு தாங்கள் வந்து முன்னிலை வகித்து யாகத்தை நடத்தி தர வேண்டும் என பணிந்தார். சந்திரனுக்கு பல கலைகளை குருவாக இருந்து கற்று கொடுத்தவர் குருபகவான் பிரகஸ்பதி ஆவார்.
ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் குரு தன்னால் வர இயலாது எனவும், அதற்கு பதிலாக தனது துணைவியான தாராதேவியை யாகத்திற்கு அனுப்பி வைப்பதாக கூறினார்.
சந்திரன் ராஜசூய யாகம் நடத்த ஆரம்பித்தார். யாகம் நடக்க நடக்க சந்திரனின் அழகும், தேஜசும் பல மடங்கு அதிகரித்து பரிபூரண இளமை பெற்று உயர்ந்தார். அவரது அழகில் மயங்கிய பல தேவமாதர்கள் அவர் மீது ஆசையும், மோகமும் கொள்ள ஆரம்பித்தனர். அதில் குருவின் மனைவியான தாராதேவியும் சந்திரனின் அழகில் மயங்கி அவர் மீது ஆசைப்பட்டார்.
தேவமாதர்கள் சந்திரனின் மீது மோகம் கொள்வதை அறிந்த தேவர்கள், அவர் மீது பொறாமையையும், அதிருப்தியையும் கொண்டனர். யாகம் முடிந்ததும் தேவர்கள் தனது தேவிகளுடன் தேவலோகம் செல்ல முயற்சித்தப்போது பல தேவிமார்கள் வர மறுத்து சந்திரன் உடனேயே தங்கி கூடி மகிழ்ந்தனர். அதில் குருவின் மனைவியான தாராதேவியும் ஒருவர்.
தேவமங்கையர்கள் சிறிது காலம் கழித்து தேவலோகத்திற்கு சென்றனர். ஆனால், தாராதேவி மட்டும் செல்லவில்லை. முதலில் தயங்கிய சந்திரன், அவரின் அழகில் மயங்கி தன் குருவின் மனைவி என்பதனையும் மறந்து தாராதேவியுடன் கூடி மகிழ்ந்தார். யாகம் முடிந்தும் தாராதேவி வராததால் குரு, தன் தூதர்களை அனுப்பி அழைத்து வரச் சொன்னார். எனினும் தாராதேவி வரவில்லை.
குரு, சந்திரனிடம் தன் துணைவியை அனுப்பி வைக்கும்படி கேட்ட போது சந்திரன், அவர்கள் வந்தால் அழைத்துச் செல்லுங்கள் நான் அவர்களை கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கமாட்டேன் என்று கூறினார்.
குரு எவ்வளவோ முயன்றும் தன் துணைவியை அழைத்துப்போக முடியவில்லை. இறுதியில் இந்தப் பிரச்சனை சிவபெருமானிடம் சென்றது. சிவபெருமான் சந்திரனை அழைத்து தாராதேவியை குருவுடன் அனுப்பி வைக்கும்படி கூறினார். ஆனால் சந்திரன், சிவபெருமானின் உத்தரவிற்கும் கட்டுப்படவில்லை.
சந்திரன், தாராதேவி என்னுடன் விருப்பப்பட்டு உள்ளார். என்னிடம் அடைக்கலம் என்று வந்தவர்களை விரட்டுவது சத்திரிய தர்மம் அல்ல. அடைக்கலம் கொடுப்பது தான் தர்மம் என்று கூறினார். தன் உத்தரவிற்கு கட்டுப்படாத சந்திரனின் மீது சிவபெருமான் கோபம் அடைந்து போர் தொடுத்தார்.
சிவபெருமானுக்கும், சந்திரனுக்கும் ஏற்பட்ட போரினால் இந்த பிரபஞ்சமே பாதிக்கப்பட்டது. பிரபஞ்சத்தில் ஏற்பட்ட அழிவுகளை கண்ட தேவேந்திரன், பிரம்மதேவரிடம் சென்று ஏற்பட்ட அழிவுகளை கூறினார். மேற்கொண்டு போர் தொடர்ந்தால் இந்த பிரபஞ்சம் அழிவைச் சந்திக்கும் எனவும் கூறினார்.
எனவே பிரம்மதேவர் போரின் நிலையையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் அறிந்து சந்திரனை அழைத்து, தாராதேவியை குருதேவருடன் அனுப்பும்படி கூறினார். அதற்கு சந்திரன், நான் தாராதேவியை கட்டாயப்படுத்தி என்னுடன் வைத்திருக்கவில்லை. அவர்கள் விருப்பப்பட்டால் செல்லட்டும் நான் அவர்களை தடுக்கவில்லை எனக் கூறினார்.
தாராதேவி தன்னுடன் விருப்பப்பட்டு தங்கிவிட்டதால், தன் மீது தவறு ஏதும் இல்லை என சத்திரிய தர்மத்தை பிரம்மதேவருக்கே உபதேசித்தார் சந்திரன். சத்திரிய தர்மத்தை பற்றி பிரம்மதேவருக்கே உபதேசம் செய்ததால் கோபம் அடைந்த பிரம்மதேவர், சந்திரனை பாவியாக போகும்படி சாபமிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரன், அடைக்கலம் என்று என்னிடம் வந்த தாராதேவிக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டியது சத்திரியனான தன் கடமை என்பதை வலியுறுத்தினார். இதனால் கோபம் தணிந்த பிரம்மதேவரும், சந்திரன் மீதுள்ள உண்மையை அறிந்து சாபத்திற்கான பரிகாரத்தினை கூறினார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக