வியாழன், 20 பிப்ரவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 103


ரந்தாமனான திருமால் ததீசி முனிவரை தாக்கிய செய்திகளை அறிந்ததும் தேவர்களின் வேந்தனான இந்திரதேவனும், மற்ற தேவர்களும் திருமாலுக்கு உதவியாக நின்று போர் புரிய தொடங்கினார்கள். தேவர்களான நாங்கள் இருக்கும்போது அசுர குருவான சுக்கிராச்சாரியாரை நாடியதற்கு உண்டான தண்டனையை அளிக்கும் ஒரு வாய்ப்பாக இந்த சூழலை பயன்படுத்திக்கொள்ள தேவர்கள் திருமாலுக்கு உதவுவதாக கூறி இணைந்து கொண்டார்கள்.

தேவர்கள் அனைவரும் இணைந்து தங்களுடைய ஆயுதத்தினை ததீசி முனிவரின் மீது ஆவேசமாக ஏவினார்கள். தன்னை நோக்கி வருகின்ற ஆயுதத்தால் மனதில் எவ்விதமான அச்சமுமின்றி எம்பெருமானான சிவபெருமானை மனதில் தியானித்து தன்னிடமிருந்த தர்ப்பை புல்லை முன்னெடுத்து வைத்தார் ததீசி முனிவர்.

இவருடைய செயலை ஏளனமாக கருதிய தேவர்களுக்கு எதிர்பாராத நிகழ்வு ஒன்று உருவானது. அதாவது தர்ப்பை புல்லை தாண்டி தேவர்கள் அனுப்பிய எவ்விதமான ஆயுதமும் செல்லவில்லை. மாறாக தர்ப்பை புல்லில் இருந்து உருவான நெருப்பு சுவாலையானது அனைத்து தேவர்களின் ஆயுதங்களையும் எரித்து சாம்பலாக்கின.

இதை சற்றும் எதிர்பார்க்காத தேவர்கள் அடுத்து என்ன செய்வது? என்று தெரியாமல் இருந்த வேளையில் தர்ப்பை புல்லில் இருந்த நெருப்பு சுவாலையானது அவர்களை நோக்கி பாய்ந்து தொடர தேவர்கள் அனைவரும் என்ன செய்வது? என்று அறியாமல் அவ்விடம் விட்டு மறைந்து சென்றனர்.

ஆனால், திருமாலோ எவ்விடமும் செல்லாமல் முனிவரை தண்டித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு தன்னிடம் உள்ள பலவிதமான அஸ்திரங்களை அவர் மீது எய்தார். ஆனால், அந்த அஸ்திரங்கள் அனைத்தும் எம்பெருமானின் சிந்தனை கொண்டு தன் முன்னர் எடுத்து வைத்த தர்ப்பை புல்லில் இருந்து உருவான தீ சுவாலைகளில் விழுந்து தனது பலத்தை இழந்து சாம்பலாகின.

பின்பு, திருமால் தன்னிடம் உள்ள பிரம்மாஸ்திரத்தை எடுத்து முனிவரை நோக்கி கடுஞ்சினத்துடன் ஏவினார். பிரம்மாஸ்திரம் சென்ற வேகத்தில் முனிவரை தண்டிக்கும் என எதிர்பார்த்த திருமாலுக்கு பிரம்மாஸ்திரமும் பலன் அளிக்க வில்லை.

இவை யாவும் செயலிழந்த நிலையில் தனது மாயை சக்திகளால் முனிவரை உட்படுத்தி அவரை தாக்க முற்பட்டார் திருமால். ஆனால், சித்தம் தெளிந்து சிவ சிந்தனைகளுடன் இருந்த ததீசி முனிவரிடம் எந்தவிதமான மாயையையும் செயல்படாமல் அவரை விட்டு விலகின.

திருமாலின் செயல்களை கண்ட பிரம்ம தேவர் ஏன் இந்த அநர்த்தமான செயல்களை வைகுண்ட நாதர் புரிந்து கொண்டிருக்கிறார். மாயைகள் பல புரிந்து நன்மை புரிந்தவர் கோபம், அகங்காரம் போன்ற மாயைக்கு உட்பட்டு, செய்வதறியாமல் செயல்களை புரிந்து கொண்டிருக்கிறார். இவரை தடுத்தே ஆக வேண்டும் என எண்ணி திருமால் இருக்கும் இடத்தில் பிரம்ம தேவர் உதயமானார்.

மாயை சக்தி பயன் அளிக்காத நிலையில் அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்த கணத்தில் எழில் மிகுந்த தாமரை மலரில் கரங்களில் வேதங்களையும், புண்ணிய தீர்த்தங்களையும் கொண்ட பிரம்ம தேவர் உதயமாகி திருமாலிடம் இந்த போராட்டத்தினால் என்ன பயன் உண்டானது பரந்தாமா? அனைத்தும் துறந்து சர்வம், சிவமயம் என்று எண்ணி சிவபெருமானால் ஆசிர்வதிக்கப்பட்ட முனிவரை எவரால் வெல்ல இயலும். அவரின் மீதான தாக்குதல்களுக்கு நீங்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் மூலம் எந்த விதமான பயனும் இல்லை. மாறாக அந்த ஆயுதங்கள் மூலம் பூவுலகில் வாழும் உயிரினங்களே பாதிக்கப்படுகிறார்கள்.

மும்மூர்த்திகள் இணைந்து உருவாக்கிய பிரபஞ்சத்தை நாமே அழிப்பதா? உடனே நிறுத்துங்கள் என்று கூறினார் பிரம்ம தேவர். அனைத்தும் உணர்ந்தவரான சிவபெருமான் கரங்களில் சூலாயுதத்துடன் அவ்விடம் தோன்றி திருமாலை பிடித்திருத்த மாயை-யை விலக்கினார்.

அதுவரை மாயை-யையின் பிடியில் சிக்கி இருந்த திருமால், பிரம்ம தேவரின் கூற்றுக்களாலும் மற்றும் சிவபெருமானின் சக்தியாலும் அவரிடமிருந்த மாயையானது விலகி மெய்பொருள் யாதென உணர்ந்தார். பின்பு, திருமால் தன்னுடைய பழைய நிலைக்கு வந்ததும் ததீசி முனிவரின் தவ வலிமைக்கு தான் தலைவணங்குவதாக கூறினார்.

பின்பு, சிவபெருமானோ உண்மையான பக்தி எவரிடத்தில் இருக்குமோ அவர்களுக்கு அவர்களின் பக்தியே வேலியாக அமைந்து அவர்களை நெருங்கும் இன்னல்களிலிருந்து காக்கும் கவசமாக அமையும் என கூறினார். எம்பெருமானின் கூற்றுகளில் இருந்த உண்மையை திருமாலும் உணர்ந்தார். ஏனெனில், திருமாலால் ஏவப்பட்ட அனைத்து அஸ்திரங்களிலிருந்தும், பலவிதமான இன்னல்களிலிருந்தும் காப்பாற்றியது ததீசி முனிவரின் சிவபக்தியே..!

பின்பு, திருமாலும் வைகுண்டம் சென்றார். இதையறிந்த சுபன் திருமலை காண வேண்டி வைகுண்டம் சென்றார். திருமாலை கண்டு வணங்கிய சுபன், ததீசி முனிவர் என்னிடம் மன்னிப்பு கேட்க வரவில்லை என வினவினார்.

வைகுண்ட நாதரோ 'சிவபெருமானின் அருளைப்பெற்ற அந்த அருந்தவ முனிவரிடம் அனுசரித்து செல்வது உத்தமமாகும்" என சுபனுக்கு எடுத்துக்கூறினார். பின்னர் தான் வணங்கும் திருமாலே இவ்வாறு கூறியதை கேட்டதும் முனிவரின் கூற்றே சரியானதாகும் என உணர்ந்தார். பின்பு, தன்னிடம் இருந்த அகங்காரம் யாவற்றையும் மறந்து ததீசி முனிவரின் இருப்பிடத்திற்கு சென்று தான் இழைத்த பிழைகளுக்கு தன்னை மன்னிக்குமாறு வேண்டினார்.

ததீசி முனிவர் தாங்கள் என்னிடம் எவ்விதமான மனிப்பும் கேட்க வேண்டாம். காரணம் இன்றி காரியம் ஏது? என்று கூறி பழைய நாட்கள் போன்ற இருவரும் நண்பர்களாக வாழ்ந்தனர்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்