கயிலாயத்திற்கு சென்ற சந்திரன் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் சிவபெருமானிடம் கூறினார். எதிரிக்கும் அருளும், விருப்பு வெறுப்பு இல்லாத சிவபெருமானும் சந்திரன் மீதுள்ள உண்மையை அறிந்து அவருக்கு சாப விமோச்சனம் அளித்தார். சந்திரன் தன்னை எதிர்த்து போர் செய்தாலும், சந்திரனின் பிறப்பின் ரகசியம் அறிந்த சிவபெருமான் சந்திரனின் மீதிருந்த ஒரு கலையை தன் முடியில் சூட்டிக் கொண்டார்.
சிவபெருமான் கட்டிக்கொண்ட அந்த ஒரு கலை மட்டும் என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும் என கூறுகிறார். என்னுடைய அருளால் பதினைந்து நாட்களில் வளர்ந்து பூரண சந்திரனாகவும், தட்ச பிரஜாபதியின் சாபத்தால் அடுத்த பதினைந்து நாட்களில் தேய்ந்து, இந்த ஒரு கலை அழியாமல் மீண்டும் வளர்வதும் தேய்வதுமாக இருப்பாய் என சிவபெருமான் அருள் புரிந்தார்.
மேலும், நீ மனோதைரியத்துடன் என்னுடன் தயங்காமல் போர் புரிந்தாய். அதனால் மனித இனத்தின் மனோநிலையைக் கட்டுப்படுத்துபவனாகவும் இருப்பாய் என்று அருள் புரிந்தார். சந்திரனின் ஒரு கலையை தனது சிரசில் சூட்டி சோமேஷ்வரராக காட்சி அளித்தார் சிவபெருமான். பின்பு சந்திரன், அனைவருக்கும் வேதமின்றி அருள்பாவிக்கும் சிவபெருமானே தங்களின் இந்த ரூபத்தை கண்டு வழிபடுவோர் தங்கள் வாழ்நாளில் செய்த பாவங்களை போக்கி அருள் பாவிக்க வேண்டும் என்று வேண்டினார். அவ்விதமே சிவபெருமானும் அருள் பாவித்தார்.
மனதில் உள்ள துன்பங்களை போக்கும் மகாகாளேசரின் மகிமைகள் :
அனைத்து உயிர்களுக்கும் மோட்சம் அளிக்கும் தன்மைக்கொண்ட ஷிப்பிரா நதிக்கரையில் அவந்திகாபுரி என்ற ஊர் உள்ளது. அங்கு சிவ சிந்தனைகளுடன், சிவபெருமானின் திருநாமத்தை எப்போதும் உச்சரித்து கொண்டிருக்கும் வேதப்பிரியன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் சிவபெருமானின் மீது இடையூறாத பக்தியும், அன்பும் கொண்டிருந்தார்.
வேதப்பிரியருக்கு நான்கு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்கள் தேவப்பிரியன், மேதன், சுவிரதன் மற்றும் தருமவாதி ஆவார்கள். இவர்கள் பொருட்சேர்க்கை மீது எவ்விதமான பற்றும் இன்றி தந்தையை போன்று சிவபூஜை செய்து வந்தார்கள். அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் அறநெறிகளை பற்றி எடுத்துரைத்த அவர்களது தந்தையை விட அறநெறிகளை பற்றி எடுத்துரைப்பதில் பிரகாசமான ஆதவனை போன்று சிறந்து விளங்கினார்கள். கிராமத்தில் இவர்கள் செய்த அறச்செயல்களால் அனைவரும் இன்பமுற்று வாழ்ந்து வந்தார்கள்.
தூஷணன் என்னும் அரக்கன் பிரம்மதேவரை நோக்கி கடுந்தவம் இருந்தார். அவருடைய தவத்தில் மனம் மகிழ்ந்த பிரம்மதேவர் அளவில்லா பராக்கிரமம் கொண்ட வீரனாக விளங்கக்கூடிய ஆற்றலை வரமாக அளித்தார். தான் நினைத்த வரத்தை பெற்ற தூஷணன், ரத்தினமாலா என்ற பகுதியை ஆண்டு வந்தான். பிரம்மதேவரிடம் பெற்ற வரத்தால் தன்னை வெல்ல எவரும் இல்லை என்ற ஆணவம் கொண்டு தன்னுடைய அரசாட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாழ்ந்து வந்த முனிவர்களுக்கு பலவிதமான இடையூறுகளை ஏற்படுத்தி வந்தான்.
பல காலம் தவமிருந்து பெற்ற சக்தியால் தன்னை விட வலிமை குன்றியவர்களை தாக்கி, அறவழியில் சென்றவர்களை அதர்ம வழிக்கு இழுத்துச் சென்றான். இறைவனை வழிபடுவோர்களையும், ஆன்மீக எண்ணம் கொண்ட பெரியோர்களையும், முனிவர்களையும் தன்னுடைய வலிமையால் துன்புறுத்தி வந்தான்.
தனது அரசாட்சி மட்டுமல்லாமல் மற்ற பட்டிணம் மீதும் அவனது செயல்கள் தொடர்ந்து வந்தன. தூஷணன் செயலை எதிர்த்து அவனிடம் போர் தொடுத்த தேவர்கள் மற்றும் அரசர்கள் அனைவரையும் வெற்றி கொண்டான்.
தனது அரசாட்சியின் அருகில் உள்ள அவந்திகாபுரியை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தான், தூஷணன். பின்பு, அங்குள்ள மக்கள் மற்றும் வேதம் ஓதும் முனிவர்கள் என அனைவரிடமும் நீங்கள் உயிருடன் வாழ வேண்டும் என எண்ணினால் சிவனுக்கு பூஜை மற்றும் மந்திர உச்சாடனம் போன்றவற்றை தவிர்த்து இருப்பது நல்லதாகும் என கூறினான். பின்பு, தனது கட்டளையை தனது சேனைகள் மற்றும் மந்திரிகள் மூலம் அனைவருக்கும் அறிவிக்கச் செய்தான்.
அவந்திகாபுரியில் தூஷணன் கட்டளையால் கலக்கம் அடைந்த மக்கள், முனிவர்கள், வேதப்பிரியனின் புதல்வர்களிடம் சென்று முறையிட்டார்கள், வேதப்பிரியனின் புதல்வர்கள், எங்களிடம் அவர்களை எதிர்த்து அழிக்கும் சக்தி இல்லை என்று கூறினார்கள். பின் நம்மை படைத்து காத்து வரும் சிவபெருமான் மீது நம்பிக்கை கொண்டு நமக்கு இறைவன் அளித்த கர்மாக்களை செய்து வருவோம் என்று கூறினார்கள். நம்மை அரக்கனிடமிருந்து காப்பாற்றுவது அவரின் கடமையாகும் என்று வேதப்பிரியனின் புதல்வர்கள் கூறினார்கள்.
வேதப்பிரியனின் புதல்வர்கள், தன்னை காண வந்த அனைவரையும் சிவ பூஜையில் இணைத்துக்கொண்டு அங்கு சிவலிங்கம் செய்வதற்காக மண் தோண்டி எடுத்து வந்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்கள்.
அவந்திகாபுரியில் வேதப்பிரியனின் புத்திரர்களுடன் முனிவர்கள் அனைவரும் இணைந்து பூஜையும், வழிபாடும் செய்து வருவதை அறிந்த தூஷணன் நான் இட்ட ஆணையை மதிக்காமல் சிவனுக்கு வழிபாடு செய்கிறார்களா?.. இதுவே அவர்களின் கடைசி வழிபாடாக அமையட்டும் எனக்கூறி ஒரு பெரிய அசுர சேனையுடன் அவந்திகாபுரியை அடைந்தான்.
தூஷணன் நகரில் நுழைந்ததும் தனது கண்களில் கண்டதையெல்லாம் அழித்துக் கொண்டிருந்தான். பின்பு மக்களும், முனிவரும் இணைந்து பூஜை செய்யும் இடத்தை அடைந்த தூஷணன், கார்மேகம் சூழ்ந்த மேகத்தில் அச்சத்தை தோற்றுவிக்கும் இடியை போன்ற மாபெரும் முழக்கத்துடன் அவ்விடத்தை நெருங்கினான். அவனை கண்டதும் என்ன செய்வதென்று புரியாமல் இருந்தனர் அங்கிருந்தவர்கள். அசுரனை கண்டு யாரும் பயம் கொள்ள வேண்டாம், இறைவனின் திருநாமத்தை உச்சரிக்க அனைத்தும் அகன்று போகும் எனக்கூறி அரக்கனான தூஷணனின் கோபத்தை அலட்சியம் செய்தார்கள்.
இதனால் மிகுந்த கோபம் கொண்ட தூஷணன், தனது சேனைகளுக்கு இவர்கள் அனைவரையும் அழித்து விடுமாறு ஆணை பிறப்பித்தான். அசுர வீரர்கள் அனைவரும் அவர்களை தாக்க நெருங்கிக் கொண்டிருந்த கணத்தில் சிவலிங்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட இடத்தில் நீர் நிரம்பி சிறு குளமாக இருந்தது. அதில் இருந்து ஒரு மாபெரும் முழக்கத்துடன் மிகுந்த ஆவேசமாக சிவபெருமான் உதயமானார்.
சிவபெருமானை கண்டதும் என்ன செய்வதென்று புரியாமல் நின்ற அசுர வீரர்கள் அவரையும் தாக்க முற்பட்டனர். அவர்களுடன் தூஷணனும் இணைந்து போர் புரிந்தான். ஆனால், சிவபெருமான் அவர்கள் அனைவரையும் அழித்தார். சூரிய ஒளியால் புத்துணர்ச்சி பெற்று மலரும் சூரியகாந்தி மலரை போன்று அங்கு கூடியிருந்த மக்களும், முனிவர்களும் அனைவரும் புத்துணர்ச்சி பெற்று மகிழ்ச்சி அடைந்தனர். அங்கிருந்த அனைவரும் சிவபெருமானை பலவாறாக துதித்துப் போற்றினார்கள்.
அவர்களின் பக்தியில் மகிழ்ந்த சிவபெருமான் வேண்டிய வரத்தினை கேட்பீர்களாக!.. என்றார். அவர்கள் அனைவரும் தாங்கள் இங்கு எழுந்தருளி தங்களை நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்று வேண்டினார்கள். அவர்களின் விருப்பப்படியே அந்த நீர் நிரம்பிய குளத்தில் மூர்த்தியாக எழுந்தருளி மகாகாளேஸ்வரர் என்னும் திருநாமத்தோடு அருள்பாவித்து வருகின்றார். மகாகாளேஸ்வரரை வணங்கி வர துன்பங்கள் நீங்கி இன்பங்கள் மலரும். எண்ணிய காரியங்களில் உள்ள தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக