ஒரு நாள், அந்தணன் ஒருவன் பாண்டவர்களின் அரசவைக்கு வந்தான். அரசவையில் ஒருவரும் இல்லாததால் அந்தணன், சத்தமாக இங்கு ஒருவரும் இல்லையா? நீங்கள் நாட்டை ஆளுபவர்களா? அனைவரும் வெளியே வாருங்கள். எனக்கான நியாயத்தை கூறுங்கள் என பலத்த குரலில் கூறினான். அந்தணனின் சொற்கள் தர்மனின் காதில் விழவில்லை. ஆனால் அரண்மனையில் உலாவிக் கொண்டிருந்த அர்ஜூனனின் செவிகளில் விழுந்தது. உடனே அர்ஜூனன் சபைக்கு விரைந்து வந்தான். அந்தணரை பார்த்து, அந்தணரே! தங்களின் கவலைக்கான காரணத்தைக் கூறுங்கள். நான் அதை தீர்த்து வைக்கிறேன் என்றான். அந்தணன் வில்லாளி வீரனே! நான் எனது பசுக்களை இடையன் (ஆடு மாடுகளை மேய்ப்பவன்) ஒருவன் பொறுப்பில் மேய்ச்சலுக்கு அனுப்பி இருந்தேன்.
அங்கு திருடர்கள் எனது பசுக்களை திருடிச் சென்று விட்டனர். அந்த பசுக்களை வைத்துதான் நான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறேன். திருடர்கள் என் பசுவை திருடிவிட்டார்கள். இனி நான் என்ன செய்வேன் எனக் கூறி அழுதான். அர்ஜூனன், அந்தணரே! தாங்கள் கவலைக் கொள்ளாமல் இருங்கள் உங்கள் பசுவை நான் மீட்டு கொண்டு வருகிறேன் எனக் கூறினான். பிறகு அர்ஜூனன் தன் வில்லை எடுக்க திரௌபதியின் அறைக்குச் சென்றான். அங்கு தர்மரும், திரௌபதியும் ஒன்றாக இருப்பதை பார்த்த அர்ஜூனன் என்ன செய்வதென்று தெரியாமல் வில்லை எடுத்துக் கொண்டு அங்கு இருந்து சென்றுவிட்டான்.
வில்லை எடுத்துக் கொண்டு திருடர்களை தேடிச் சென்றான். சிறிது நேரத்திலேயே அர்ஜூனன் திருடர்களை கண்டுபிடித்துவிட்டான். அத்திருடர்களிடம் இருந்து பசுக்களை மீட்டு அந்தணரிடம் கொண்டு வந்து கொடுத்தான். திருடர்களுக்கும் தகுந்த தண்டனையும் அளித்தான். தருமரையும், திரௌபதியையும் ஒன்றாக பார்த்ததை எவரும் கவனிக்கவில்லை. இருந்தபோதிலும் அர்ஜூனனின் மனம் தவறு செய்துவிட்டதாக உறுத்திக் கொண்டே இருந்தது. அதனால் தருமரும், திரௌபதியும் வரும் வரை அர்ஜூனன் காத்துக் கொண்டிருந்தான். தருமர் வந்தவுடன் தர்மரிடம் நடந்த விஷயங்களை கூறினான். அண்ணா! நான் செய்த தவறுக்காக தீர்த்த யாத்திரை செல்ல முடிவு செய்துள்ளேன் எனக் கூறினான்.
தர்மர், தம்பி அர்ஜூனா! நீ தெரிந்து தவறு செய்யவில்லை. தெரியாமல் தான் தவறு செய்தாய். அதனால் இதனை பற்றி நீ கவலைக் கொள்ள வேண்டாம் என்றான். அர்ஜூனன், அண்ணா! தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் தவறு தான். நான் தீர்த்த யாத்திரை செல்வதற்கு தாங்கள் விடைக்கொடுக்க வேண்டும் என்றான். தம்பியின் நேர்மையை அறிந்து தர்மர், விடைக்கொடுத்தார். அதன்பிறகு அர்ஜூனன் அனைவரிடமும் இருந்து விடைப்பெற்று தீர்த்த யாத்திரைக்கு சென்றான். அங்கிருந்து அர்ஜூனன் கங்கை கரைக்குச் சென்றான். கங்கை கரையில் மக்கள் கூட்டம் ஏராளமாக இருந்தது. அப்பொழுது கலகலவென்ற சிரிப்பொலியுடன், தன் தோழிகளின் மத்தில் அழகில் ஒப்பற்றவளாக ஒருவள் வந்தாள்.
அப்பெண்கள் கங்கை கரையில் இறங்கி நீராடச் சென்றனர். நதியில் அப்பெண்கள் விளையாடுவதை அர்ஜூன் பார்த்துக் கொண்டிருந்தான். அதிலும் அந்த அழகியை மட்டும் அர்ஜூனன் விடாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அர்ஜூனன் தன் மனதுக்குள், நான் இதுவரையில் இவ்வளவு அழகுடைய ஒரு பெண்ணை பார்த்ததில்லையே! இவள் அழகின் சொரூபமாய் அல்லவா? இருக்கின்றாள். இவள் எனக்கு கிடைத்தால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாகத் தான் இருப்பேன் என நினைத்துக் கொண்டு இருந்தான். அப்பொழுது அவளும் அர்ஜூனனை பார்த்தாள். பார்த்தவுடனே அர்ஜூனன் மேல் அவளுக்கு காதல் வந்துவிட்டது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்து காதல் கொண்டனர்.
இவன் ஆண்களிலேயே மிகவும் பேரழகனாக அல்லவா? இருக்கின்றான். திருமணம் செய்தால் இவனை தான் திருமணம் செய்ய வேண்டும். நான் நாகலோகத்தை சேர்ந்தவள். இவனை பார்த்தால் பூலோகத்தை சேர்ந்தவன் போல் தெரிகிறான். இவனை நான் எப்படி திருமணம் செய்வது? இவனை திருமணம் செய்தால் உலகத்தார் ஏற்றுக் கொள்வார்களா? என நினைத்து ஏங்கி கொண்டு இருந்தாள். இதை கவனித்த தோழியர்கள் என்ன தலைவி அவர்களே! அந்த வாலிபனை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். தங்களுக்கு காதல் வந்துவிட்டதா என்ன? இந்த வாலிபனை நம் லோகத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது என கேலி செய்தனர்.
அப்பெண், தோழிகளே! அந்த வாலிபன் யார் என்பது எனக்கு தெரியாது. பார்த்தவுடன் அவனை எனக்கு பிடித்துவிட்டது. நான் அவனை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன். அவன் யார் என்பதை விசாரித்து விட்டு வாருங்கள் எனக் கூறி அனுப்பினாள். தோழியர்கள் அர்ஜூனனிடம் விசாரித்துவிட்டு, திரும்பி சென்று தலைவி அவர்களே! அவன் இந்திரன் மகன் அர்ஜூனன் என்றார்கள். இதைக் கேட்ட அப்பெண் இந்திரனின் மகன் என்றால் நிச்சயம் நான் அவனை திருமணம் செய்வேன் என்றாள். உடனே அப்பெண் நதியில் இருந்து வெளி வந்து அர்ஜூனனிடம் சென்று தனது விருப்பத்தை தெரிவித்தாள். இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த அர்ஜூனன் தானும் உன்னை விரும்புவதாக கூறினான்.
அதன் பிறகு அர்ஜூனனை அழைத்துக் கொண்டு கங்கையில் மூழ்கி துவாரத்தின் வழியே நாகலோகத்திற்குச் சென்றாள். அதன் பின் இருவரும் நாகலோகத்தில் திருமணம் செய்துக் கொண்டனர். சிறிது காலத்தில் அப்பெண் ஒரு குழந்தையை பெற்று எடுத்தாள். அதன் பிறகு அர்ஜூனன் தான் தீர்த்த யாத்திரை வந்ததற்கான காரணத்தை சொல்லி அங்கிருந்து விடைப்பெற்று சென்றான்.
தொடரும்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக