Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

இராமர் சீதை வனவாசம் செல்லுதல்

 ராமனின் கட்டளைக்கு இணங்க இலட்சுமணர் சாந்தமானார். பிறகு இருவரும் சுமித்திரையின் மாளிகைக்கு சென்றார்கள். கைகெயி இராமருக்கு மரப்பட்டையால் செய்த ஆடையை கொடுத்தாள். இராமரும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். தான் அணிந்திருந்த ஆடை ஆபரணங்களை அகற்றி விட்டு கைகெயி கொடுத்த ஆடையை அணிந்துக் கொண்டார். மரப்பட்டையால் செய்த ஆடையை சுமித்திரை தன் அன்பு மிகுந்த மகனான இலட்சுமணருக்கு கொடுத்தாள்.

 அவள் கொடுக்கும் போது கண்ணீர் தழும்ப, மகனே! நீ உன் அண்ணனான இராமனுக்கு துணையாக கானகம் சென்று வருவாயாக. 'தம்பியுடையான் படைக்கு அஞ்சான்" என்ற பழமொழிக்கு ஏற்ப அண்ணனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். உனக்கு தந்தை இராமன், தாய் சீதை ஆவாள். இராமன் இருக்கும் இடமே உனக்கு இருப்பிடமாகும். இராமன் கானகம் சென்றால் நீயும் கானகம் செல்ல வேண்டும். உன் அண்ணன் இராமனுக்கு செயலறிந்து தொண்டு செய்ய வேண்டும். விதியின் மதியால் இராமனுக்கு ஏதாவது நேருமாயின் அவ்விதியை நீ வெல்ல வேண்டும். பதினான்கு ஆண்டுகள் முடிந்து இராமன் அயோத்தி வந்தால் நீயும் அவர்களோடு வர வேண்டும். இன்று முதல் நீ இராமனுக்கு தம்பி அல்ல, அவர்களுக்கு பணிவிடை செய்யும் பணியாளன் என்று கண்ணீர் மல்க கூறி அவர்களுக்கு விடை கொடுத்தாள்.

 இராம இலட்சுமணர் இருவரும் வசிஷ்டர், கௌசலை, சுமித்திரை, கைகெயி ஆகியோரிடம் வணங்கி ஆசிபெற்று விடை பெற்றனர். பிறகு அவர்கள் சீதையின் மாளிகைக்கு சென்றார்கள். இராமரும், இலட்சுமணரும் முனிவர்கள் உடுத்தும் ஆடையை அணிந்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள், சீதை. அவள் இது பட்டாபிஷேகத்தில் நடைபெறும் ஒரு சடங்காக இருக்கும் என்று எண்ணினாள். சீதை இராமனின் திருவடியில் விழுந்து வணங்கினாள். பெருமானே! இப்பொழுது தாங்கள் மகுடம் சூட்டி கொள்ளும் நேரம் ஆயிற்றே, தாங்கள் முனிவர்களை போல் துறவு கோலத்தில் இருப்பது ஏன்? என்று கேட்டாள். இராமர், சீதா! என் தந்தை இந்த நாட்டை ஆட்சி செய்யும் பொறுப்பை என் தம்பி பரதனுக்கு அளிக்கின்றார். இதை கேட்டு சீதா மகிழ்ச்சி அடைந்தாள். தம்பி பரதன் மகுடம் சூட்டி கொண்டால் தாங்கள் அதிக நேரம் என்னுடன் இருப்பீர்கள் என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.

 சீதா! என் தந்தை என்னை பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்லுமாறு கட்டளையிட்டு இருக்கின்றார் என்றார். இதை கேட்டு சீதை மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். பெருமானே வனத்தில் மயில், குயில், வண்டு எல்லாம் ஆடிபாடும். இயற்கையை அழகாக்கும் செடி கொடிகள் பூத்து குலுங்கும். அது மட்டுமில்லாமல் வனம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றாள். இராமர், சீதா! நீ அயோத்தியில் இரு. நான் வனம் செல்கிறேன் என்றார். இதை கேட்ட சீதை மயக்க நிலையை அடைந்தாள். இராமர் சீதையின் மயக்கத்தை தெளிய வைத்து, வனவாசம் செல்வது என்பது மிகவும் கடினமானது. அங்கு வெப்பக் காற்றில் இருக்க வேண்டும். பாறையின் மேல் தான் படுக்க வேண்டும். காய் கனிகளை தான் உணவாக உண்ண வேண்டும். உடம்பை வருந்தி கொள்ள வேண்டும். ஆதலால் நீ அரண்மனையில் இரு என்றார்.

 சீதை, சுவாமி! தங்களை பிரிவதை காட்டிலும் பெரிய கொடுமை வேறொன்றும் இல்லை. தாங்கள் படுக்கும் பாறை எனக்கு பஞ்சணை ஆகும், தாங்கள் உண்ணும் உணவு எனக்கு அமிர்தம் ஆகும். உன்னை என்றும் பிரிய மாட்டேன் என்று மந்திரத்தை கூறி என்னை கரம் பிடித்தீர்கள், அதை தாங்கள் மறக்கலாமா? தங்களை ஒருபோதும் நான் பிரிய மாட்டேன். தங்களுடன் வனம் வந்து தங்களுக்கு தொண்டு செய்வேன் என்றாள்.

இராமர், சீதா! கானகத்தில் உன்னை காப்பது என்பது கடினமாகும். சுவாமி! ஒரு பெண்ணை காக்க முடியாத தாங்கள் உலகத்தை எவ்வாறு காத்தருள்வீர். பெருமானே! அன்னையிடம் வனம் செல்ல உத்தரவு பெற்று விட்டீர்களா? சீதா! என் அன்னை என்னுடன் வருவதாக தான் கூறினார்கள். நான் தான் பெண்கள் ஒரு போதும் தங்கள் கணவரை விட்டு பிரியக்கூடாது. தாங்கள் தந்தைக்கு துணையாக இங்கேயே இருங்கள் என்று கூறினேன்.

தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக