Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 22 பிப்ரவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 108


கேதாரீஸ்வரரின் மகிமைகள்  பிரம்ம தேவரின் புதல்வர்களில் ஒருவரான ஸ்வாயம்பு மனுவின் புதல்வன் பிரியவிரதன் ஆவார். பிரியவிரதனுக்கு ஏழு பிள்ளைகள் இருந்தார்கள். பிரியவிரதன் தான் உயிருடன் இருக்கும்போதே தனது புத்திரர்களுக்கு தனது ராஜ்ஜியத்தை சரிசமமாக பிரித்து கொடுக்கவேண்டும் என்று எண்ணினார். பிறகு, தன்னுடைய ரதத்தில் ஏறி மேருமலையை ஏழு முறைகள் வலம் வந்து மலையை ஏழு தீவுகளாக பிரித்தார்.

அந்த தீவுகளை போலவே ஏழு சமுத்திரங்களும் உருவாகின. பின்னர், அவர் தன் புத்திரர்களை அழைத்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி தீவாக பிரித்துக் கொடுத்தார். சிறிது காலத்திற்குப் பின் பிரியவிரதன் உயர் பதவியை அடைந்தார்.

தனது புத்திரர்களில் மூத்தவரான ஆக்நீத்ரனுக்கு ஜம்புத் தீவை அளித்தார். ஜம்புத் தீவை பெற்றுக்கொண்ட அவர் பலகாலம் புகழோடு ஆட்சி செய்து வந்தார். அவருக்குப்பின் அவருடைய புதல்வனான நாபி, அரசனாக முடிசூட்டி ஆட்சி செய்து வந்தார். அவருக்கு ரிஷபன் முதலாக ஒன்பது புத்திரர்கள் பிறந்தனர்.

ரிஷபனுக்கு பரதன் முதலான நூறு புத்திரர்கள் பிறந்தார்கள். ரிஷபனுக்கு பிறந்த புதல்வர்களில் பரதன் மட்டுமே அரசனாக அரியணை ஏறி ஆட்சி செய்து வந்தார். ரிஷபன் மற்றும் அவருடன் இருந்த சகோதரர்கள் ஞானமார்க்கத்தில் மகா ஞானிகளாக திகழ்ந்தார்கள்.

அவர்கள் ஜனக மகாராஜனுக்கு ஞான உபதேசம் செய்து 81 புதல்வர்களை பெற்றார்கள். அவர்கள் அனைவரும் வீரத்திற்கு பாத்திரமான சத்திரிய வழிமுறைகளின்படி வாழ்ந்து, நடந்து கொண்டிருந்தார்கள். ரிஷபன் முதலான அவர்களின் சகோதரர்கள் ஜம்புத் தீவு முதலான தனது அரசாட்சிக்கு உட்பட்ட அனைத்து தீவுகளையும் இணைத்து ஒன்பது கண்டங்களாக பிரித்து தங்களது புதல்வர்கள் அனைவருக்கும் கொடுத்தார்கள்.

அவை அனைத்திற்கும் ஒரே சக்கரவர்த்தியாக பரதனை நியமித்தார்கள். பரதன் ஆண்டு வந்த கண்டமே பரத கண்டம் என்று அழைக்கப்பட்டது. மற்ற எல்லா கண்டங்களையும் விட பரத கண்டமே சிறந்த கண்டமாகவும், உயர்ந்த கண்டமாகவும் விளங்கியது. நாம் இன்று வாழ்ந்து கொண்டிருப்பது பரத கண்டமே ஆகும்.

பரத கண்டத்தில் பதரிகாஸ்ரமத்தில் திருமால் உலக நன்மைக்காக நரநாராயணர்களாக வந்து அவதரித்தார். அப்பொழுது நரநாராயணர்கள் சிவபெருமானின் அருளையும், ஆசியையும் பெறுவதற்காக மண்ணால் ஆன சிவலிங்கம் ஒன்றை வடிவமைத்து, மனதில் எம்பெருமானை நினைத்து மிகுந்த பக்தியுடன் பூஜை செய்து வந்தனர்.

நர நாராயணர்கள் என்பவர்கள் பகவான் திருமால் இந்த பூவுலகில் எடுத்த அவதாரங்களில் ஒன்றாகும். நர நாராயணர் அவதாரம் என்பது இரட்டை அவதாரம். உலகில் தவத்தின் மூலம் இறை தன்மையை அடைய இயலும் என உணர்த்துவதற்காக எடுத்த அவதாரம் நர நாராயணர் அவதாரமாகும்.

நர என்பது மனிதத் குணத்தையும், நாராயணர் என்பது இறை தன்மையையும் குறிப்பதாகும். நர நாராயணன் என்பது மனித குணமும், இறை தன்மையையும் இணைந்த சக்தியை உணர்த்துகின்றது.
தவ சீலர்களாக வாழ்ந்து வந்த நர நாராயணர்களின் பூஜைக்கு மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவர்களுக்கு காட்சி அளித்தார். சிவபெருமான் அவர்களை நோக்கி நீங்கள் செய்த பூஜையால் யாம் மனம் மகிழ்ந்தோம்!... வேண்டும் வரத்தினை கேட்பீர்களாக என்று கூறினார்.

எம்பெருமானின் திருவுருவத்தை கண்ட இருவரும் அகிலத்தில் தங்களை விட மிகுந்த மகிழ்ச்சி கொண்டவர்கள் யாரும் இல்லை என்று எண்ணினர். பின்பு அவர்கள் எம்பெருமானான சிவபெருமானை வணங்கி பிரபுவே!... எங்களுக்கு கிடைத்த இந்த மகிழ்ச்சியானது உலகில் பிறந்த அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும், எங்களுக்கு காட்சி அளித்தது போல் தாங்கள் இங்கு எழுந்தருள வேண்டும் என்று வேண்டினார்கள்.

எம்பெருமானும் அவர்களின் வேண்டுதலுக்கிணங்க இமயமலையில் எப்பொழுதும் எல்லா காலக்கட்டத்திலும் பனியால் மூடப்பட்டிருக்கும் இடத்தில் கேதாரீஸ்வரர் என்ற திருநாமத்தோடு எழுந்தருளி காட்சியளித்தார். கேதாரீஸ்வரரை பக்தியோடு பூஜித்து வருபவர்களுக்கு பாவ கர்மாக்கள் அனைத்தும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். பதரிகாஸ்ரமத்திற்கு சென்று கேதாரீஸ்வரரை தரிசித்து வழிபடுபவர்கள் வாழ்வில் முழு நிறைவு பெற்று பிறவா நிலையை அடைவார்கள்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக