சனி, 22 பிப்ரவரி, 2020

சிவபுராணம்..!பகுதி 109


பாணாசுரன், எம்பெருமானான சிவபெருமானின் மீது மிகுந்த பக்தியும், அன்பும் கொண்டு சிறந்த சிவபக்தனாக இருந்து வந்தார். ஒரு சமயம் எம்பெருமானான சிவபெருமான் பாணாசுரனுடைய பட்டினமான சோணித புரிக்கு அருகில் உள்ள நதி தீர்த்தத்தில் எழுந்தருளினார். அவரின் தோற்றத்தைக் காண முனிவர்கள் மற்றும் தேவர்கள் என அனைவரும் காத்திருந்து, ஒன்று கூடி கோலாகலமாக கொண்டாடினார்கள். சிவபெருமானின் அத்தகைய தோற்றமானது வந்தவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் அழைத்துச் சென்றது.

முனிவ பெருமக்கள் எம்பெருமானை துதித்தும், போற்றியும் கொண்டிருந்தார்கள். எம்பெருமானுடைய கணங்கள் யாவும் அவ்விடத்தில் இருந்தன. மகரிஷிகள் ஹோமங்கள் முதலியன அனைத்தும் செய்து கொண்டிருந்தார்கள். சித்த பெருமக்கள் சித்தமெல்லாம் சிவபெருமானை நினைத்து ஒருங்கே அமைந்து தங்களது சித்தத்தை நிலை நிறுத்திக் கொண்டிருந்தார்கள்.

தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் எம்பெருமானின் திருநாமங்களை பாடி போற்றி மகிழ்ந்து வந்தனர். அப்சரஸ் தேவதைகள் தங்களது அழகிய நுட்பமான நாட்டிய கலைகளால் அனைவரின் கண்களுக்கும் விருந்தளித்துக் கொண்டிருந்தார்கள். கந்தர்வர்கள் யாழ் இசைக்கருவியை இசைத்து காணம் பாடினார்கள். எம்பெருமான் எழுந்தருளிய அவ்விடங்கள் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சியுடனும், ஆனந்தமாகவும் காணப்பட்டன.

அதைக்கண்ட சிவபெருமான் தனது துணைவியான பார்வதி தன்னுடன் இருக்க வேண்டுமென எண்ணினார். உடனே அருகில் இருந்த நந்திதேவரை அழைத்து இக்கணமே கைலாயம் சென்று, லோகமாதாவான பார்வதி தேவியை அலங்காரத்துடன் நான் அழைப்பதாக கூறி அழைத்து வா என்று கூறினார்.

உடனே நந்திதேவரும் சிவபெருமான் இட்ட கட்டளைக்கு இணங்கி கைலாயத்திற்கு விரைந்து சென்றார். கைலாயத்தின் நாயகியான பார்வதி தேவியை கண்டதும் அவர்களை வணங்கி எம்பெருமானின் விருப்பத்தை பார்வதி தேவியிடம் கூறினார். பார்வதி தேவியும் சிவபெருமானின் விருப்பத்திற்கு இணங்கி தன்னை அலங்கரித்துக் கொள்ள தொடங்கினார். பின்பு, நந்திதேவர் எம்பெருமானிடம் சென்று தேவி சிறிது நேரத்தில் வருவதாக எடுத்துரைத்தார்.

காலம் கடந்தும் பார்வதி தேவி இன்னும் வரவில்லையே என்னவாயிற்று என்று கைலாயம் சென்று பார்த்து பார்வதி தேவியை அழைத்து வா... என்று நந்திதேவரிடம் சிவபெருமான் கூறினார்.

நந்திதேவரும் உடனடியாக வாயு வேகத்தில் கைலாயத்தை அடைந்து பார்வதி தேவியிடம், தங்களின் வருகைக்காக எம்பெருமான் காத்துக் கொண்டிருக்கிறார். எனவே, தாங்கள் உடனடியாக அலங்காரம் செய்து கொண்டு விரைந்து வர வேண்டும் என சிவபெருமான் கூறியதாக பார்வதிதேவியிடம் நந்திதேவர் கூறினார்.

தேவியோ!!... தனது தோழிகளான ஐவரை நந்தி தேவருடன் அனுப்பி வைத்து சிறிது காலத்தில் வந்து சேர்வதாக எடுத்துக்கூறுங்கள் என்று கட்டளையிட்டார். எம்பெருமான் முன்னிலையில் நடனமாடிக்கொண்டிருந்த அப்சரஸ் தேவதைகளுக்கிடையே நம்மில் யார் எல்லா செயல்களிலும் சிறந்தவர்களாக இருந்து பெருமை உடையவர் என்பதை பற்றிய தர்க்கம் உருவாயிற்று. இதில் அவர்களுக்குள் நானே பெரியவன் என்று தங்களுக்குள்ளாகவே உரையாடிக் கொண்டிருந்தனர்.

இவர்களுக்கிடையே ஒரு தீர்மானமான முடிவு கிடைக்காததால் எம்பெருமானான சிவபெருமானிடம் கேட்பது என்று முடிவு செய்து அனைவரும் எம்பெருமானின் அருகில் சென்றார்கள். எம்பெருமானின் அருகில் சென்றதும் அவரிடம் யார் உரையாடுவது என தெரியாமல் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தனர்.

பின்னர், இவர்களில் ஒருவரான அதாவது பாணாசுரனின் மந்திரியான குபாண்டனின் மகளான சித்திரலேகை தனது தோழிகளுடன் சேர்ந்து எம்பெருமானிடம் கேட்பதாக கூறினார். சித்திரலேகை அப்சரஸ் தேவிகளை அழைத்து தான் பார்வதி தேவியின் ரூபம் தரிப்பதாகவும், மற்றவர்கள் பார்வதி தேவியின் தோழிகளாகவும், நந்திதேவரின் உருவமும் கொள்ள வேண்டும் என கூறினாள். இதை கேட்டதும் அப்சரஸ் தேவிகள் தங்கள் விருப்பங்களை கூறி அதற்கு தகுந்தாற்போல் தனது உருவங்களை மாற்றத் தொடங்கினார்கள்.

அதாவது, திருமாலின் தொடையிலிருந்து உருவான ஊர்வசி திருமாலின் மாய சக்தியால் நந்திதேவரை போன்று தனது உருவத்தை மாற்றிக் கொண்டார். இதேபோல் க்ருதாசி என்பவள் காளி உருவத்தையும், விசுவாசி என்பவள் சண்டிகா உருவத்தையும், பிலம்லோசை என்பவள் சாவித்திரி உருவத்தையும், மேனகை என்ற அப்சரஸ் காயத்ரி உருவத்தையும், ஸஹஜந்யா என்ற அப்சரஸ் ஜயை வடிவத்தையும், புஞ்ஜகஸ்தலீ என்ற அப்சரஸ் விஜயை வடிவத்தையும், க்ரதுஸ்தலி என்ற அப்சரஸ் விநாயக உருவத்தையும், வேறு சில அப்சரஸ்கள் சப்தமாதர் வடிவத்தையும் தரித்து உருமாறினார்கள்.

சிவபுராணம் நாளையும் தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்