Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 22 பிப்ரவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 110

குபாண்டனின் மகள் சித்திரலேகை, பிறருக்கு எள் அளவும் சந்தேகம் ஏற்படா வண்ணம் பார்வதி தேவியை போல் தன்னை மாற்றி கொண்டார். இதைக்கண்ட மற்ற அப்சரஸ் தேவதைகள் உண்மையிலேயே பார்வதி தேவி இங்கு வந்திருப்பது போல் எண்ணினார்கள். சித்திரலேகையின் உருவமானது தத்ரூபமாக பார்வதி தேவியின் வடிவத்தோடு ஒன்றியிருந்தது.

அவரவர்கள் வேடம் தரித்ததற்கு ஏற்ப அவரவர் பணிகளை செய்யத் தொடங்கினார்கள். அதாவது நந்திதேவர் வேடம் தரித்து இருந்த ஊர்வசி, முன்னே செல்ல மற்ற தோழிகள் பார்வதி தேவியான சித்திரலேகையை சிவபெருமானிடம் அழைத்து கொண்டு சென்றனர். பார்வதி தேவியின் வருகையை கண்ட அந்த கணப்பொழுதில் அங்கு குழுமி இருந்த அனைத்து தேவர்களும், முனிவர்களும் எழுந்து நின்று மரியாதை அளித்தனர்.

பின்பு கைலாயநாயகியான பார்வதி தேவி வந்து விட்டார் என்ற செய்தி அங்கிருந்த அனைவருக்கும் பரவியது. பார்வதி தேவி செல்லும் வழியில் இருந்த அனைத்து முனிவர்களும் பார்வதி தேவியின் வேத கோஷங்களை எழுப்பி வரவேற்று மகிழ்ந்தார்கள்.

நந்திதேவராக வடிவம் தரித்த ஊர்வசி மற்றும் அவரின் பின்னால் பார்வதி தேவியின் தோழிகள் போல் வேடம் தரித்த அப்சரஸ் தேவிகள், எம்பெருமானிடம் சென்று கைலாயத்தில் இருந்து பார்வதி தேவி வந்து கொண்டிருக்கின்றார் என்று கூறினார்கள்.

இங்கு வந்திருப்பவர் யார்? தன் முன் நிற்பவர் யார்? என்று அனைத்தும் அறிந்த சிவபெருமான், அப்சரஸ் தேவதைகளின் செயல்களால் இங்கு கூடி இருப்போரின் மகிழ்ச்சி பாதிக்கப்பட விரும்பாத சிவபெருமான் தாமும் ஒரு திருவிளையாடலை நிகழ்த்த விரும்பினார். ஆகவே, எவ்விதமான சந்தேகமும் ஏற்படா வண்ணம் பார்வதி தேவியரின் உருவமெடுத்து வருகை தந்து கொண்டிருந்த சித்திரலேகையை அழைத்து வர சென்றார் எம்பெருமான்.

பின், தேவியைக் கண்டு உன் வருகைக்காகத்தான் இங்கு அனைவரும் காத்திருக்கின்றோம் என்று கூறி சித்திரலேகையின் கைகளை பிடித்து அழைத்துச் சென்று பலவித மலர்கள் அலங்கரிக்கப்பட்டிருக்கும் மஞ்சத்தில் தனக்கு அருகில் அமர வைத்து தானும் அமர்ந்தார் சிவபெருமான்.

அவரவர் இடத்திற்கு தகுந்த மாதிரி அவர்கள் பணிகளை செய்யத் தொடங்கினார்கள். அதாவது சிலர் நடனமாடியும், சிலர் பாடல் பாடியும், சிலர் நகைத்தும், சிலர் விளையாடிக் கொண்டும் இருந்தனர். இங்கு நடப்பவை அனைத்தும் அறிந்த எம்பெருமான் எதையும் வெளிக்காட்டாமல் அமைதியுடன் நிகழ்வனவற்றை பார்த்துக்கொண்டிருந்தார்.

சிவபெருமான் தன் திருவிளையாடலை நடத்திக் கொண்டிருந்த அவ்வேளையில், தொலைவில் ஆரவாரத்துடன் பிருங்கி முனிவர், நந்திதேவர், விநாயகர் முதலானோர் புடைசூழ சர்வ அலங்காரத்துடன் லோக மாதவான பார்வதி தேவி, ஆகாயம் வழியாக தன் பதியான கணவனைக் காண வந்து கொண்டிருந்தார்.

பார்வதி தேவியின் வருகையை கண்டு சபையில் கூடியிருந்த அனைவரும் என்ன நடக்கிறது? என்று அறியாமல் திகைத்து நின்றனர். எம்பெருமான் அருகில் தேவி அமர்ந்து இருக்கையில் அங்கு வருகை தருபவர் யார்? என புரியாமல் சபையில் கூடியிருந்த அனைவரும் திகைத்து நின்றனர்.

அவ்வேளையில் எம்பெருமான், பார்வதி தேவியை அழைத்து வந்து தன் அருகில் அமர வைத்தார். சிவபெருமானுக்கு அருகில் அமர்ந்த பார்வதி தேவி, தன் அருகில் இருக்கும் மற்றொரு பார்வதி தேவியையும், தனது தோழிகளை போன்று உருவத்தில் இருப்பவர்களையும் கண்டு நிகழ்வனவற்றை உணர்ந்தார்.

பின்பு எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனது பரிவாரங்களை போலவே இங்கும் பரிவாரங்கள் இருப்பதைக் கண்டு தனது தோழிகளிடம் இவர்கள் யாரென ஆலோசித்து கொண்டிருந்தார். அவ்வேளையில் அங்கு இரண்டு பார்வதி தேவியையும், இரண்டு சப்த மாதர்களையும், இரண்டு நந்திதேவர்களையும் மற்றும் இரண்டு விநாயகரையும் கண்டு அங்கு கூடியிருந்தவர்கள், இங்கு நிகழ்வனவற்றை எதையும் உணர முடியாமல் எம்பெருமானையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

சர்வலோகங்களையும் தன்னுள் கொண்ட சர்வேஸ்வரனாகிய சிவபெருமான் புன்முறுவல் பூத்த முகத்துடன் அங்கு நிகழ்வனவற்றை கண்டு கொண்டிருந்தார். அச்சமயத்தில் பார்வதி தேவியின் வருகையை சற்றும் எதிர்பாராத சித்திரலேகை மற்றும் அவருடன் இருந்த மற்ற அப்சரஸ் தேவதைகள் என்ன நிகழுமோ? என பயந்து நடுங்கி கொண்டிருந்தனர்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக