Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 26 பிப்ரவரி, 2020

சிவபுராணம்..!பகுதி 113


தேவேளையில் நித்திரையில் இருந்த உஷையும் கண்விழித்து எழுந்தாள். தனது அருகில் யாரோ இருப்பது போல் உணர்ந்த அவள் சட்டென்று திரும்பிப் பார்க்கையில் இதுவரை தனது ராஜ்ஜியத்தில் காணாத ஒரு அறிமுகமில்லாத புதிய நபர் தன்னருகில் இருப்பதை உணர்ந்தாள். எவராலும் வர இயலாத இப்பகுதிக்கு வந்திருக்கும் இந்த புதிய நபரை கண்ட மாத்திரத்தில் அவரிடம் தனது மனதை மட்டும் இழக்காமல், தான் இதுவரை எதிர்பார்த்துக்கொண்டிருந்த தன் நாயகன் வந்துவிட்டார் என எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.

அச்சமயத்தில் அவள் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லையற்ற பரந்து விரிந்திருக்கும் கடலை போன்று மிகவும் பெரியதாக அமைந்திருந்தது. விரதத்தால் உடல் சோர்வான நிலையில் இருந்த அவள் தன் மனம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த தனது நாயகனை கண்டதும் தனது உடலில் ஒரு புதுவிதமான உத்வேகம் பிறந்ததை உணர்ந்து அவன் அருகில் சென்றாள். அநிருத்தன் அவன் அருகில் வந்து இருப்பதை உணர்ந்து இருவரும் ஒரு உயிராய் இரு உடல்கள் இருந்து தங்களது எண்ணங்கள் யாவற்றையும் இணைத்து இவ்வுலகில் இல்லாது புதியதொரு உலகை உருவாக்கி அதில் பலவிதமான சுகமான நினைவுகளுடன் இருந்து கொண்டிருந்தனர்.

அந்நிலையில் ஒருவருக்கொருவர் யாரென்று கூட அறியாமல் தாங்கள் யார்? என்பதையும் மறந்து இருந்தனர். உயிரின்றி உடல் இல்லாதது போல் ஒருவர் இன்றி ஒருவர் இருக்க இயலாத ஒரு நிலை ஏற்படும் அளவிற்கு ஒரு கணப்பொழுது இருவரின் பார்வைகளும் இருவரின் உறவுகளை பலப்படுத்தியது. இருவரின் நிலையை உணர்ந்த பார்வதி தேவி மாயையால் உஷையை மீண்டும் நித்திரையில் ஆழ்த்தி அநிருத்தனை துவாரகையில் கொண்டு போய் சேர்த்தார்.

ஆதவனும் தனது பணியை செய்யும் பொருட்டு இருளை விரட்டி ஒளி அளிப்பது போல் தன் கனவில் கண்ட தன் நாயகனை நேரில் காணும் பொருட்டு கண்விழித்து காண முயற்சித்தாள். ஆனால், தன் நாயகன் எங்கேயும் காணவில்லை. சுபமான காலைப்பொழுது அன்று என்னவோ தன் கனவில் வந்த ஆடவனின் சிந்தனைகளாக இருந்ததால் தன் அரண்மனையில் எங்கும் சுற்றி பார்க்கையிலும் ஆடவனின் முகமாகவும், அவருடன் இருந்த பொழுதுகளும் தோன்றி மறைந்து கொண்டே இருந்தன.

கணப்பொழுதில் அவனைக் கண்ட போதிலும் அவருடைய அங்க அடையாளங்கள் யாவும் மறையாது அவள் மனதில் ஆழப்பதிந்தன. அநிருத்தின் நினைவுகள் அவளை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தன. எங்கு தேடினாலும் அவரின் முகமாகவே தோன்றி அவளது எண்ணங்கள் முழுவதும் அவராகவே இருந்து கொண்டிருந்தன. உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கக்கூடிய உணவின் மீது நாட்டம் இன்றி அவரின் நினைவாகவே அவளின் மனம் இருந்து கொண்டிருந்தன.

எப்பொழுதும் தனது தோழியுடன் மகிழ்ச்சியாக இருந்து காலம் கழித்த இடங்களில் கூட தன் நாயகனை எண்ணி ஒவ்வொரு நொடியையும் ஒரு யுகமாக கழித்துக் கொண்டிருந்தாள். தனது உடனிருக்கும் அரசகுமாரியின் இந்த மாற்றத்தை உணர்ந்த மற்ற தோழிகள் ஏன்? இவ்விதம் உள்ளார்... என்பதை அறியும் பொருட்டு பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆடல், பாடல் என பல்வேறு செயல்களை செய்து, தனது தோழியை பழைய நிலைக்கு கொண்டுவர முயற்சித்தனர். ஆயினும் அவர்கள் செய்த செயல்கள் யாவும் தான் கண்ட சொப்பனத்தில் தன் நாயகனுடன் தான் இருப்பது போல் அவள் கண்டு களித்துக்கொண்டிருந்தாள். அரசகுமாரியிடமிருந்த புத்துணர்ச்சியும், வேகமும் குறைந்தாலும் அவள் முகத்தில் காணப்பட்ட புன்முறுவல் மட்டும் நீங்காமல் இருந்தன.

அரசகுமாரியிடம் காணப்பட்ட இந்த மாற்றத்தை கண்ட தோழிகள் ஓர் இரவில் தனது அரசகுமாரிக்கு என்னவாயிற்று? ஏன் இவ்விதம் செயல்படுகின்றார்? பலவிதமான உற்சாகத்தையும் தவிர்த்து ஏன்? தனிமையில் வாடுகின்றார் என்பதை அறியாமல் திகைத்து கொண்டிருந்தனர்.

தோழிகளின் கேளிப்பேச்சுகளிலும், உரையாடல்களிலும் நாட்டமின்றி தனிமையை தேடிச் சென்றாள் உஷை. தனது கனவில் வந்திருப்பவர் யார்? அவர் எந்த நாட்டு அரசகுமாரன்? தன் கனவில் தம்மிடம் வந்து, தன்னை விட்டு அகன்றது ஏன்? என பலவிதமாக மனதில் எண்ணிக்கொண்டே இருந்தாள். அநிருத்தனின் நினைவு அவளை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தன.

சரியான நித்திரையின்றி, உணவுமின்றி இருந்தமையால் தேவியின் சக்தி குறைந்து தன் தோழிகளுடன் இருந்த சூழலில் மயக்கமுற்று விழுந்தாள். நிகழ்ந்தது யாதென அறியாத தோழிகள், தேவி மயக்கம் அடைந்ததை அறிந்து மிகவும் பயம் கொண்டனர். பின் அவர்கள் தேவியை அந்தப்புரத்தில் உள்ள அவரது பள்ளியறையில் கொண்டு சேர்த்து தண்ணீர் கொண்டு மயக்கத்தில் இருந்து தெளிவு செய்தனர்.

பின்பு, உண்ண உணவு கொடுக்கையில் உஷை உணவு வேண்டாம் என மறுத்து தன் நாயகனின் சிந்தனையிலேயே வாழ்ந்து கொண்டிருந்தார். தேவியின் இச்செயலானது மற்ற தோழிகளுக்கு ஒருவிதமான அச்சத்தை அளித்துக்கொண்டிருந்தன. இந்நிலையானது தொடர்ந்து கொண்டிருந்தால் தேவியின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி இதனால் தங்களுக்கு ஏதாவது தீங்கு நேரிட வாய்ப்புள்ளதை உணர்ந்த தோழிகள் என்ன செய்வது? என்று அறியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

அவ்வேளையில் குபாண்டனின் குமாரத்தியான சித்திரலேகை தோழிகளின் முகத்தில் காணப்பட்ட இனம்புரியாத ஒரு கவலையை உணர்ந்தாள். பின்பு தோழிகளிடம் என்னவாயிற்று என விசாரித்து கொண்டிருக்கையில் தேவியிடம் காணப்பட்ட சில மாற்றங்களையும், அதனால் விளையும் விளைவுகளை பற்றி எண்ணியே கவலையுடன் இருப்பதாக கூறினார்கள் மற்ற தோழிகள்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக