ஜராசந்தன் மற்றும் பீமனின் யுத்தம் 27 நாட்கள் நடைப்பெற்றது. இறுதியில் கிருஷ்ணர் பீமனிடம் சைகையாக, ஒரு குச்சி எடுத்து அதை இரண்டாக உடைத்து அதை எதிரெதிரே தூக்கி எறிந்தார். கிருஷ்ணரின் சைகையை புரிந்துக் கொண்ட பீமன், ஜராசந்தனை அடித்து கீழே தள்ளி அவனது கால்களை பிடித்து இரண்டாக பிளந்து எதிரெதிரே வீசினான், அந்த இடத்திலேயே ஜராசந்தன் மாண்டான். அதன் பின் ஜராசந்தனால் சிறைப்பிடிக்கப்பட்ட அரசர்கள் விடுவிக்கப்பட்டனர். அதன் பிறகு அனைவரும் இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்தனர். ராஜசூயயாகத்திற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கினர். ராஜசூயயாகத்திற்கு வியாசர், கௌரவர்கள், பீஷ்மர், கர்ணன், சிசுபாலன், துரோணர் முதலானோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
சிசுபாலன் :
சிசுபாலன் சேதி நாட்டு இளவரசன் ஆவான். இவனின் தாய் ஸ்ருததேவா. இவள், கண்ணனுக்கு சகோதரி முறை ஆவாள். சிசுபாலன் பிறக்கும்போது மூன்று கண்களுடனும் நான்கு கைகளுடனும் பிறந்திருந்தான். அவன் பிறந்த வேளையில் தீய சகுனங்களும் உண்டாயின. அப்போது ஓர் அசரீரி, குறிப்பிட்ட ஒருவர் இந்தக் குழந்தையை தூக்கும்போது, இவனது அதிகப்படியான அவயவங்கள் மறைந்துவிடும். அந்த ஒருவரால்தான் இவனுக்கு மரணம் நிகழும் என்று ஒலித்தது.
ஒரு முறை, கிருஷ்ணர் சேதி நாட்டுக்கு விஜயம் செய்தார். அவர் குழந்தை சிசுபாலனை தூக்கித் தன் மடியில் வைத்துக்கொண்டதுமே, அவனது அதிகப்படியான அவயவங்கள் மறைந்தன. அதைக் கண்டு பெற்றோர் மகிழ்ந்தனர். அதேநேரம், கிருஷ்ணனைக் கைதொழுது வேண்டினாள் சிசுபாலனின் தாய். நீ இவனைக் கொல்லக் கூடாது என்று கேட்டுக்கொண்டாள். கிருஷ்ணர், எதையும் என்னால் உறுதியாகக் கூற முடியாது. ஆனால், உனக்காக ஒரு வரம் அளிக்கிறேன். இவன் எனக்கு எதிராகச் செய்யும் நூறு குற்றங்கள் வரை பொறுத்துக் கொள்கிறேன் என்றார். பின்பு சிசுபாலன், தனக்குக் கண்ணன் எதிரி என்பதை இளமையிலேயே அறிந்து பகைமையைப் பாராட்டி, எப்பொழுதும் கண்ணனை நிந்திப்பதே தொழிலாக இருந்தான்.
ராஜசூயயாகத்திற்கு எல்லா நாட்டு மன்னர்களும் கலந்துக் கொண்டனர். நாரதர் கூறியது போல் ராஜசூயயாகம் இனிதே நடந்தது. இந்திரப்பிரஸ்தத்தை கண்டு மற்ற நாட்டு மன்னர்கள் வியப்படைந்தனர். திருதிராஷ்டிரன் இந்திரப்பிரஸ்தத்தை கண்டு பொறாமை கொண்டான். இதனால் அவனது உள்ளத்தில் பொறாமை தீ வளர்ந்தது. வந்தவர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடக்க துவங்கியது. அப்பொழுது யாருக்கு முதல் மரியாதை செய்வது என்பது குறித்து குழப்பம் ஏற்பட்டது. அனைவரும் ஒன்று கூடி ஆலோசித்து கிருஷ்ணருக்கு தான் முதல் மரியாதை செலுத்த வேண்டும் எனக் கூறினார். இதைக் கேட்டவுடன் துரியோதனின் உள்ளம் புழுங்கியது.
அப்பொழுது சிசுபாலன் எழுந்து இதற்கு மறுப்பு தெரிவித்தான். பீஷ்மரை பார்த்து, உனக்கு வயது தான் மங்கி விட்டது. அறிவும் மங்கி விட்டதா என்ன? இந்த கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை செய்ய வேண்டுமா? ஏன் இந்த அவையில் கிருஷ்ணனை காட்டிலிலும் சிறந்தவர்கள் யாரும் இல்லையா? மன்னன் துருபதன் இருக்கிறான். உனது பேரன் துரியோதனன் இருக்கிறான். இங்கு இருக்கும் மன்னர்கள் வீரத்தில் குறைந்தவர்களா? இல்லை செல்வத்தில் குறைந்தவர்களா?
அப்பொழுது பீஷ்மர் எழுந்து, சிசுபாலா! நீ அதிகம் பேசுகிறாய். வாசுதேவன் கிருஷ்ணன் வீரத்திலும், திறமையிலும் மிகச் சிறந்தவன். சிசுபாலன் கோபத்தில் பலவாறாக பேசினான். ஆத்திரத்தில் பீஷ்மர் மற்றும் தர்மரின் மனம் புண்படுமாறு பலவாறாக பேசினான். கிருஷ்ணரை ஆடு மாடுகளை மேய்க்கும் யாதவர் குலத்தைச் சேர்ந்தவன் என்றும் இடையன் என்றும் ஏசினான். பீஷ்மரை கங்கையின் மைந்தன் வேசிமகன் என்று ஏசினான். கங்கையில் பலரும் நீராடுவதால் கங்கையை பொதுமகள் என்று ஏசினான்.
சிசுபாலன் இப்படி பேசிக் கொண்டிருக்கையில் அவனுடைய பாவங்கள் அதிகமாகிக் கொண்டே சென்றது. கிருஷ்ணர், சிசுபாலா! உனக்கு பாண்டவ சகோதரர்களிடம் எத்தகைய முன் விரோதமும் இல்லை என்பதை நான் நன்கறிவேன். உனக்கு விரோதம் என்னுடன் தான் என்றார். சிசுபாலனின் அவமானங்களை பொறுத்துக்கொண்டிருந்த கண்ணன் ஒரு கட்டத்தில் அவனைக் கொல்லும் காலம் நெருங்கி வருவதை உணர்ந்தார். மேலும் சிசுபாலன் அனைவரையும் புண்படுத்துவது போல் பேசினான். இதனால் கோபமடைந்த கிருஷ்ணர் தனது சக்கராயுதத்தை சிசுபாலனை நோக்கி செலுத்தினார். அதன் பின் தான் சிசுபாலனுக்கு தெரிந்தது. தனது நூறு பாவங்கள் முடிந்துவிட்டது என்று.
தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள சிசுபாலன் அவையில் அங்கும் இங்கும் ஓடி ஒளிந்தான். சக்கராயுதம் அவனை விடாமல் துரத்தி, அவனது தலையை அறுத்துச் சென்றது. அதன் பின் அவனின் உடலில் இருந்து ஒளி வெளிவந்து கிருஷ்ணரின் பாதத்தை சரணடைந்தது. சிசுபாலன் சாப விமோசனம் அடைந்தான். இதைக்கண்டு அங்கிருந்த அரசர்கள் அனைவரும் வியப்படைந்தனர்.
தொடரும்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக