விராதன் ஒரு கந்தர்வனாக இருந்தவன். குபேரர் இட்ட சாபத்தினால் கொடிய அரக்கனாக மாறி பிறவி எடுத்தான். இராமர் காலால் உதைபட்டதும் அவனுக்கு இருந்த சாபம் நீங்கி அவனுடைய பழைய கந்தர்வ உடல் அவனுக்கு கிடைக்கப்பெற்றது. அந்த கந்தர்வன் இராமபிரான் திருவடியில் வீழ்ந்து பணிந்து வணங்கினான். 'இராமா! உனது திருவடி என்மீது பட்டதால், என் வினைகளெல்லாம் தீர்ந்து பிறவிக் கடல் கடந்தேன்" என்றான். நீ எப்படி அரக்கனாக உருவெடுத்தாய்? என்று இராமர் கேட்டார். அதற்கு விராதன், இராமா! நான் விண்ணுலகில் குபேரனது ஆட்சிக்கு உட்பட்டவன். தும்புரு எனும் கந்தர்வனாக விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருந்தேன்.
தேவலோகத்தில் அரம்பை என்னும் பெண்ணின் மீது காதல் கொண்டு அவளோடு கூடினேன். இதைக் கண்ட குபேரர் என்னை அரக்கனாகப் பிறக்கும்படி சாபமிட்டார். நான் செய்த தவறுக்காக வருந்தி, எனக்கு சாப விமோச்சனம் தர வேண்டினேன். குபேரர் 'நீ இராமனின் காலடிபட்டு சாப விமோச்சனம் பெறுவாய்" என்றார். அன்று முதல் இன்று வரை நான் தீய வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தேன். தங்களின் பொற்பாதம் என்மேல் பட்டதும் சாபம் நீங்கப் பெற்றேன் என்றான் விராதன். இராம பெருமானே! நான் இதுவரை செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து பொறுத்தருள்வாயாக! என்று சொல்லி கந்தர்வன் விண்ணுலகிற்குச் சென்றான்.
பிறகு மூவரும் அங்கிருந்து புறப்பட்டு தண்டகவனத்தை அடைந்தனர். தண்டகவனத்தில் அரக்கர்களின் தொல்லைகளால் அவதியுற்று வரும் முனிவர்களுக்கு இராமனின் வரவு மகிழ்ச்சியை அளித்தது. அனைவரும் ஒன்று சேர்ந்து இராமனிடம் சென்றனர். இராமரின் தோற்றத்தைக் கண்டு மெய்மறந்து நின்றனர். முனிவர்கள் மூவரையும் அழகிய ஓர் ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றனர். முனிவர்கள் இராமனிடம், இராமா! இனி நீங்கள் இங்கேயே தங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
அன்று இரவு முனிவர்கள் அவரவர் இடம் சென்று தங்கினர். மறுநாள் முனிவர்கள் அனைவரும் கூட்டமாக வந்து இராமனை தரிசித்தனர். முனிவர்களே! உங்களின் குறை என்ன? என்று இராமர் கேட்டார். முனிவர்கள் இராமா! இரக்க உணர்வு சிறிதும் இல்லாத அரக்கர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் செய்கின்ற அநியாயங்கள் காரணமாக அறநெறி துறந்தோம் தவச்செயல் நீத்தோம், புலி வாழும் காட்டில் வாழ்கின்ற மான்களைப் போல ஆனோம். எங்களுக்கு நற்கதி கிடைக்குமா?
அரக்கர்கள் செய்யும் கொடுமையை இந்திரனிடம் சென்று முறையிடலாம் என்றால், அவனோ அரக்கர்களுக்குப் பணிவிடை செய்பவனாக இருக்கிறான். பிறகு நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது? நாங்கள் செய்த தவத்தின் பயனாக தான் இப்போது நீ இங்கே வந்திருக்கிறாய். இராமா! சூரியனை போல நீ வந்திருக்கிறாய். எங்கள் வாழ்வில் சூழ்ந்திருக்கும் இருளை நீக்கி வெளிச்சத்தை கொண்டு வர வேண்டும். எங்கள் துயரங்கள் நீங்கவேண்டும். இராமர் முனிவர்களை தேற்றி கவலையை விடுங்கள். உங்களுக்கு இடர் புரிபவர் யாராயினும் அவர்கள் வேறு அண்டத்திற்கு சென்று ஒளிந்து கொண்டாலும் அவர்களை நான் விடமாட்டேன். அவர்கள் என் அம்புக்கு இரையாவது நிச்சயம். பயப்பட வேண்டாம் என்றார்.
முனிவர்களே! என் தந்தை இறந்ததும், என் தாய்மார்கள் துன்பம் அடைந்ததும், என் தம்பி என்னுடன் கஷ்டப்படுவதும், என் நகரத்து மக்கள் துன்பமடைந்ததும், நான் வனம் செல்ல நேர்ந்ததும், நான் செய்த புண்ணியத்தின் பலன் என்று நினைக்கிறேன். இராமர் சொன்னதும் முனிவர்கள் இராமா! அப்படி என்றால் உன் வனவாசம் முடியும் வரை நீ இங்கேயே தங்கி எங்கள் துன்பங்களை நீக்கி வாழவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
தொடரும்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக