Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 12 பிப்ரவரி, 2020

ஆயிரம் ரூபாய் செலவில் 2 கோடி ருபாய் மோசடி..! அக்ஷய பாத்திரம் மூலம் புதையலை தேடிய நபர்...

திருப்பத்தூரை சேர்ந்தவரிடம் அக்ஷய பாத்திரம் தருவதாக கூறி இரண்டு கோடி ரூபாய் பெற்று ஏமாற்றிய 8 பேர் கொண்ட கும்பலை சித்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்.


சித்தூர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி திருப்பத்தூரை சேர்ந்த நவீன் குமார் என்பவர் அக்ஷய பாத்திரம் எனக்கூறி தன்னிடம் 2 கோடியே 10 லட்சத்தை சிலர் மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்தார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் குடிப்பள்ளி ரயில் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இனோவா கார் ஒன்று வந்துகொண்டிருந்தது அதன்பின் மற்றொரு கார் அதன் பின் ஒரு பைக்கும் வந்து கொண்டிருந்தது.

அந்த இரண்டு கார் மற்றும் பைக்கை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் காரில் வந்தவர்கள் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர். அவர்கள் அனைவரையும் போலீசார் மடக்கிப் பிடித்து 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில் இவர்கள் அக்ஷய பாத்திரம் என்று கூறி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என தெரியவந்தது.
 
அவர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை பகுதியை சேர்ந்த மகாதேவா 42, கங்காதர் 30, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராமச்சந்திரா 40, கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை அடுத்த காம சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் 19, சித்தூர் மாவட்டம் கொத்தபள்ளி கிராமத்தை சேர்ந்த சீனப்பா 35 , கர்நாடக மாநிலம் பெங்களூர் மாரியம்மன் தெரு தனசேகர் 35 , காஞ்சிபுரம் மாவட்டம் ராஜகுளம் கிராமத்தை சேர்ந்த விநாயகம் 35 , கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சேகர் 28 ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் மகாதேவா என்பவரிடமிருந்து 8 லட்சத்து 95 ஆயிரம், கங்காதர் என்பவரிடமிருந்து 10 லட்சம், ராமச்சந்திரா என்பவரிடமிருந்து 50,000 , சிவகுமார் என்பவரிடமிருந்து 10 லட்சம், சீனப்பா என்பவரிடமிருந்து 25 லட்சம் , தனசேகர் என்பவரிடமிருந்து 50,000, விநாயகம் என்பவரிடமிருந்து 50,000, சேகர் என்பவரிடம் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் மகாதேவா குடிப்பள்ளி பகுதியில் தங்கியிருக்கும் ஹோட்டல் பின்புறத்தில் பிளாஸ்டிக் கவரில் 75 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மண்ணுக்கு அடியில் பதித்து வைத்திருந்ததையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் ஒரு கோடியே 29 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் 18 லட்சம் மதிப்புள்ள இனோவா கார், 2 லட்சம் மதிப்புள்ள ஒரு கார், 80 ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது . மேலும் இவர்களை விசாரணை செய்ததில் மற்றொரு நபரும் இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியான வேலூரை சேர்ந்த நபர் இருப்பதும் தெரியவந்தது.

ஆகையால் 3 தனிப்படை அமைத்து போலீசார் வேலூர் பகுதியில் தலைமறைவாக இருப்பவரை தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் திருப்பத்தூரை சேர்ந்தவர் நவீன்குமார் என்பவரிடம் சென்று இவர்கள் 9 பேரும் அட்சயபாத்திரம் இருப்பதாக தெரிவித்து, அவருக்கு ஆசை வார்த்தை கூறி இந்த அக்ஷய பாத்திரம் இருந்தால் பூமிக்கு அடியில் இருக்கும் தங்க புதையல்களை மிக எளிதாக கண்டுபிடித்து விடலாம் எனக் கூறியுள்ளனர்.

அதற்காக ஒரு டம்மி பாக்ஸை தயார் செய்து அதில் பேட்டரியால் செய்யப்பட்ட மின்விளக்குகளை அமைத்து நவீன் குமாரிடம் அந்த அட்சய பாத்திரத்தை காட்டி ஏமாற்றி உள்ளார்கள். இதனால் நவீன் குமார் அவர்கள் கேட்ட ரூபாய் 2 கோடியே 10 லட்சம் வழங்கியுள்ளார் .பின்னர் அவர் அந்த அட்சய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு தங்க புதையல் இருக்கும் இடத்தை தேடி உள்ளார்.

ஆனால் இவர்கள் வழங்கிய அக்ஷய பாத்திரம் புதையலை தேடித் தரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த பிறகுதான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தங்க புதையல் இருப்பதாக ஏமாற்றுபவர்களை யாரும் நம்ப வேண்டாம் என டிஎஸ்பி ஹரி ஃபுல்லா பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக