Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

சிவபுராணம்..!பகுதி 76

திரிபுர பட்டணங்களின் அழிவு என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை என்றும், மூன்று பட்டணங்கள் ஒன்றிணையும் போதும், அதுவும் ஒரே பாணத்தால் தான் அழிக்க வேண்டும் என்னும் வரத்தினைப் பெற்றுள்ளோம் என்று ஆணவம் கொண்டனர். ஆனால், அவர்களை அழிக்க வருகின்றவர்கள் எம்பெருமானான சிவபெருமானுடன் வந்துக் கொண்டிருப்பதை அவர்கள் அனைவரும் மறந்தனர்.

அணையப் போகின்ற விளக்கு பிரகாசமாக ஒளிர்வது போல, அசுரர்கள் அனைவரும் அனைத்து இன்பங்களையும் அனுபவித்ததோடு ஆணவத்தையும் வளர்த்துக் கொண்டனர். ஆணவம் எங்கே உதயமாகின்றதோ அப்பொழுதே அழிவிற்கான பாதைகளும், காலங்களும் வகுக்கப்பட்டுவிட்டன.

செய்கின்ற வினையின் பலனை அனுபவிக்காமல் எவரும் எந்நிலையானலும் தப்பிக்க இயலாது. திரிபுர வேந்தர்களான அசுரர்களின் பட்டணத்தை அடைந்ததும் எம்பெருமான் மேருமலையானால் ஆன வில்லை வளைத்து ஹூங்காரம் (சப்தம்) செய்தார்.

சிவபெருமானின் ஹூங்கார ஒலியில் இந்த பிரபஞ்சமும், அண்டச் சராசரங்களும் ஒடுங்கி நின்றன. இதனால் தனித்தனியாக இருந்த மூன்று பட்டணங்களும் ஒரு கணப்பொழுதில் ஒன்றிணைந்தன.

திரிபுரங்கள் ஒன்றிணைந்ததை கண்ட தேவர்கள் ஆனந்தம் கொண்டனர். அவ்வேளையில் அங்கு கூடி இருந்த அனைத்து தேவர்களும், சித்தர்களும் சிவபெருமானை துதித்து பாடினர். அவ்வேளையில் பிரம்ம தேவரோ இதுவே திரிபுரத்தை அழிப்பதற்கான சிறந்த காலம் என்று கூறினார். மேலும், காலங்கள் தவறினால் திரிபுரம் பிரிந்து சென்றுவிடும் என்றும், அதனால், தாங்கள் உடனே பாணத்தை ஏவ வேண்டும் பிரபுவே என்று சிவபெருமானிடம் கூறினார்.

பின் சிவபெருமான் தன் கரங்களால் பாணத்தை வைத்து திரிபுரத்தை அழிக்க ஆயத்தமானார். மூன்று பட்டணங்கள் ஒன்றிணைவதை சற்றும் எதிர்பார்க்காத அசுரர்கள் என்ன செய்வது என்று அறியாமல் தன் எதிரிகளான தேவர்களையும், அவர்களுடன் இருக்கும் பரம்பொருளான சிவபெருமானையும் தாக்க ஆரம்பித்தனர்.

இவர்களின் செயல்களால் சினத்தின் எல்லைக்கு சென்ற எம்பெருமான் தனது மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணை திறந்து திரிபுர பட்டணங்களை சினத்துடன் பார்த்தார். அவருடைய பார்வையில் இருந்து வெளிவந்த கட்டுங்கடங்காத நெருப்பு சுவாலையால் திரிபுர நகரங்கள் யாவும் எரிந்தன.

எம்பெருமானான சிவபெருமானின் பார்வையில் இருந்து வந்த நெருப்பு சுவாலையால் எரிந்துக் கொண்டிருந்த பட்டணங்களை கண்ட பிரம்ம தேவர் சிவபெருமானிடம் இந்த அசுரர்களை அழிக்க அனைத்து தேவர்களும் ஒன்றிணைந்து உருவாக்கிய அஸ்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்று வேண்டினார்.

பிரம்ம தேவரின் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட சிவபெருமான் பாசுபதாஸ்திரம் என்னும் பாணத்தை எரிந்து கொண்டிருந்த திரிபுர பட்டணங்களை நோக்கி எய்தார். பாணமானது கணப்பொழுதில் திரிபுர பட்டணத்தை நிர்மூலமாக்கி அங்கிருந்த அனைத்து அசுரர்களையும் அழித்து பின்பு சிவபெருமானின் கரங்களுக்கு வந்தது.

அழிந்த திரிபுர பட்டணத்தில் மாய கலைகளில் வித்தகர்களின் போதனைகளை கேட்டாலும், எம்பெருமான் மீது நம்பிக்கை கொண்டு சிவபூஜையை கைவிடாது நடத்தி வந்த அசுரர்கள் சிவகணங்கள் என்னும் பதவியை அடைந்தனர்.

ஆனால், சிவபெருமானின் நெற்றிக்கண்ணானது அனல் விடும் சுவாலையுடன் திறந்த நிலையிலும், மிகவும் உக்கிரமாகவும் இருந்தது. அவரின் இந்நிலையை கண்ட பிரம்மா, திருமால் மற்றும் தேவர்கள் முதலானோர் என்ன செய்வது என்று அறியாமல் திகைப்புடன் நின்றனர்.

அவரை சாந்தம் கொள்ள தோத்திரம் (ஸ்தோத்திரம்) செய்து அவரவர்கள் தனித்தனியாக அவரிடம் பணிந்து எந்நிலையிலும் சிவசிந்தனையுடன் இருக்க வேண்டும் என்று வேண்டி நின்றனர்.

பிரபஞ்சத்தில் உள்ள உயிர்களுக்கும், எங்களுக்கும் இன்னல்களை ஏற்படுத்தி வந்த அசுரர்கள் அனைவரும் அழிந்துவிட்டனர். அனைவரின் இன்னல்களையும் போக்கிய சர்வேஸ்வரா கோபத்தை விடுத்து சாந்தம் அடைய வேண்டும் என்றும், இல்லையேல் அனைத்து உயிர்களும் மற்றும் பிரபஞ்சமும் பாதிக்கப்படும் என அங்கிருந்த தேவர்கள் மனமுருகி வேண்டி நின்றனர்.

பிரம்ம தேவரோ சிவபெருமானிடம் நான் என்றும் உங்களிடம் பக்தியுடனும், சாரதி தொழிலும், எனக்கு என்றும் நிலைப்பெற்று இருக்க வேண்டும் என்றார். மேலும், திருமாலும் சிவபெருமானிடம் உங்களிடம் நான் என்றும் பக்தியுடையவராக இருக்க வேண்டும் என்று வேண்டினார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக