Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

பீமனுக்கு கிடைக்கும் பலம்...!


பீமனை அழைத்துச் செல்ல சகோதரர்கள் நால்வர் அங்கு வந்தனர். பீமனை அங்கு காணாததால் அவனை அனைத்து இடத்திலும் தேடிச் சென்றனர். பீமனை காணாமல் அனைவரும் கவலையில் இருந்தனர். ஒரு வேளை பீமன் நமக்கு முன் அரண்மனைக்கு சென்றிருக்கலாம் என நினைத்து அனைவரும் அரண்மனைக்கு வந்தனர். அரண்மனைக்கு வந்த சகோதரர்கள் தன் தாய் குந்தியிடம் பீமன் வந்துவிட்டானா? எனக் கேட்டனர். குந்தி, பீமன் இன்னும் இங்கு வரவில்லை. நீங்கள் நால்வர் மட்டும் இங்கு வந்துள்ளீர்கள். பீமன் எங்கே? என பதற்றத்துடன் கேட்டாள். அவர்கள் நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறினர்.

இதைக் கேட்டு கோபமடைந்த குந்தி நீங்கள் அனைவரும் பீமனை தேடி கண்டுபிடித்து என்னை வந்து பாருங்கள். இல்லையேல் யாரும் என் முகத்தில் விழிக்க வேண்டாம் என கோபத்தில் கூறிவிட்டாள். சகோதரர்கள் அனைவரும் பீமனை தேடச் சென்றனர். குந்தி விதுரரை அழைத்து, பீமனை காணவில்லை. எனக்கு துரியோதனன் மேல் தான் சந்தேகம் இருக்கிறது. ஏனேனில் துரியோதனன் அரியணை ஏற விரும்புகிறான். அதுமட்டுமல்லாமல் பீமனை அவனுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவன், பீமனை ஏதேனும் செய்து இருப்பானோ? எனக் கூறினாள்.

விதுரர், தேவி! தாங்கள் இவ்வாறு பேசுதல் கூடாது. துரியோதனனை பற்றி வேறு எவரிடமும் இவ்வாறு கூறாதே. பீமன் நிச்சயம் திரும்பி வருவான். நீ கவலைக் கொள்ளாமல் இரு என ஆறுதல் கூறிவிட்டுச் சென்றார். பீமனை எங்கு தேடியும் கிடைக்காததால் சகோதரர்கள் வருத்தத்துடன் திரும்பினர். பீமனின் உடல் நதிக்கு அடியில் இருக்கும் நாகலோகம் வரைச் சென்றது. அங்கிருந்த விஷப்பாம்புகள் பீமனின் உடலில் ஏறி அங்கும் இங்கும் கடித்தன. பீமனின் உடலில் இருந்த விஷம், பாம்புகளின் விஷத்தால் முறிந்து போனது. அதன் பிறகு பீமன் மயக்கம் தெளிந்து எழுந்தான். தன் உடலின் மேல் இருந்த பாம்புகளை தூக்கி எறிந்தான்.

பாம்புகள், பீமனை மடக்கி தங்கள் அரசனிடம் அழைத்துப் சென்றன. நாகங்கள் அவனுக்கு நீந்தவும், மூச்சு அடக்கவும் கற்றுக் கொடுத்தன. பாம்புகள், பாம்புகளின் மன்னனான வாசுகியிடம், மன்னா! விஷம் அருந்திய இவன் நீரில் மூழ்கி இங்கு வந்தான். இவனை நாங்கள் கடித்ததால் உணர்வு பெற்று, எங்களை துன்புறுத்துகிறான். நீங்கள் தான் இவனை யார்? என்று விசாரிக்க வேண்டும் என்றனர். பீமனின் ஆற்றலைக் கண்டு நாகராஜன் மகிழ்ச்சி அடைந்தான். பீமன் சாதிக்க பிறந்தவன் என்பதை அறிந்துக் கொண்டான். அதன் பின் நாகராஜன் பீமனிடம், பீமா! எங்களிடம் பலம் கொண்ட அமிர்தங்கள் இருக்கின்றன. உன்னால் எவ்வளவு முடியுமோ? அவ்வளவு குடிக்கலாம் எனக் கூறி கொடுத்தார். பீமன் நாகராஜன் கொடுத்த எட்டு குடம் அமிர்தத்தையும் ஒரே மூச்சில் குடித்தான்.

அமிர்தத்தை குடித்த பீமனுக்கு புது பலம் பெற்றது போல் இருந்தது. அதன் பின் பீமன், வாசுகியிடம் இருந்து விடைப்பெற்றான். நதியின் அடியில் இருந்து பீமன் கரையேறி அரண்மனையை சென்று அடைந்தான். பீமனை கண்ட அனைவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். பீமன் உயிருடன் திரும்பி வந்ததை பார்த்த துரியோதனன் அளவற்ற கோபம் அடைந்தான். சகுனி, மருமகனே! நீ கோபப்படாதே. இவனுடன் சேர்த்து மற்ற சகோதரர்களையும் கொல்வதற்கான வழியைப் பார்ப்போம் என்றான்.

தனக்கு விஷம் கொடுத்து நதியில் தன்னை எறிந்த துரியோதனனை மிகவும் கோபங்கொண்டு பீமன் பார்த்தான். அதன் பின் அனைவரும் அவரவர் மாளிகைக்கு திரும்பி சென்றனர். பீமன், குந்தியிடமும், சகோதரர்களிடமும், நடந்தவற்றை விவரமாக கூறினான். யுதிஷ்டிரன், சகோதரர்களே! இனி நாம் கவனமுடன் செயல்பட வேண்டும். துரியோதனன் தான் இந்த செயலை செய்தான் என யாரும் வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம். துரியோதனிடமும், நாம் எதையும் காட்டிக் கொள்ள வேண்டாம். அப்பொழுது தான் அவன் செய்யும் தவறு என்னவென்பது நமக்கு தெரியும்.

அதன்பிறகு தான் துரியோதனனும், சகுனியும் பாண்டவர்களை அழிக்க நிறைய ஆலோசனை செய்கிறார்கள் என்பது யுயுட்சு மூலம் விதுரருக்கும், யுதிஷ்டிரனுக்கும் தெரியவந்தது. அதன் பிறகு பாண்டவர்கள் எல்லா செயல்களிலும் கவனமுடன் செயல்பட்டனர். இச்செய்தி திருதிராஷ்டிரனுக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவன் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. திருதிராஷ்டிரன், குழந்தைகள் அனைவரும் விளையாட்டுதனமாக இருப்பதால், அவர்கள் அனைவரும் வில்வித்தை கற்க விரும்பினான். பீஷ்மர் வில்வித்தை கற்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக