வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

இராமர் வில்லை வளைத்தல்


 றுபதினாயிரம் பேர் வில்லைச் சுமந்துகொண்டு வந்து யாக சாலையில் வைத்தார்கள். அங்கு கூடியிருந்த மன்னர்கள் வில்லை பார்த்தவுடன் வளைக்கும் ஆற்றலின்றி மடங்கி இருந்தார்கள். ஒரு மன்னன் வில்லை பார்த்துவிட்டு வந்து ஆசனத்தில் அமர்ந்தான். அருகில் இருந்த மன்னன், எங்கு சென்றாய்? வில்லை தூக்க போனாயா? என கேட்டான். அவன், நான் வில்லை தூக்கப் போகவில்லை. வில்லை பார்க்க தான் போனேன் என்றான். இன்னொருவன் வில்லிடம் சென்று கைகளுக்கு அடங்குகிறதா? இல்லையா? என்பதை பார்க்க சென்றான். அவன் கைகளுக்கு அந்த வில் அடங்கவில்லை. மற்றொருவன் வில்லை தூக்க முயன்று, முடியாமல் அவமானத்துடன் வந்து தன் இருக்கையில் அமர்ந்தான். ஒருவன் எனக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் என்றான். இன்னொருவன் சீதை எனக்கு தங்கை போன்றவள் என்றான். இவ்வாறு ஒரு காரணம் காட்டி எவரும் வில்லை வளைப்பதற்கு முன் வரவில்லை.

 இந்த அழகிய மகளை வில்லை வளைத்தால் தான் பெண் தருவேன் என்பது முட்டாள் தனமாகும். இந்த வில்லை யாராலும் வளைக்க முடியாது. இந்த வில்லை வளைக்கப் போகின்றவனும் இல்லை. அதேபோல் சீதைக்கும் திருமணமும் ஆகாது என்று அங்கு கூடியிருந்தவர்கள் பலவாறு பேசிக் கொண்டனர்.

 ஜனகரின் புரோகிதரான சதானந்தர் இராம லக்ஷ்மணர்களிடம் சிவதனுசின் வரலாற்றை கூறுகிறார். ஒரு முறை தக்கன் பெரியதொரு யாகம் செய்தான். யாகத்திற்கு வருகை தருமாறு பிரம்மா, விஷ்ணு, இந்திரன், சந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கு அழைப்பு விடுத்தான். ஆனால், சிவனுக்கு அழைப்பு அனுப்பவில்லை. சிவபெருமானை அவமதித்ததால் சிவபிரான் வீரபத்திரனிடம் வேள்வியை அழிக்குமாறு கூறுகிறார். அவர் தேவர்கள் மற்றும் வேள்வியையும் அழித்தார். பின்னர் கோபம் தணிந்த சிவபிரான் தேவர்களை மீண்டும் உயிர்கொடுத்தார். தேவர்கள் கோபம் தணிந்த பின்னும் சிவபிரான் கையில் வில் ஏந்தி இருப்பதை கண்டு அஞ்சினார்கள். சிவபெருமான் தன் வைத்திருந்த வில்லை ஜனகன் குலத்து முன்னோர் ஒருவனிடம் கொடுத்துவிட்டார். இவ்வில்லின் வரலாறு இதுதான் ராமா!

 இராமா! சீதை பற்றி கூறுகிறேன், வேள்விச்சாலை அமைப்பதற்காக நிலத்தை ஏர் உழும்பொழுது இப்பெண்மகள் எங்களுக்கு சீதையாக கிடைத்தாள். மேன்மையான குணங்கள் கொண்ட சீதையை திருமணம் செய்ய போட்டி போட்டுக் கொண்டு மன்னர்கள் வந்தனர். ஆனால் ஜனகர் சிவதனுசை வளைப்பவருக்கு தான் சீதை மணமுடிப்பதாக அறிவித்தார். போட்டி போட்டு கொண்டு வந்த மன்னர்கள் தனுசை வளைக்க முடியாததால் கோபம் கொண்டு ஜனகர் மீது போர் தொடங்கினர். ஜனகரின் படைகள் அவர்களை தோற்கடித்துவிட்டனர். இதனால் ஜனகர் சீதையின் திருமணம் தடைப்பட்டு விடுமோ என பயம் கொண்டு இருக்கிறார். தாங்கள் இந்த சிவதனுசை வளைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என்றார் சதானந்தர்.

 முனிவர் இராமனைக் கடைக்கண்ணால் நோக்கி, இந்த சிவதனுசு பல ஆண்டுகளாக அபிஷேகம் செய்து இற்றுப் போனது. இந்த தனுசு இராவணன் சம்காரத்திற்கு உதவாது. உனக்கு பரசுராமர் கோதண்டத்தை தருவார். இந்த வில்லை வளைக்க வேண்டாம், ஒடித்துவிடு என்று கூறினார். முனிவருடைய கடைக்கண் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்டு இராமன் அந்த சிவதனுசை நோக்கினான். தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தான். தேவர்கள் ஆரவாரம் செய்தனர்.

இராமர் வீரத்துடன் நடந்து சென்று அந்த வில்லை எடுத்து நாணைப் பிடித்து இழுத்தார். ஒரு நொடியில் வில் படார் என்று ஒடிந்தது. வில் உடைந்த ஓசையினால் பூவுலகம் எல்லாம் அதிர்ந்தன. எட்டுத் திசைகளிலும் வில் உடைந்த ஓசை கேட்டது. இராமருக்கு தேவர்கள் மலர்மழை பொழிந்தார்கள். இதை பார்த்த ஜனகருக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. மிதிலாபுரியிலுள்ள அனைவரும் ஆடி, பாடி கொண்டாடினார்கள். என் உயிரினினும் மேலான என் மகள் சீதையை இராமருக்கு தருகிறேன் என்றார், ஜனகர்.

தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்