திங்கள், 10 பிப்ரவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 84


 நான் என்ன செய்வேன்? என்று மன வேதனையோடு நின்று கொண்டிருந்த அனுசுயா தேவிக்கு உதவுவதற்காக காத்துக் கொண்டிருந்த கங்கா தேவி அங்கு உதயமானார். அனுசுயா தேவியிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேள்.. நான் உனக்கு அளிக்கின்றேன் என்றார்.

யாருமில்லாத அந்த வனத்தில் கங்கா தேவியை கண்டதும் தேவியே தாங்கள் யார்? என நான் அறிந்து கொள்ளலாமா என அனுசுயா தேவி கேட்டார். நான் தான் கங்கா தேவி. நீ சிரத்தையோடு செய்து வந்த பதிவிரதத்தையும், உன் கணவரையும், எம்பெருமானான சிவபெருமானையும் பூஜை செய்து வருவதை அறிந்தேன். அதைக் காணவே நான் இங்கு வந்தேன் என்று கங்கா தேவி கூறினார்.

கங்கா தேவி கூறியதைக் கேட்ட அனுசுயா தங்களை கண்டதில் மிகுந்த மகிழ்ச்சியும், என் மனம் எல்லையில்லா பேரானந்தம் அடைந்ததாகவும் கூறினார். பின்பு தேவியிடம் என் கணவர் யோக நிலையில் இருந்து விழிப்புற்று ஆசமனம் செய்ய நீர் வேண்டும் என எடுத்து வரச் சொன்னார். இந்த வனத்தில் நிலவும் வறட்சியால் எங்கும் ஒரு துளி நீரும் எனக்கு கிடைக்கவில்லை.

தாங்கள்தான் எனக்கு சிறிது நீர் கிடைக்க அருள வேண்டும் என வேண்டி நின்றார் அனுசுயா தேவி. முகம் மலர்ச்சியோடு கங்கா தேவி அனுசுயாவிடம் நீ இருக்கும் இடத்தில் கைகளால் சிறு குழியை தோண்டினால் உனக்கு வேண்டிய நீரானது உன் விருப்பத்திற்கு ஏற்றபடி கிடைக்கும் என கூறினார்.

கங்கா தேவி கூறியதை கேட்ட அனுசுயா தேவி மன மகிழ்ச்சியோடு நிலத்தில் சிறு குழியை தோண்டினார். அந்த குழியில் இருந்து நீரானது ஊற்றை போல் வெளிப்பட்டது. நீரை கண்டதும் அனுசுயா தான் கொண்டு வந்த மண் பானையில் நீரை நிரப்பிக்கொண்டு பின் கங்கா தேவியை பணிவோடு வலம் வந்து வணங்கி தேவியிடம் ஒரு வேண்டுதலையும் வேண்டினார்.

அதாவது, கங்கா தேவியிடம் எங்களுடைய தவம் நிறைவடையும் வரை தாங்கள் எங்கும் செல்லாது இங்கே இருக்க வேண்டும் என்பதே அந்த வேண்டுதலாகும். கங்கா தேவியும் சிறு புன்னகை உதிர்த்தப்படியே, அனுசுயா உன்னுடைய வேண்டுதலை நிறைவேற்ற வேண்டுமாயின் உன் கணவருக்கு நீர் செய்த பணிவிடையால் கிடைத்த பலனில் ஒரு மாதத்திற்கான பலனை நீ எனக்கு அளிக்க வேண்டும் என்றும், அப்பலனை அளித்தால்தான் இங்கே உனக்காக காத்திருப்பேன் என்றும் கூறி பலனை அளிப்பாயா? எனக் கேட்டார்.

கங்கா தேவி கூறியதைக் கேட்டதும் அனுசுயா தேவி மிகவும் மகிழ்ச்சியோடு தாங்கள் கேட்ட ஒரு மாத பலனை நான் உங்களுக்கு அளிக்கின்றேன் என கூறினார். பின்பு கங்கா தேவியை வணங்கி நீர் நிறைந்த மண் பானையை எடுத்துக்கொண்டு தன் பதியானவர் இருக்கும் ஆசிரமத்தை நோக்கி விரைவாக நடந்தார்.

அனுசுயா தேவி தோண்டிய இடத்தில் இருந்து நீரானது வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது. ஆசிரமத்தை அடைந்த அனுசுயா தேவி தன் பதியானவருக்கு ஆசமனம் செய்ய போதுமான நீரை ஒரு சிறிய மண் பானையில் வழங்கினார்.

அத்திரி முனிவரும் நீரை வாங்கி ஆசமனத்திற்கு உண்டான மந்திரத்தை கூறி வலது உள்ளங்கையில் பசுவின் காதுகளை போன்ற கோகர்ண முத்திரையோடு உளுந்து முழுவதுமாக மூழ்கும் அளவு சிறிது நீரை ஊற்றி சுண்டு விரலையும், கட்டை விரலையும் பிரித்து நீரை பருகினார். இதேபோன்று மூன்று முறை பருகினார். ஆசமனம் செய்து முடித்ததும் அத்திரி முனிவருக்கு ஒரே ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில், தான் இதற்கு முன்பு பருகிய நீரின் சுவையினை விட இன்று ஆசமனம் செய்த நீரின் சுவையானது மிகவும் தித்திப்போடும், அதே சமயம் சுவையாகவும் இருக்கின்றதே என எண்ணிணார்.

பின்பு தான் தங்கி இருக்கும் ஆசிரமத்தை சுற்றியும் பார்த்தார். அப்போது யோக நிலைக்கு செல்லும் போது வளமாக இருந்த வனங்கள் யாவும் வறண்டு காணப்பட்டன. அப்படி இருக்கையில் இந்த நீரானது இவ்வளவு சுவையாக உள்ளதே என எண்ணி தம் துணைவியை அழைத்தார் அத்திரி முனிவர்.

பின்பு, அனுசுயா தேவியிடம் எங்கும் நீரில்லை, வனமே வறண்ட காடாக இருக்கும் பட்சத்தில் எங்கிருந்து நீர் கொண்டு வந்தாய் என்று கேட்டார் அத்திரி முனிவர். அனுசுயா தேவி தன் பதியிடம் என்ன உரைப்பது என அறியாமல் நின்றார்.

ஏனெனில், தன்னுடைய பதிவிரத தன்மையால் கங்கை தேவி தோன்றி தனக்கு நீர் கொடுத்தார் என்று சொன்னால் தன் பதியானவரின் யோகத்தை விட தன்னுடைய நிலையை உயர்த்திக் கூறுவதாக, அதாவது தற்புகழ்ச்சியாகி விடுமோ என எண்ணி என்ன சொல்வது என சிறிது நேரம் அமைதியாக நின்றார்.

அமைதியாக நின்ற தன் துணைவியிடம் மீண்டும் மீண்டும் அத்திரி முனிவர் கேட்டார். பின்பு அனுசுயா தேவி நிதானமாக தனது பதியிடம் நிகழ்ந்தவற்றை அனைத்தையும் தெளிவாக கூறினார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்