வியாழன், 13 பிப்ரவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 91


மதர்மராஜன் வீசிய பாசக்கயிறானது சுவேதனின் கழுத்தை நெருங்கி அவரது உயிரை பறிக்கத் தொடங்கியது. பாசக்கயிறானது தனது உயிரை பறிக்க வரும் தருவாயிலும் மனதில் எவ்விதமான அச்சமும் இன்றி சுவேதன் இருந்தார். இருப்பினும் தான் இறக்கும் காலத்தை நன்கு உணர்ந்த சுவேதன் தன்னுடைய உயிரானது தான் என்றும் வழிபடும் சிவபெருமானின் பாதங்களிலேயே பிரிய வேண்டும் என்று எண்ணினார்.

பின்பு தான் வழிபடும் சிவலிங்கத்தின் மீது விழுந்து சிவலிங்கத்தை வாரி அணைத்துக் கொண்டார். அந்நிலையிலும் சுவேதனின் கண்களில் சிறிதும் அச்சமுமின்றி பேரானந்தம் மட்டுமே இருந்தது.

மனதில் பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் தனது உயிரின் இறுதி மூச்சை விடும் வரையிலும் சிவபெருமானை எண்ணிக் கொண்டே இருந்தார் சுவேதன். தன் பக்தன் அடையும் துன்பங்களை கண்ட சிவபெருமான் கரங்களில் சூலாயுதத்தை ஏந்திய வண்ணம் பக்தனுக்கு(சுவேதனுக்கு) காட்சியளிக்க அவ்விடத்தில் தோன்றினார்.

தன்னுடைய பக்தனின் கழுத்தில் உள்ள பாசக்கயிற்றால் அவன் துன்பம் அடைவதை கண்ட சிவபெருமானின் கண்களில் கோபம் மிகுந்தது. எம்பெருமான், எமனை தன் சினம் கொண்ட பார்வையால் ஒரு கணம் கண்டதும் அந்த பார்வையின் உக்கிரத்தை தன்னால் தாங்க இயலாமல் எமதர்மராஜன் தான் அமர்ந்து கொண்டிருந்த எருமை வாகனத்தில் இருந்து கீழே விழுந்து மடிந்தார்.

திடீரென தன்னுடைய கழுத்தை இறுக்கிக்கொண்டு இருந்த பாசக்கயிறானது வலிமை இழந்து விட்டது என்பதனை அறிந்த சுவேதன் கண் விழித்து பார்த்தப்போது அங்கே சிவபெருமான் இருப்பதைக் கண்டதும் சுவேதன் அளவில்லா ஆனந்தம் கொண்டார்.

இந்த எளிய பக்தன் தங்கள் மீது கொண்டுள்ள பக்தியை கண்டு தன்னை அழிக்க வந்த எமனிடமிருந்து என்னை காக்க வந்த எம்பெருமானின் பேரருளை நான் என்னவென்று போற்றுவேன் என மனமுருகி எம்பெருமானை பலவாறு துதித்துப் போற்றினார்.

எம்பெருமானான சிவபெருமான் சுவேதனை கண்டு உனது பக்தியால் யாம் மனம் மகிழ்ந்தோம். வேண்டும் வரத்தினை கேட்பாயாக என்று கூறினார். சுவேதன் எம்பெருமானை வணங்கி, அனைத்து உயிர்கள் இடத்திலிருக்கும் பரம்பொருளே நான் என்றும் தங்கள் மீதான எண்ணங்களுடன் தங்களின் அருகிலேயே இருக்க தாங்கள் அருள வேண்டும் என வேண்டினார்.

சுவேதனின் வேண்டுதலை கேட்ட கருணைக்கடலான சிவபெருமான் யாருக்கும் கிடைக்காத அரிய இடமான கைலாச பதவியை உமக்கு அளிக்கின்றோம். இக்கணம் முதல் என்றுமே என்னருகிலேயே இருப்பாயாக என்று கூறினார்.

அவர் கூறியதைக் கேட்ட சுவேதன் மனம் மகிழ்ந்து எம்பெருமானே! எமதர்மராஜன் தங்களால் அவருக்கு இடப்பட்ட பணியை செய்யவே என்னை தேடி இவ்விடம் வந்துள்ளார். இதில் அவர் மீது எவ்விதமான தவறும் இல்லை. ஐயனே!! இந்த பிரபஞ்சத்தில் பிறக்கும் அனைத்து உயிர்களின் கடைசி காலத்தை முடித்து எமலோகம் அழைத்துச் செல்வதே எமதர்மராஜாவின் பணியாகும்.

ஆகையால், உயிர்களிடத்தில் எவ்விதமான வேறுபாடுமின்றி நடந்துகொள்ளும் தர்மராஜாவான எமனை மன்னித்து அவருக்கு மீண்டும் உயிர் பெற்று வர அருள வேண்டும் என வேண்டினார். சிவபெருமானும் காலதேவன் மீது கொண்டுள்ள கோபத்தை விடுத்து, காலதேவன்(எமன்) இந்த பிரபஞ்சத்தில் ஆற்ற வேண்டிய முக்கிய பங்கினை நினைத்து தர்மராஜாவான எமனை உயிர்பித்தார்.

எம்பெருமானான சிவபெருமான் கொண்ட கருணைப் பார்வையால் உயிர் பெற்று எழுந்த எமதர்மராஜன் சிவபெருமானை வணங்கி பலவாறு துதித்துப் போற்றினார். பின்பு, சுவேதனை வணங்கி எம்பெருமானான சிவபெருமானின் மீது உண்மையான பக்தி கொண்டவர்களுக்கு எவ்வளவு பெரிய இன்னல்கள் ஏற்பட்டாலும் பரம்பொருளான சிவபெருமான் அவர்களை கைவிடாது காப்பாற்றுவார் என்பதை தங்களது பக்தியின் மூலம் இந்த பிரபஞ்சம் அறிய இந்த திருவிளையாடல் நிகழப்பட்டுள்ளது.

இதில் தங்கள் மூலம் நானும் இத்திருவிளையாடலில் ஒரு அங்கமாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைக்கிறேன் என்றார் தர்மராஜா. பின்பு, பிரபஞ்சத்தின் அனைத்துமாய், அணுவுமாய் இருக்கும் பரம்பொருளான சிவபெருமானை வணங்கி, விடைப்பெற்று தனது வாகனமான எருமையின் மீது அமர்ந்து தனது நகரமான எமபுரியை அடைந்தார் எமதர்மராஜன். சுவேதனும், எம்பெருமான் அருளிய வரத்தினால் திவ்ய ரூபம் பெற்று சிவபெருமானுடன் கைலாயம் சென்றார்.

எம்பெருமானான சிவபெருமான் மீது கொண்ட பக்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பமானது சூரிய ஒளியினால் கணப்பொழுதில் விலகும் இருளைப் போன்று விலகும். எனவே, ஈசனை பணிந்து வணங்கினால் மரணத்தையும் வெல்லலாம். அனுதினமும் சிவபெருமானை மனதார வணங்கிவர அவர்கள் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் மலரும்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்