அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் தன்னுடைய தவத்தின் பயனாக பெற்ற சஞ்சீவினி மந்திரத்தால் இறந்த அசுரர்களுக்கு உயிர் அளித்தும் அந்த போரில் அசுரர்களால் வெற்றி கொள்ள முடியாமல் மீண்டும் பாதாள லோகத்திற்கே தேவர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த தேவ, அசுர யுத்தத்தில் வெற்றிக்கனியை மட்டுமே உண்ண வேண்டும் என எதிர்பார்த்த அந்தகாசூரன் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இனி இந்த மந்திர மலையில் வாழ்வது நமக்கு நல்லது அல்ல என உணர்ந்தான் அந்தகாசூரன். தோல்வியடைந்த அசுரர்களான இவர்களுடன் இருப்பதை காட்டிலும் தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை அமைக்க வேண்டும் என்றும், அதில் தன்னுடைய அனுமதியின்றி எவராலும் வர இயலாத வகையில் இருக்க வேண்டும் என்றும் எண்ணினான்.
தனக்கென்று எவராலும் தாக்க இயலாத தனிப்பிரதேசம் வேண்டும் என்று எண்ணி அசுரலோக சிற்பியான மயனை கண்டார். பின் தன்னுடைய எண்ணங்கள் யாவற்றையும் கூறி அதற்கு தகுந்தாற்போல் ஒரு நகரத்தை அமைக்க வேண்டும் என வற்புறுத்தினார்.
பிரம்மதேவரிடம் வரம் பெற்ற அந்தகாசூரனிடம் தன்னால் செய்ய இயலாது என்று மறுத்து பேச முடியாமல், அவர் வேண்டும் வண்ணம் கொண்ட பல சிறப்புகளை உடைய நகரம் அமைத்து தருவதாக கூறினார்.
அந்தகாசூரன் தனது ராஜ்ஜியமானது எவரும் அறியா வண்ணம் இருக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் நகரத்தின் அமைப்பும், அதன் பாதுகாப்பும் இருக்க வேண்டும் என்று கூறினார்.
அசுர லோக சிற்பியான மயன் இம்முறை அந்தகாசூரன் வேண்டிய நகரத்தை தரையின் மீதோ, பாதாள லோகத்திலோ அல்லது எங்கும் விரிந்து இருக்கும் வான்வெளி மண்டலங்களில் அமைக்காமல் எளிதில் எவரும் அறிந்திடா வண்ணம் அமைத்துக் கொடுத்தார்.
அதாவது அந்தகாசூரனுக்கு வேண்டிய நகரமானது மானிடர்கள் வாழும் நிலப்பரப்பிற்கும், அசுரலோகத்தின் ஆரம்பத்திற்கும் அதாவது நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட கடலின் ஆழப்பகுதியிலே நிருதி மூலையில் பிலத்துவாரத்தினுள்(ஒரு சிறிய துளை) ஒரு மிகப்பெரிய விஸ்தாரமான நகரத்தை அந்தகாசூரன் வேண்டியபடி மயன் வடிவமைத்துக் கொடுத்தார்.
அந்தகாசூரனுக்காக அசுர லோக சிற்பி வடிவமைத்த நகரமானது தேவர்கள் வாழும் சொர்க்க லோகத்தை போல் அனைத்து வசதிகளும் நிறைந்து, காண்போரை கவரும் விதத்தில் பலவிதமான சிற்ப அலங்காரங்களுடன் இருந்தது. அந்த நகரத்தின் இருப்பிடத்தை அவ்வளவு எளிதில் எவரும் அறியா வண்ணம் அந்தகாசூரன் மட்டுமே அறியும் விதத்திலும் அமைத்திருந்தார்.
அதுமட்டுமின்றி, அந்தகாசூரன் தன் விருப்பம் போல் வெளியேறி விட்டு தனது பணிகளை முடித்த பின்பு தனது நகரத்தை அடையும் விதமாக சில பாதுகாப்பு வசதிகளுடனும் நிறுவிக் கொடுத்தார் அசுர லோக சிற்பியான மயன். அதாவது இந்த நகரத்தின் வடிவமைப்பு என்பது ஒரு சிறிய துளையின் வழியே சென்று விஸ்தாரமுடைய பெரிய பரப்பை அடைவது போல் அமைக்கப்பட்டது.
தனக்கென்று ஒரு நகரம் கிடைத்த மகிழ்ச்சியில் அந்தகாசூரன் தனக்கு ஆதரவான சில அசுரர்களை கொண்டு தனது ராஜ்ஜியத்தை நடத்தி வந்தான். அந்தகாசூரனுடன் இருந்த அசுரர்கள் அவனது பலத்தை கொண்டு தனக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொண்டனர். அதுமட்டுமில்லாமல் அந்தகாசூரனுக்கு தவறான போதனைகளை அளித்து தேவர்களுக்கு எதிராகவும், அதே சமயம் மது, மாது என சுகபோகங்களுக்கும் அந்தகாசூரனை அடிமையாக்கினார்கள்.
அந்தகாசூரன் பிலத்துவாரம் மூலம் அவ்வப்போது வெளிப்பட்டு தேவர்களுக்கும், பூவுலகில் வாழும் மக்களுக்கும் பலவிதமான இன்னல்களை அளித்து விட்டு கணப்பொழுதில் அவ்விடத்தை விட்டு தனது இருப்பிடத்திற்கு சென்றான். தேவர்களும் அந்தகாசூரனின் இருப்பிடத்தை கண்டறிந்து தாக்கும் பொருட்டு மேற்கொண்ட முயற்சிகள் யாவும் செயலற்று போயின. தேவர்களால் அந்தகாசூரனின் இருப்பிடத்தை கண்டறிய முடியவில்லை.
அந்தகாசூரனின் தாக்குதல் தொடர்ந்த வண்ணமே இருந்தது. தேவர்கள் அந்தகாசூரனின் எதிர்பாராத தாக்குதல்களால் கலக்கம் அடைந்தனர். தேவர்கள் கலக்கம் அடைந்த தகவலானது அசுரலோகம் வரையிலும் பரவியது. அதனால், அசுரர்கள் மத்தியில் அந்தகாசூரன் ஒரு மாபெரும் வீரனாக மதிக்கப்பட்டார். அசுர குருவின் ஆதரவும் அந்தகாசூரனுக்கு கிடைக்கப்பெற்றது.
மாபெரும் வீரனாக இருந்த போதும் சிலரின் துர்போதனைகளால் மது, மாதுவின் சுகபோகங்களில் திளைத்துக் கொண்டிருந்தான் அந்தகாசூரன். இதுவே அந்தகாசூரனை அழிவு பாதைக்கு மறைமுகமாக இழுத்துச் சென்றது.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக