அந்தகாசூரனால் பலவிதமான இன்னல்களை அனுபவித்து வந்த தேவர்களுக்காக தேவர்களின் வேந்தனான தேவேந்திரன் அந்தகாசூரனை அழிக்கும் பொருட்டு பிரம்மதேவரிடம் முறையிட சென்றார். சத்யலோகத்தில் சரஸ்வதி தேவியுடன் இருந்த பிரம்மதேவரை கண்ட தேவேந்திரன் அவரை பணிவுடன் வணங்கி பின்பு அந்தகாசூரன் என்னும் அசுரனால் ஏற்பட்டு வரும் பல இன்னல்களையும், அதன் விளைவால் பூவுலகில் வாழும் மக்களும், தேவர்களும் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் கூறினார்.
மேலும், அந்தகாசூரனை அழிக்க நாங்கள் பலவாறு முயன்றும் அந்தகாசூரனின் இருப்பிடத்தை கூட எங்களால் கண்டறிய முடியவில்லை தேவா...!. இந்நிலை இவ்விதம் தொடர்ந்து கொண்டே இருந்தால் பிரபஞ்சத்தில் உள்ள மக்கள் பலவாறு துன்பப்படுவார்கள். அதனால் பூலோகத்தில் உள்ள இயற்கையின் சமநிலையானது அழிந்து விடக்கூடிய சூழலும் நேரிடலாம் என்றார் தேவேந்திரன்.
அதற்கு பிரம்மதேவர், தேவேந்திரா உனது எண்ணங்களை நான் அறிவேன். அசுரர்கள் என்றுமே தங்களது தவத்தின் பயனை முழுமையாக பயன்படுத்துவதற்கு முன்பே தவறான வழிகாட்டுதல்களால் தங்களுடைய அழிவு பாதையை அவர்களே தீர்மானித்துக் கொள்கின்றார்கள் என்றார்.
அந்தகாசூரனின் தவத்தின் பயனானது முடிவடையும் காலமும் நெருங்கின. அந்தகாசூரனால் பாதிக்கப்பட்ட இயற்கையின் சமநிலையானது கூடிய விரைவில் புத்துணர்ச்சி பெறும். ஒருவர் செய்த கர்ம வினையானது அவரால் மட்டுமே முழுவதுமாக களைந்து அழிக்க இயலும்.
பிரம்மதேவரின் கூற்றுகளில் இருந்து அந்தகாசூரனின் அழிவு நெருங்கி விட்டது என்பதனை அறிந்து கொண்டார் தேவேந்திரன். பின்பு, பிரம்மதேவரிடம் அந்தகாசூரனை அழிப்பதற்கான வழியினையும், ஆலோசனையையும் வேண்டி நின்றார்.
பிரம்மதேவர் வரம் அளித்த என்னால் அந்தகாசூரனை அழிக்க இயலாது. எனவே, தேவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சங்கடங்களை களையும் கருணைக்கடலான சிவபெருமானிடம் வேண்டுங்கள். அதற்கான வழியை அருளி உங்களை துன்பத்தில் இருந்து மீட்டெடுத்து இயற்கையின் சமநிலையை அடையச் செய்வார் என்று கூறினார் பிரம்மதேவர்.
பிரம்மதேவரின் ஆலோசனைப்படி தேவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கைலாய மலையில் வீற்றிருக்கும் சிவபெருமானை காண தேவேந்திரனுடன் சென்றனர். சிவபெருமானை கண்ட தேவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் யாவற்றையும் எடுத்துக்கூறி தங்களை ரட்சித்து காக்க வேண்டும் பெருமானே..! என வேண்டி நின்றனர்.
கருணைக்கடலான சிவபெருமானும் அவர்களின் வேண்டுதல்களை ஏற்று அந்தகாசூரனை அழிப்பதற்காக சிவபெருமானும், பார்வதி தேவியும் மானிட ரூபம் தரித்து பூவுலகில் அந்தகாசூரனின் ராஜ்ஜியத்திற்கு அருகில் ஒரு எளிய குடிசை அமைத்து வசித்து வந்தனர்.
அசுரர்கள் வனத்தில் வாழ்ந்து கொண்டிருந்த முனிவரையும் அவர்தம் பத்தினியையும் கண்டனர். முனிவரின் துணைவியை கண்ட அசுரர்கள் அவரின் அழகில் தங்களை மறந்து தான் செய்ய வேண்டிய செயல்கள் யாவற்றையும் நினைவிழந்து நின்றனர்.
முனிவருடைய துணைவியின் அழகைக் கண்டதும் இந்த பெண்ணே தனது வேந்தனான அந்தகாசூரனுக்கு தகுதியானவள் என எண்ணினார்கள் மாதுவை கவர வந்த அசுரர்கள். பின் இச்செய்தியை வேந்தனிடம் எடுத்துக்கூறி இந்த பெண்ணை தமது வேந்தனுக்கு மனம் முடித்து வைக்க வேண்டும் என எண்ணி ராஜ்ஜியத்திற்கு விரைந்தனர்.
வேந்தனைக் கண்டதும் தாங்கள் கண்ட பெண்மணியான முனிவரின் துணைவியாரை பற்றி புகழ்ந்தும், அவர்களுடைய அழகுக்கு முன் எவரும் ஈடு இணையாக இருக்க முடியாது என்றும், ஆனால் அப்பெண்ணோ வனத்தில் தவம் புரியும் முனிவரை மணந்து தனது அழகை வீண் செய்து இருப்பதாக கூறினார்கள்.
தனது அசுர வீரர்கள் கண்ட பெண்மணியின் அழகை இவர்கள் கூற அந்தகாசூரனுக்கு அந்தப்பெண்ணை காண வேண்டும் என்ற ஆவல் உண்டானது. பின் தன்னிடம் உள்ள மாய வித்தைகளை பயன்படுத்தி அசுரர்கள் கண்ட பெண்மணியின் உருவத்தை அவர்களின் கண்கள் மூலம் அவர்களின் நினைவுகளை பயன்படுத்தி ஒரு பிம்பமாக உருவாக்கி அதை தான் காணும் வண்ணம் அந்த பிம்பத்தை வெளிப்படுத்தினான் அந்தகாசூரன்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக