முனிவருடைய துணைவியாரின் பிம்பத்தை கண்ட பொழுது அசுர வீரர்கள் சொன்னது உண்மையே என தோன்றியது. இந்த பெண்ணை காணும்போது மதுவில்லாமலே எனக்கு போதை ஏற்படுகின்றது. இவ்வளவு எழில்மிகு தோற்றத்தையும், காண்போரை வசீகரிக்க கூடியவரான இந்த பதுமை சாதாரண முனிவரிடம் இருப்பதா? என எண்ணினான் அந்தகாசூரன்.
பின் தன் வீரர்களை அழைத்து உடனே இந்த பெண்ணை இங்கே அழைத்து வர வேண்டும் என கட்டளையை பிறப்பித்தான் அந்தகாசூரன். பின்பு அந்த பெண்ணின் அழகில் தன்னை மறந்து அந்த பெண்ணின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான்.
இங்கு நிகழ்வதை அறிந்த பிரம்மதேவர் அந்தகாசூரன் காத்திருப்பது பெண்ணின் வருகைக்காக அல்ல அவனது மரணத்திற்காகவே. ஏனெனில், அந்தகாசூரனின் தாய் பார்வதி தேவி ஆவார்கள். அவன் பெற்ற வரம் அவனை மரணத்தின் முதல் அடியை நோக்கி அழைத்துச்செல்ல ஆயத்தமாக உள்ளது என எண்ணினார். பின் அந்தகாசூரனின் பிறப்பை பற்றி எண்ணத் தொடங்கினார்.
ஒரு சமயம் பார்வதி தேவி கைலாய மலையில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடினார். எம்பெருமானின் இரு கண்கள் மறைக்கப்பட்டதால் இந்த பிரபஞ்சமே இருளில் முழ்கியது. சூரியன், சந்திரன் யாவரும் தனது ஒளியை இழந்தனர். பார்வதி தேவியோ தாம் தவறு செய்து விட்டோமோ என்று எண்ணும் தருவாயில், சிவபெருமானின் மூன்றாம் கண்ணான நெற்றிக் கண்ணானது திறந்தது.
அவ்வேளையில் அம்பிகையின் சக்தி மூலமும், எம்பெருமானின் நெற்றிக் கண்ணால் உண்டான வெப்பத்தின் மூலமும் ஒரு கரிய நிறமுள்ள எவராலும் வெற்றிக்கொள்ள முடியாத இந்த பிரபஞ்சமே நடுங்கும் அளவிலான சிரிப்பினையும், எவரையும் பயம் செய்யக்கூடிய அழுகையையும் கொண்ட பார்வை திறனற்ற குழந்தையாக பிறந்தது.
பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை முடியமையால் அந்த குழந்தைக்கு கண் பார்வை என்பது இல்லாமல் இருந்தது. அந்த கண் பார்வை இல்லாத சிவபெருமானின் சக்தியில் இருந்து உருவானவன் தான் அந்தகாசூரன்.
அசுரர்களான ஹிரண்யாக்ஷன் தன்னிடம் அனைத்தும் இருந்தும் தனக்கான புத்திரன் இல்லையே என்று வருந்தினான். பின்பு, சிவபெருமானை நோக்கி பிள்ளை வரம் வேண்டி தவம் இருந்தார். ஹிரண்யாக்ஷனின் தவத்தால் மகிழ்ந்த எம்பெருமான் அவன் முன் தோன்றினார். எம்பெருமானை கண்ட ஹிரண்யாக்ஷன் பாகுபாடு இன்றி அனைவருக்கும் வரம் அளிக்கும் சிவபெருமானை கண்டதும் தனது தவத்தின் பலனை பெற்றதாக எண்ணி அவரை மிகவும் பணிவுடனும், அன்புடனும் வணங்கினார்.
சிவபெருமான் ஹிரண்யாக்ஷனிடம் உன் தவத்தால் யாம் மனம் மகிழ்ந்தோம். வேண்டும் வரத்தினை கேட்பாயாக என்று கூறினார். பின்பு ஹிரண்யாக்ஷன் சிவபெருமானை வணங்கி மரணம் இல்லாத புத்திர பாக்கியத்தை அருள வேண்டினார். ஆனால் சிவபெருமானோ, மரணம் இல்லாத எவ்வுயிரும் இந்த பிரபஞ்சத்தில் உருவாக இயலாது என்றும், ஒரு உயிருக்கு தோற்றம் என்பது இருப்பது போலவே மரணம் என்பதும் உண்டு என்றும், ஆகவே வேறு வரத்தினை கேட்பாயாக என்று கூறினார்.
சிவபெருமானின் இந்த பதிலால் என்ன செய்வது என்று சிந்தித்த ஹிரண்யாக்ஷன் தனக்கு எவராலும் வெல்ல இயலாத, ஆனால் தன்னை ஈன்ற தாயினால் மட்டுமே அவனுக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்னும் வரம் பெற்ற பிள்ளை வரத்தினை தாங்கள் அளிக்க வேண்டும் என வேண்டினார். சிவபெருமானும் அவ்விதமே அருளி காலம் வரும்போது உனக்கான வரத்தின் பயனை அடைவாய் என கூறி மறைந்தார்.
எம்பெருமான் கண்களில் இருந்து கரங்களை எடுத்த பார்வதி தேவி செய்த பிழைக்கு வருந்தி நின்றார்கள். எம்பெருமான் பார்வதி தேவியிடம் எவ்விதமான அச்சமும் கொள்ள வேண்டாம் தேவி, காரணமின்றி காரியம் ஏதும் இல்லை என்று கூறினார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக