ஒரு சாதாரண முனிவர் எனது படைகளை அழிக்க இயலாது. ஏன்?.. தேவர்களே பார்த்து பயம் கொள்ளும் எனது படையை எவராலும் வெற்றிக்கொள்ள இயலாது என்று மமதையில் சென்ற அந்தகாசூரனின் படைகள் அனைத்தையும் முனிவர் அழித்து அசுர வீரர்களை வதம் செய்வதை கண்டு அதுவரை அச்சம் என்பதை அறியாத அந்தகாசூரன் என்ன செய்வது? தனது சேனையின் பலமானது குறைந்து வருகின்றதே என எண்ணினான்.
அந்தகாசூரனுக்கும், சிவபெருமானுக்கும் போர் நடப்பதை அறிந்த தேவர்கள் மானுட ரூபம் தரித்து முனிவருக்கு உதவியாக வந்தனர். தனது படையில் இறந்தவர்களை உயிர்ப்பிக்க குருவின் துணை வேண்டும் என்பதனை அறிந்த அந்தகாசூரன் தன்னுடைய குலக்குருவான சுக்கிராச்சாரியாரை தேடிச் சென்றான்.
இனியும் போரை தொடர விரும்பாத, அந்தகாசூரனின் முடிவு நெருங்கியதை உணர்ந்த சர்வேஸ்வரன் அவனின் முடிவு என்பது தனது மனைவியால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்து தனது மனைவியான பார்வதி தேவியை ஒரு குகையில் தனித்திருக்க சப்த கன்னியர்கள் மற்றும் தேவர்களின் துணையோடு இருக்க முனிவரான சர்வேஸ்வரன் போருக்கு சென்றார். இந்த சூழல் பார்வதி தேவியின் அடுத்த நிலைக்கும் ஒருவித மறைமுக காரணமாகும்.
பின்பு அந்தகாசூரன், சுக்கிராச்சாரியாரை கண்டதும் அவரிடம் அசுர வீரர்களை தேவர்கள் அழித்துக் கொண்டிருப்பதாக கூறி அவரை போர் நடக்கும் இடத்திற்கு அழைத்து வந்தான். அந்தகாசூரன் கூறியது போலவே தேவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அசுர வீரர்களை தாக்கியதை கண்டதும் கோபம் கொண்டு தேவர்களை தாக்க முற்படுகையில் குருவே!!.. தாங்கள் பெற்ற வரத்தின் மூலம் இறந்த வீரர்களை உயிர்ப்பித்தால் நாம் தேவர்களை எளிமையாக வென்று விடலாம் என்றும், கூடவே அந்த முனிவரையும் அழித்து விடலாம் என்றும் கூறினான் அந்தகாசூரன்.
தேவர்கள் அனைவரும் அசுர சேனைகளை அழித்துக்கொண்டே இருந்தனர். இருப்பினும் அசுர வீரர்கள் வந்துகொண்டே இருப்பதை அறிந்த தேவேந்திரன் இதில் அந்தகாசூரன் ஏதோ சூழ்ச்சி செய்து கொண்டிருப்பதாக உணர்ந்தார்.
முனிவரின் துணைவி தனியாக குகையில் இருப்பதை அந்தகாசூரன் ஒற்றர் மூலம் அறிந்தான். இதுவே சரியான தருணம் என எண்ணி அவ்விடத்தை அடைய முற்பட்டான். ஆனால், தான் சுக்கிராச்சாரியாருடன் இருப்பதே முக்கியம் என்பதை அறிந்ததும் தனது சேனாதிபதியான விசுஸனை அனுப்பி முனிவரின் துணைவியை கவர்ந்து வர ஆணையிட்டான்.
அந்தகாசூரனின் சூழ்ச்சியை முறியடிக்க தேவேந்திரன் சில தேவருடன் அந்தகாசூரனை தேடிச் சென்றார். அங்கு அசுர குரு எம்பெருமானிடம் பெற்ற சஞ்சீவினி மந்திர சக்தியால் இறந்த அசுர வீரர்களுக்கு உயிர் அளித்து மீண்டும் போருக்கு அனுப்பி கொண்டிருந்தார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக