அஸ்தினாபுரத்தின் இளவசர்களுக்கு பயிற்சிகளை கற்றுக் கொடுக்கும் துரோணர் முன் கர்ணன் பணிவாக நின்றான். குருவே! என் பெயர் கர்ணன். நான் சூத்திரப் புத்திரன். நான் தங்களிடன் வில்வித்தையை கற்க வந்துள்ளேன் எனக் கூறினான். துரோணர், சூத்திர புத்திரனான உனக்கு நான் வில்வித்தை கற்று தருவதா? நான் ஒருபோதும் சூத்திரர்களுக்கு எந்த கலைகளையும் கற்று தருவதில்லை. அதனால் நீ இங்கிருந்து செல்லலாம் என்றார். துரோணரின் பதில் கர்ணனுக்கு மிகவும் ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் கோபமடைந்த கர்ணன் குருவே! தாங்கள் சூத்திர புத்திரருக்கு கலைகளை கற்று தரமாட்டீர்கள் என்றால் எவ்வாறு அந்தணரான தங்கள் புதல்வனுக்கு கற்றுக் கொள்ளலாம் எனக் கேட்டான். துரோணர், அவன் எனது மகன். எனக்கு தெரிந்த அஸ்திரங்களை அவனுக்கு கற்று கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்றார்.
மிகுந்த கோபம் கொண்ட கர்ணன், துரோணர் அவர்களே, நான் உங்களை காட்டிலும் தலைச்சிறந்த குருவரிடம் அஸ்திரங்களை கற்று, உங்களுக்கு பலமாக இருக்கும் அர்ஜூனனை காட்டிலும் சிறந்தவனாக திகழ்வேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றான். அதன்பின் வீட்டிற்கு திரும்பிய கர்ணன் இங்கு நடந்தவற்றை மிகவும் கவலையுடன் கூறினான். நான் உலகில் தலைச்சிறந்த குருவை தேர்ந்தெடுத்து அவர்களிடம் அஸ்திர வித்தைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்றான். அப்பொழுது அவனின் தாய் ராதா, கர்ணா! பீஷ்மர், அஸ்திர சாஸ்திரங்களில் தலைச்சிறந்த குருவான பரசுராமரிடம் கற்றுக் கொண்டார் என்றாள். கர்ணன், அவர் தான் தலைச்சிறந்த குருவென்றால் நான் அவரிடமே சென்று கற்றுக் கொள்கிறேன் எனக் கூறி அவர்களிடம் இருந்து விடைப்பெற்று பரசுராமரை தேடிச் சென்றான்.
சில வருடங்கள் கழிந்தது. அஸ்தினாபுரத்திற்கு அருகில் மகத நாட்டைச் சேர்ந்த ஏகலைவன் என்ற ஒரு வேடன் இருந்தான். அவன் வில்வித்தையில் சிறந்தவனாக வர வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தான். அதனால் வில்வித்தை கற்றுக் கொடுப்பவர்களில் சிறந்த குரு துரோணர் தான் என்பதை அறிந்து கொண்ட ஏகலைவன், துரோணரிடம் சென்று தனக்கு வில்வித்தை கற்றுத் தரும்படி வேண்டினான். அதற்கு துரோணர், சத்திரியர்களுக்கு மட்டும் தான் கற்று கொடுப்பேன் என்பதை வெளிப்படையாகக் கூறாமல், உனக்கு என்னால் வில்வித்தை கற்றுத் தர முடியாது என்று சொல்லி மறுத்துவிட்டார். வில்வித்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்த ஏகலைவனுக்கு, துரோணரின் பதில் ஏமாற்றத்தை கொடுத்தது.
இருப்பினும் மீண்டும் ஏகலைவன், துரோணரிடம் நான் எப்படி வில்வித்தை கற்றுக் கொள்வது என்று கேட்டான். 'உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால் நீ எங்கிருந்தாலும் கற்றுக் கொள்வாய்" என்று சொல்லி அனுப்பிவிட்டார். துரோணர் சொன்ன வார்த்தைகளை மனதில் வைத்துக் கொண்டு, தன் இருப்பிடத்திற்கு சென்று துரோணரைப் போல ஒரு சிலையை செய்து, அந்த சிலையையே தன்னுடைய குருவாக எண்ணி பயிற்சி செய்ய ஆரம்பித்தான். ஒரு நாள் பாண்டவர்கள் வேட்டையாட காட்டிற்குச் சென்றனர். அவர்களுடன் ஒரு நாயையும் அழைத்துச் சென்றனர். அன்று ஏகலைவன் துரோணரின் சிலை முன்பு வில்வித்தை கற்றுக் கொண்டிருந்தபொழுது, நாய் ஒன்று குரைக்கும் சப்தம் கேட்டு, ஏகலைவனின் கவனம் சிதறியது. உடனே ஏகலைவன் நாய் குரைக்கும் சப்தம் வரும் திசையை நோக்கி அம்பை எய்தான்.
அம்புகள் எல்லாம் நாயின் வாயைச் சுற்றி தைத்து, குரைக்க முடியாதபடி செய்தது. ஏகலைவன் எய்த அம்புகளுடன் அந்த நாய் அர்ஜுனனிடம் சென்றது. அம்புகளால் நாயின் வாய் தைக்கப்பட்டிருப்பதை பார்த்த அர்ஜூனன் ஆச்சர்யமடைந்தான். வில்வித்தையில் இவ்வளவு கலை நுணுக்கங்கள் அறிந்தவர் எவரேனும் இருக்க வேண்டும் என நினைத்தான். அர்ஜுனன், அந்த நாயை அழைத்துக் கொண்டு சென்று துரோணரிடம் காட்டி, தாங்கள் என்னை உலகிலேயே வில்வித்தையில் மிகச்சிறந்த வீரனாக ஆக்குவேன் என்று கூறினீர்கள். ஆனால் இந்த நாயின் மீது அம்பை எய்தவன் என்னைவிடவும் வில்வித்தையில் சிறந்தவனாக இருக்க வேண்டும் என்று கூறினான். அர்ஜுனன் கூறியதைக் கேட்ட துரோணர் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தார். பிறகு துரோணர் அர்ஜூனனை அழைத்துக் கொண்டு ஏகலைவன் இருக்கும் இடத்திற்கு சென்றார்.
ஏகலைவனின் இருப்பிடத்தில் துரோணரைப் போலவே ஒரு சிலை இருப்பதைக் கண்டார். அந்த சிலைக்கு எதிரே ஏகலைவன் வில்லுடன் நின்று கொண்டிருந்தான். துரோணரை பார்த்த ஏகலைவன் துரோணரின் காலில் விழுந்து வணங்கினான். துரோணர், அர்ஜுனன் அழைத்து வந்த நாயை காண்பித்து, உனக்கு வில்வித்தையை கற்று தந்தது யார்? என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு ஏகலைவன், நீங்கள் தான். ஆனால் நீங்கள் நேரில் வந்து எனக்கு கற்றுத் தரவில்லை. நீங்கள் ஆசி வழங்கி என்னுள் இருந்து கற்று தந்தீர்கள் என்றான். ஏகலைவன் கூறியதைக் கேட்ட துரோணருக்கு உலகிலேயே அர்ஜுனனை சிறந்த வில் வீரனாக ஆக்குவேன் என்று தான் கூறியது நினைவுக்கு வந்தது. உடனே துரோணர், ஏகலைவனைப் பார்த்து என்னை நீ குருவாக நினைத்ததால் நீ எனக்கு சீடன் ஆகிவிட்டாய். என்னால் வில்வித்தை கற்றுக் கொண்டதால் எனக்கு குரு தட்சிணை தர வேண்டும் என்றார். அதற்கு ஏகலைவன், நீங்கள் எதைக் கேட்டாலும் அதைத் தருகிறேன் என்றான்.
துரோணர் தன் மனதிற்குள் அர்ஜுனன் மிக சிறந்த வில் வீரனாக வர வேண்டுமென்றால், ஏகலைவன் வில்லைத் தொடக்கூடாது. ஏகலைவன் வில்லை தொடாமல் இருப்பதற்கு என்ன செய்வது? என்று ஒரு கணம் யோசித்தார். ஒருவன் வில்வித்தையில் பயிற்சி பெற வேண்டுமென்றால், அவனது பெருவிரல் தான் மிகவும் முக்கியமானது. ஆகையால் ஏகலைவனின் பெருவிரலை கேட்போம் என யோசித்து முடிவு செய்தார். பிறகு துரோணர், ஏகலைவனை நோக்கி, எனக்கு குரு தட்சினையாக 'உனது வலதுகைக் கட்டை விரலைத் தா" என்று கேட்டார். உடனே ஏகலைவன் ஒரு கணம் கூட தாமதிக்காமல் கத்தியை எடுத்து, தனது வலதுகைக் கட்டை விரலை வெட்டி எடுத்து துரோணரிடம் கொடுத்தான். ஏகலைவனின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனன் அதிர்ச்சி அடைந்தான்.
தொடரும்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக