ஜாதகம் என்பது ஒரு மனிதனின் பிறந்த நேரம், பிறந்த வருடம், பிறந்த மாதம், பிறந்த தேதி ஆகியவை தெரிந்தால் மட்டுமே கணிக்க முடியும். எண் கணிதம் எனப்படுவதும் ஏறக்குறைய இப்படித்தான். ஆனால், ரேகை மட்டும் இதற்கு விதிவிலக்கு. ரேகையை வைத்து ஒரு மனிதனை பற்றி ஆழமாகக் கணித்து விடலாம்.
ஒருவரின் ரேகையை வைத்து ஜெனன ஜாதகத்தை அறிய முடிவது போல ஜெனன ஜாதகத்தை வைத்து ரேகையை அறிய முடியாது. இவ்வளவு சிறப்புகளை கொண்ட கைரேகையை பற்றி தெரிந்து கொள்வோம்.
கைரேகை சாஸ்திரம் அல்லது குறிபார்த்தல் என்பது ஒருவரின் உள்ளங்கையில் இருக்கும் கைரேகையை ஆராய்வதன் மூலமாக ஒருவரின் எதிர்காலத்தையும், குணத்தையும் சொல்லும் கலையாகும். இது கைரேகை வாசிப்பு அல்லது குறிசொல்லுதல் என்றும் அழைக்கப்படும்.
இது உலகின் எல்லா பகுதிகளிலும் பல்வேறு கலாச்சார வேறுபாடுகளுடன் காணப்படுகிறது. இவ்வாறு குறிசொல்லும் பழக்கமுடையவர்கள் பொதுவாக கைரேகை ஜோதிடர்கள், கைரேகை படிப்பவர்கள் அல்லது குறிசொல்பவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
கைரேகை கலையை சமஸ்கிருதத்தில் 'ஹஸ்த ரேகா சாஸ்திரம்" எனக் குறிப்பிடுகிறார்கள். ஹஸ்தம் என்றால் கை என்று பொருள். ரேகா என்றால் கோடு என்று பொருள். சாஸ்திரம் என்றால் அறிவியல் என்று பொருள். எனவே 'ஹஸ்த ரேகா சாஸ்திரம்" என்றால் கையிலுள்ள கோடுகளைப் பற்றிய அறிவியல் எனப் பொருள்படும்.
பொதுவாக உள்ளங்கை மற்றும் விரல்களின் ஒவ்வொரு பகுதியும் ஓர் ஆண் கடவுளுடனோ அல்லது ஒரு பெண் கடவுளுடனோ சம்பந்தப்பட்டிருக்கும். மேலும், இந்த பகுதியின் குறிப்புகள் அந்த குறிப்பிட்ட நபரின் குணத்தை எடுத்துக்காட்டும்.
அதுமட்டுமின்றி இரண்டு கைகளும் அவற்றிற்குரிய தனித்தனி முக்கியத்துவத்தைக் கொண்டிருப்பதால், எந்த கையில் கைரேகை சாஸ்திரம் பார்ப்பது சிறந்தது என்பதில் பல விவாதங்கள் உள்ளன. இடதுகை ஒவ்வொருவரின் மூலவாய்ப்பு வளத்தை காட்டுவதாகவும், வலது கை அவருடைய குணத்தைக் காட்டுவதாகவும் கருதப்படுகிறது.
வலதுகையில் எதிர்காலம் தெரியும். இடதுகையில் கடந்தகாலம் தெரியும் என்றும், நாம் பிறப்பிலேயே எதைக் கொண்டு வந்திருக்கிறோம் என்பதை இடதுகை காட்டும், நாம் எதற்காக பிறந்திருக்கிறோம் என்பதை வலதுகை காட்டும் என்றும், ஆண்களுக்கு வலதுகையைப் படிக்க வேண்டும், பெண்களுக்கு இடது கையைப் படிக்க வேண்டும் என்றும், என்ன கிடைக்கும் என்பதை இடதுகை காட்டும், அதைக்கொண்டு என்ன செய்ய முடியும் என்பதை வலதுகை காட்டும் என்றும் கூறப்படுகிறது.
கைரேகை பார்க்கும்போது வெறும் ரேகைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்ப்பதில்லை கையில் இருக்கும் ரேகை, கையின் உள்பாகத்தில் இருக்கும் மேடு பள்ளம், நகம், விரலின் நீளம் என பலதரப்பட்ட விஷயங்களை ஆராய்ந்து பார்ப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக