Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 8 பிப்ரவரி, 2020

துரோணர்...!


ரத்வான் என்பவர் கடுமையான தவங்களைச் செய்து பலவிதமான அஸ்திரங்களை ஏவும் பயிற்சியைப் பெற்றார். ஒரு முறை சரத்வான் தவம் செய்து கொண்டிருந்த போது, இந்திரன் அவரின் தவ வலிமையைக் கண்டு பிரமித்தார். அவருடைய தவத்தைக் கலைப்பதற்காக அப்ஸரஸ் என்னும் பெண்ணை அனுப்பினார்.

அப்ஸரஸ் சரத்வான் முன் தோன்றி நடனம் ஆடினாள். அப்ஸரஸ் நடனத்தால் சரத்வான் தவநிலை கலைந்து, கண்விழித்தார். அப்ஸரஸ் அழகில் சரத்வான் மயக்கம் கொண்டார். அதன் பிறகு சரத்வான் தவத்தை கலைத்து அவளுடன் வாழ்ந்தார். அவர்களுக்கு ஆணும், பெண்ணுமான இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகள் பிறந்த பின் சரத்வான் மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார். அதன் பிறகு அப்ஸரஸூம் விண்ணுலகம் சென்றாள். ஆணும், பெண்ணும் ஆகிய இரு குழந்தைகளும் வனத்தில் விலங்குகளால் வளர்க்கப்பட்டனர்.

ஒருமுறை சந்தனு மன்னன், வனத்திற்கு வேட்டையாட வந்தான். அங்கு இரு குழந்தைகள் விளையாடி கொண்டிருப்பதை பார்த்த மன்னன், அவர்களை அரண்மனைக்கு அழைத்து வந்து கிருபர், கிருபி என்று பெயரிட்டு வளர்த்தார். பல வருடங்களுக்கு பின்னர் சரத்வான் தம் குழந்தைகள் இருக்கும் இடத்தை தவவலிமையால் அறிந்து அஸ்தினாபுரம் வந்தார். தாம் கற்றறிந்த கல்விச் செல்வங்களையெல்லாம் கிருபருக்குக் கற்றுத் தந்தார்.

பரத்வாஜர் என்ற அந்தணரின் மகன் துரோணர். பரத்வாஜரின் நண்பராகிய பாஞ்சால தேசத்து அரசனின் மகன் துருபதன். இவர்கள் இருவரும் ஆசிரமத்தில் குருகுல கல்வி பயின்று வந்தனர். துரோணர் வேத சாஸ்திரங்களையும், அஸ்திர பயிற்சிகளையும் நன்கு கற்றார். துருபதன் அஸ்திர பயிற்சியை கற்று வந்தான். இருவரும் சிறுவயதில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். அவர்களின் படிப்பும், பயிற்சியும் முடித்து அனைவரும் ஆசிரமத்தை விட்டு புறப்படும் நேரம் வந்தது.

துருபதன் தன் நண்பனாகிய துரோணரை விட்டு பிரிவதை எண்ணி மிகவும் வருத்தம் கொண்டான். துருவதன், துரோணா! நான் பாஞ்சால நாட்டின் மன்னராக பட்டம் சூட்டியதும், எனது ராஜ்ஜியத்தில் பாதியை உனக்கு தருகிறேன் என்று கூறினான். இதைக்கேட்ட துரோணரின் நெஞ்சம் நெகிழ்ந்து போனது. அதன் பிறகு இருவரும் அவரவர் இருப்பிடத்திற்கு சென்றனர். அந்தணரான துரோணர், கிருபாச்சாரியாரின் சகோதரியான கிருபியை மணந்தார். அவர்களுக்கு அசுவத்தாமன் என்ற மகன் பிறந்தான். மனைவியையும், மகனையும் நல்லபடியாக வாழ வைக்க அவருக்கு செல்வம் தேவையாக இருந்தது.

அப்போது பரசுராமர் தன்னுடைய செல்வம் அனைத்தையும் அந்தணர்களுக்கு தானம் அளித்து விட்டு, துறவு மேற்கொள்ள செல்வதாக துரோணருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் பரசுராமரைச் சந்திக்கச் சென்றார். துரோணர் செல்லும் முன்பாகவே, தன்னுடைய செல்வம் அனைத்தையும் அந்தணர்களுக்கு வழங்கி முடித்திருந்தார் பரசுராமர்.

துரோணர் தன்னிடம் வந்து நிற்பதைக் கண்ட பரசுராமர், நான் அனைத்தையும் தானம் அளித்து விட்டேன். என்னிடம் இப்போது இருப்பது என் உயிரும், நான் கற்ற அஸ்திர சாஸ்திரங்களும் தான் என்றார். துரோணர், சுவாமி! செல்வம் போனால் என்ன? தங்களிடம் உள்ள அஸ்திர சாஸ்திரங்களை எனக்கு கற்றுத் தாருங்கள் என்றார். பரசுராமரும், தன்னுடைய வித்தைகள் அனைத்தையும் துரோணருக்கு கற்று கொடுத்தார். அஸ்திரங்களை கற்ற துரோணர் வீடு திரும்பும் நேரம் வந்தது. அப்பொழுது தான் அவருக்கு செல்வம் வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அப்பொழுது தான் துரோணருக்கு துருவதன் நினைவு வந்தது. நண்பனை காண பாஞ்சால நாட்டிற்கு சென்றான். துருபதனை சந்தித்து, சிறு வயதில் கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தினார்.

துருவதன், அந்தணரே! தாங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். நானோ பாஞ்சாலத்தின் மன்னன். நீரோ பஞ்சத்தில் இருந்து மீள்வதற்காக போராடுபவர். நான் உங்களின் நண்பனா? உமக்கு யாசகம் வேண்டுமென்றால் அதை என்னிடம் நேராகவே கேட்கலாம். நான் உன் நண்பன் என்று கூறிக் கேட்க வேண்டாம் என்றான்.

துருபதன் கூறிய இந்த சொற்கள், துரோணரின் மனதில் அம்பாக குத்தியது. மிகுந்த அவமானமும், தலைக்குனிவும் துரோணருக்கு ஏற்பட்டது. கோபம் கொண்ட துரோணர், அரசே! ஒரு நாள் நான் உங்களுக்கு இணையாக வருவேன். நீர் எமக்கு கொடுப்பதாக சொன்ன நாட்டையும் பெறுவேன் எனக் கூறி விட்டு அங்கிருந்து அஸ்தினாபுரம் சென்றார். அஸ்தினாபுரத்தின் இளவரசர்கள் நகரின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களின் பந்தும், தர்மரின் மோதிரமும் கிணற்றில் விழுந்துவிட்டது. இளவரசர்கள் அதை எடுக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அதை எடுக்க முடியாமல் கவலை அடைந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த துரோணர் அவர்களுக்கு உதவ நினைத்தார். பின் தன் புத்திசாலியான செயலினால் பந்தையும், ஒரு அம்பைக் கொண்டு மோதிரத்தையும் எடுத்துக் கொடுத்தார்.

துரோணரின் செயலைக் கண்டு இளவரசர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். பிறகு அனைவரும் பீஷ்மரிடம் சென்று நடந்தவற்றை கூறினர். பீஷ்மரும் வில்வித்தை கற்று கொடுக்க சிறந்த பயிற்சியாளரை தேடிக் கொண்டு இருந்தார். இளவரசர்கள் இவ்வாறு கூறியதால் துரோணரை அழைத்து பேசினார். துரோணர், தனக்கு நேர்ந்த அவமானத்தை பற்றிக் கூறினார். பீஷ்மர், அந்தணரே! நீ அஸ்தினாபுரத்தின் இளவரசர்களுக்கு குருகுல பயிற்சியை கொடுக்க வேண்டும். உனக்கு தேவையான அனைத்தும் உன் வீடு வந்து சேரும். இனி நீர் தான் எங்கள் இளவரசர்களின் குருகுல தலைவர். இங்கு உனக்கு அனைத்து உரிமையும் கிடைக்கும் என்றார்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக