Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 8 பிப்ரவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 77


 சிவபெருமான் தேவர்களின் வேண்டுதல்கள் யாவற்றையும் அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்தார். கோபத்தால் விழிப்புற்ற, அழிவை தரவல்ல, எவராலும் தடுக்க இயலாத வல்லமை உடைய முக்கண்ணனின் மூன்றாம் கண்ணான நெற்றிக்கண்ணானது இமைகளை மூடி சாந்தம் கொண்டு அமைதியுற்றது.

மனம் மகிழ்ந்த சிவபெருமான் தேவர்களை நோக்கி உங்களின் தோத்திரங்களால் யாம் மனம் மகிழ்ந்தோம், வேண்டும் வரங்களை கேளுங்கள் என்றார். அவ்வேளையில் தேவர்கள், சாந்தம் அடைந்த சர்வேஸ்வரரையும், உமாதேவியையும் கண்டு வணங்கி சர்வத்தை தன்னுள் கொண்டுள்ள சர்வேஸ்வரா! திரிபுரத்தை அழித்து இன்னல்களில் இருந்து எங்களை காப்பாற்றிய திரிபுர தகனரே! அனைவருக்கும் மேலான மகாதேவரே! நாங்கள் தங்களிடம் வேண்டி நிற்பன யாவும் ஒன்றே.

தேவர்களான எங்களுக்கு துன்பங்கள் நேரும் போதெல்லாம் தாங்கள் எங்களுக்கு காட்சியளித்து எங்களை காக்க வேண்டும் என்று வேண்டினார்கள்.

தேவர்களின் வேண்டுதல்களை ஏற்ற சிவபெருமான் அவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களுக்கு மேலும், சில வரங்களை அளித்து அனுக்கிரகம் செய்து விட்டு தேவியுடன் கைலாயம் சென்றார்.

அப்பொழுது திருமாலால் படைக்கப்பட்ட மாயக்கலைகளில் வித்தகர்களான பண்டிதர்கள் தேவர்களிடம் தங்களின் நிலை என்னவென்று கூறி, தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று வேண்டி நின்றனர்.

அதற்கு திருமாலும், பிரம்ம தேவரும் நீங்கள் அனைவரும் கலியுகம் வரும் வரை உயிரினங்கள் வாழும் பூமியில் வாழ வேண்டும் என்று கூறினார். அவர்களின் கூற்றுகளை ஏற்றுக்கொண்ட பண்டிதர்கள் அவர்களை பணிந்து வணங்கி பூமிக்கு தனது பயணத்தை தொடங்கினார்கள்.

இந்திரன் முதலிய மற்ற தேவர்கள் இன்னல்கள் யாவும் மறைந்தன என எண்ணி அவர்களது பணிகளை மேற்கொள்ள அவரவர் இருப்பிடத்தை நோக்கி சென்றனர்.

கைலாயத்தில் சிவபெருமானும், பார்வதி தேவியும் புத்திரர்களோடு மகிழ்ச்சியாக இருக்கும்போது அங்கு நாரதர் வருகைத் தந்தார். அவர் சிவபெருமானை வணங்கும்போது கரங்களில் ஒரு கனியினை வைத்திருந்தார்.

கைலாய மலையில் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி காத்துக் கொண்டிருக்கின்ற அம்மையையும், அப்பனையும் அவர்களின் புத்திரர்களோடு காண நான் என்ன பாக்கியம் செய்தேனோ என்று அவர்கள் அனைவரையும் புகழ்ந்து பாடினார் திரிலோக சஞ்சாரியான நாரதர்.

அந்த சமயத்தில் பார்வதி தேவி நாரதர் கொண்டு வந்த கனியை கண்டு இந்த கனியானது யாருக்காக நாரதரே என்று கேட்டார். அன்னையான பார்வதி தேவி எப்பொழுது இந்த கேள்வியை கேட்பார்களோ என நாரதர் எண்ணிக் கொண்டு அதற்காக காத்திருந்தார்.

அன்னை கேட்ட கேள்விக்கு பதில் உரைப்பது போல தான் மறைத்து வைத்திருந்த கனியை நாரதர் தம் கரங்களில் எடுத்து இது மிகவும் அதி உன்னதமான கனியாகும் தாயே.

நான் தங்களை காண்பதற்காக கைலாயம் நோக்கி வந்து கொண்டிருந்த வேளையில் ஒரு முனிவரால் எனக்கு இக்கனியானது கிடைத்தது.

இக்கனியை உண்பவர் எவராயினும், அவருக்கு பல வகை அரிய ஞானத்தை பெற்று இந்த உலகம் உள்ளவரை அவரின் புகழ் அழியாது இருக்கும் என்று கூறினார்.

இவ்வளவு வல்லமையும், ஞானத்தையும் வழங்கக்கூடிய இந்த கனியை நான் உண்ணும் தருவாயில் என் மனமோ இதை மறுத்தது. நான் உண்பதைக் காட்டிலும் இந்த அகிலத்தை படைத்து அதில் உள்ள உயிர்களுக்கும், அவர்களை காத்து நிற்கும் தேவர்களுக்கும், அசுரர்களால் எவ்விதமான இன்னல்கள் ஏற்படா வண்ணம் காத்து வரும் சிவபெருமானுக்கே இக்கனியானது கொடுப்பது என்பது சிறப்பாக இருக்கும் என எண்ணினேன்.

சிந்தையில் எண்ணிய அடுத்த கணமே தங்களை காண இங்கு வந்திருப்பதாக கூறி தனது கலகத்தின் முதல் பாணத்தை வெற்றிகரமாக எய்தார் நாரதர்.

அதன் பின்பு அக்கனியான ஞானப்பழத்தை திருவிளையாடல் வேந்தரான சர்வலோக சஞ்சாரியான சிவபெருமானிடம் கொடுக்க முற்பட்டார் நாரதர். நாரதரின் எண்ணங்களையும், அதனால் விளையவிருக்கும் நன்மையைக் கொண்டு அவரும் தன்னுடைய திருவிளையாடலை தொடங்கினார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக