சிவபெருமான் இத்தனை பல வலிமைகளையும், அரிய ஆற்றலையும், ஞானத்தையும் உடைய இந்த கனியை நான் உண்பதை காட்டிலும் இந்த பிரபஞ்சத்திற்கே அன்னையாக விளங்கும் தேவி பார்வதி உண்பதே சரியானதாகும் என கூறினார்.
சிவனின் திருவிளையாடலை அறியாத அன்னையான பார்வதி தேவி நான் தங்களுடன் இருக்கும்போது கிடைக்கப் பெறாத ஞானம் எதுவும் இல்லை என்று கூறி இந்த ஞானக்கனியை வேண்டாம் என மறுத்தார்.
சிவபெருமானும், பார்வதி தேவியும் சாப்பிட மறுத்ததை கண்ட நாரதர் இன்று தனக்கான நாள் இல்லை என அறிந்து சோர்வடையும் தருவாயில் தனது கைகளில் ஏதோ ஊர்ந்து வந்து பழத்தை எடுப்பது போல் உணர்ந்தார்.
யார் என அறிவதற்குள், அங்கு கணபதி தனது துதிக்கையால் அக்கனியை எடுக்க முயற்சித்தார். கணபதியை கண்டதும் நாரதர் மிகவும் மகிழ்ந்தார். இன்றைய நாள் தன்னுடைய நாள் என்பதனை அறிந்தார்.
விநாயகர் நாரதர் கையில் இருந்த ஞானக்கனியை உண்ண விரும்பி அதை எடுக்கும் தருவாயில் நாரதர் கனியை எடுத்துக் கொண்டார். பின்பு கணபதியோ இந்த கனியானது மிகவும் சுவையுடன் இருக்குமா என்று கேட்டார். அதற்கு நாரதர் இது, அறுசுவைகளையும் ஒருங்கே அமையப்பெற்ற அற்புதமான கனியாகும். ஒரு முறை சுவைத்தால், அதன் சுவையானது நம்மை புதியதொரு உலகிற்கு அழைத்துச் செல்லும் என்றார்.
கணபதியோ நீங்கள் இதுவரை இக்கனியை உண்ணவில்லை என்கிறீர்கள். ஆனால், அதன் சுவையை பற்றி எப்படி இவ்வளவு தெளிவாக கூறுகின்றீர்கள் என்று கேட்டார். கணபதியின் இக்கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத நாரதர் என்ன சொல்வது என சிந்தித்து பின்பு எனக்கு இக்கனியை கொடுத்த முனிவர் இதன் சுவையையும், பலனையும் கூறினார். அதைக் கொண்டே நான் தங்களுக்கு விடையளித்தேன் என்றார்.
கணபதிக்கோ அதன் சுவையை கேட்டதில் இருந்து தான் அந்த கனியை உண்டு அதனுடைய சுவையை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணி, நாரதரிடம் நான் இக்கனியை உண்ணலாமா? எனக் கேட்டார்.
ஞானக்கனியின் சுவையை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணி, நாரதரிடம் நான் இக்கனியை உண்ணலாமா? என விநாயகர் கேட்டார். அதற்கு நாரதர் தாங்கள் தாராளமாக உண்ணலாமே என்று கனியை அவரிடம் கொடுக்க இருக்கும் தருவாயில் எனக்கும் இக்கனி வேண்டும் என்று இன்னொரு குரல் கேட்டது.
இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு குரலினை கேட்டதும் நாரதர் மிகவும் மகிழ்ந்தார். நாரதரின் அருகில் வந்த அந்த மற்றொரு குரலுக்கு உரியவரான முருகப்பெருமான் எனக்கும் இந்த கனி வேண்டும் என்று கேட்டார். திரிலோக சஞ்சாரியான நாரதர் இருப்பது ஒரே கனி நான் எப்படி இருவருக்கும் கொடுப்பேன் என்றார்.
கணபதியோ அந்தக் கனியை இரு சம பிரிவுகளாக பிரித்து எனக்கும், என் தமையனுக்கும் கொடுங்கள் என்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத நாரதர், இக்கனியை ஒருவர் மட்டும் உண்டால் தான், நான் கூறிய அனைத்து பலன்களும் கிடைக்கும் என்று கூறினார்.
அதைக்கேட்டதும் விநாயகர், அப்படியானால் நானே மூத்தவன் ஆதலால் நானே இந்த கனியை உண்ணுகிறேன் என்றார். ஆனால், முருகப்பெருமானோ நானே செல்ல மகன். எனவே, நான்தான் உண்ணுவேன் என இருவரும் போட்டி போட்டுக் கொண்டனர்.
இவர்களுக்கு இடையே நிகழ்ந்த போட்டியை கண்ட நாரதர் நான் யாருக்கு இக்கனியை கொடுக்க வேண்டும் என தெரியவில்லையே என்று புலம்பினார். பின்பு உமையவளான பார்வதி தேவியிடம் சென்று இதற்கு தாங்கள் தான் ஒரு தீர்வு அளிக்க வேண்டும் என்று கூறி நின்றார்.
பார்வதி தேவியோ உனது பணியை இங்கேயும் தொடங்கி விட்டாயா? என்றார். இல்லை தேவி நான் நன்மையை கருத்தில் கொண்டே இக்கனியை இங்கு கொண்டு வந்தேன் என்றும், அதனால் இவ்வளவு பிரச்சனைகள் உருவாகும் என்று நான் சிறிதும் எண்ணவில்லையே என்றும் நாரதர் கூறினார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக