Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 8 பிப்ரவரி, 2020

சிவபுராணம்..!பகுதி 79


பார்வதி தேவியோ நான் யாருக்கு இந்த கனியை கொடுக்க சொல்வேன் என்று சங்கடத்தில் ஆழ்ந்தார். இங்கு நிகழ்வன யாவற்றையும் கண்டு வந்த சிவபெருமான் பார்வதி தேவியின் சங்கடத்தைப் போக்க ஒரு யோசனையை கூறினார்.

அதாவது, தங்களது மைந்தர்களான கணபதி மற்றும் கந்தன் ஆகிய இருவரில் யார் முதலில் இந்த உலகத்தை சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இந்த கனியானது உரியதாகும் என்று கூறினார். பின்பு இருவரையும் அழைத்து போட்டியை பற்றி கூறி இதில் இருவருக்கும் உடன்பாடுதானே என்று கேட்டார்.

தந்தையான சிவபெருமான் போட்டியை பற்றி கூறி முடித்ததும் ஆறுமுகன் தனது வாகனமான மயில் மீது ஏறி இந்த உலகத்தை சுற்றி வர புறப்பட்டார். ஆனால், கணபதியோ கந்தனை போன்று இந்த உலகத்தை சுற்றி வரும் பயணத்தில் கவனம் செலுத்தாது மாற்று வழியை தேடினார்.

ஏனெனில், தனது தமையனான கந்தனுடன் போட்டியிட்டு வெற்றிக்கொள்ள முடியாது என்று உணர்ந்த கணபதி மாற்றுவழியை பற்றி யோசித்தார். கணபதி முருகனுடன் சேர்ந்து உலகத்தை வலம் வரவில்லை. ஆனால் உலகத்தை வலம் வந்ததற்கு ஈடான பலன்கள் கிடைக்க வேண்டும் என எண்ணினார். போட்டியில் பங்கு கொள்ளாமல் அவ்விடத்திலேயே நிற்பதைக் கண்ட பார்வதி தேவி கணபதியின் அருகில் சென்றார்.

என்னவாயிற்று உன் சகோதரன் இந்நிலையில் உலகை வலம் வர தொடங்கி விட்டான். ஆனால், நீயோ எவ்விதமான பயணத்தையும் தொடங்காமல் அமைதியுடன் நின்று கொண்டிருக்கின்றாய். இவ்விதம் நீ நின்று கொண்டிருந்தால் உமக்கு எப்படி மகனே கனியானது கிடைக்கும். ஆகவே, விரைந்து போட்டிக்கு செல்வாயாக எனக் கூறினார்.

தாய் கூறியதும் விநாயகர், தாயே! தாங்கள் தந்தையின் அருகாமையில் அமர வேண்டும் என கேட்டுக் கொண்டார். கணபதியின் இந்த பதிலை எதிர்பாராத பார்வதி தேவி எதற்காக எங்களை இவ்விதம் அமரச் சொல்கிறாய் என்று வினவினார். கணபதியோ நான் உங்கள் இருவரையும் வழிபட வேண்டும் என்று கூறினார்.

பின்பு பார்வதி தேவி தனது மகனான கணபதியின் விருப்பத்திற்கு இணங்கி சிவபெருமானின் அருகாமையில் வந்து அமர்ந்தார். கணபதி தனது தாய், தந்தை ஆகிய இருவரையும் மன நிறைவோடு பூஜித்தார். பின்பு உலகை படைத்த தனது தந்தையையும், அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருக்கும் தனது அன்னையான பார்வதி தேவியையும் வணங்கி ஏழு முறைகள் வலம் வந்தார்.

கணபதியின் செயல்பாடுகளை கண்ட நாரதரும், நந்தி தேவரும் எதுவும் புரியாமல் அவ்விடத்தில் நின்று கொண்டிருந்தனர். அதனால், நந்தி தேவர் பிரம்ம தேவரின் புத்திரரான நாரதரிடம் வினவினார்.

நாரதரோ நந்தி தேவருக்கு என்ன விடையளிப்பது என்று புரியாமல் அமைதியுடன் நந்தி தேவரிடம் எனக்கும் எதுவும் புரியவில்லை நந்தி தேவரே என்று கூறினார். பின்பு விநாயகர் தன் தந்தையிடம் சென்று தந்தையே எனக்கு அந்த ஞானக்கனி கிடைக்க அருளும், ஆசியும் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார்.

எம்பெருமானும் அவ்வாறே நான் செய்கிறேன். ஆனால், நீ போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இக்கனியானது உனக்கு கிடைக்கும் என்று கூறினார். மேலும், விரைவாக சென்று உலகை வலம் வந்து நீ என்னிடம் வேண்டிய கனியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். ஆனால், உனது சகோதரன் இந்நிலையில் பாதி உலகை வலம் வந்திருப்பான் என்று கூறினார்.

இங்கு நிகழும் நிகழ்ச்சி அனைத்திற்கும் காரணகர்த்தாவாக இருந்த நாரதர் கணபதியிடம் சென்று எதுவும் அறியாதது போல், நீ விரைவாக சென்று வந்தால் மட்டுமே உன்னால் இந்த கனியின் சுவையையும், வல்லமையையும் பெற முடியும் என்று கூறினார்.

ஆனால், தாங்களோ எங்கும் செல்லாமல் இவ்விடத்தில் நின்றால் எவ்விதம் கனியை நான் உங்களிடம் அளிக்க இயலும் என்று கேட்டார். ஆனால், கணபதியோ நான் தான் இந்த சர்வ உலகங்களையும் வலம் வந்து விட்டேனே என்று கூறினார். கணபதியின் கூற்றுகளை கேட்ட பார்வதி தேவி என்ன சொல்கிறாய் கணபதி என்று கேட்டார்.

தாயான பார்வதி தேவியிடம் கணபதி, தாயே! நான் ஒரு முறை மட்டுமல்லாமல் இந்த உலகத்தை ஏழு முறைகள் வலம் வந்து முடித்து விட்டேன் என்று கூறினார். ஆனால், நீ தான் எங்குமே செல்லவில்லையே? எங்கும் செல்லாமல் எப்படி உன்னால் இந்த உலகத்தை வலம் வர முடியும் என்று பார்வதி தேவி கேட்டார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக