Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 19 பிப்ரவரி, 2020

கொரோனா வைரஸால் மலேசியாவில் பொருட்கள் வாங்க குவிந்த சிங்கப்பூர் மக்கள்

bbc 1



கோவிட் 19' என பெயரிடப்பட்டுள்ள கொரோனா கிருமித் தொற்று, அளவில் சிறிய நாடான சிங்கப்பூரையும் விட்டு வைக்கவில்லை. அங்கு பிப்ரவரி 16ஆம் தேதி நிலவரப்படி 75 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
ஆயுதப்படை வீரர் ஒருவர், 29 வயது ஆடவர், 71 வயது மூதாட்டி ஆகிய மூவருக்கும் 'கோவிட் 19' எனப்படும் கொரோனா கிருமித்தொற்று இருப்பதாக சிங்கப்பூர்  சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. அங்கு 'கோவிட் 19' பாதிப்புள்ள 56 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில்  ஐவர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள், தொழில்முனைவோர் எனப் பல்வேறு தரப்பினரும் பின்பற்ற வேண்டிய சில அறிவுறுத்தல்கள்,  விதிமுறைகளையும் சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ளது.
அவற்றைப் பின்பற்றவில்லை எனில் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிருமித்தொற்றுப் பரவலை தடுக்க முடியும் என்கிறது சிங்கப்பூர்  அரசு. கிருமித் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சிங்கப்பூரில் சீராக அதிகரித்து வந்தாலும், பொதுமக்கள் அதிகப்படியான பீதிக்கு ஆளாகவில்லை  என்றே கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் கொரோனா கிருமியின் தாக்கம் எந்தளவில் உள்ளது? மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது? அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக  என்பதை அறிய பிபிசி தமிழ் பல்வேறு தரப்பினரைத் தொடர்பு கொண்டு பேசியது.
வீடுதோறும் முகக்கவசங்களை விநியோகித்த சிங்கப்பூர் அரசு
வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்திறங்குவோர்க்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா கிருமித் தொற்று பாதிப்புக்கான  அறிகுறிகள் தென்படும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் கூடுதல் பரிசோதனைக்காக விமான நிலையத்தில் இருந்து நேராக மருத்துவமனைக்கு அழைத்துச்  செல்லப்படுகிறார்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சிங்கப்பூர் அமைச்சர்கள் அவ்வப்போது வருகை தந்து சகஜமாகப் பலருடன் உரையாடி, மக்களின் பயத்தைப்  போக்குகின்றனர். உடல்நலம் பாதிக்கப்பட்டால் மட்டும் முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட சில நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. முகக்கவசங்கள் இருந்தால் மட்டுமே கிருமித்தொற்றில் இருந்து  தப்பிக்க முடியும் என்று தகவல் பரவியதால் மக்கள் அவற்றை வாங்கிக் குவிக்க போட்டியிட்டனர். எனினும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டும் முகக்கவசம்  அணிந்தால் போதும் என சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியது. மேலும் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா நான்கு முகக்கவசங்கள் அரசு செலவிலேயே விநியோகிக்கப்பட்டன.
"சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது". கொரோனா கிருமித் தொற்று மனிதர்களுக்கு மட்டுமல்ல, சுற்றுலாத் துறைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி  உள்ளது என்கிறார் பயண நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிராஜுதீன். சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டது என்பதுடன், வெளிநாடு  செல்லும் சிங்கப்பூரர்களும் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகச் சுட்டிக் காட்டுகிறார்.
"வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு உடனடியாக நாடு திரும்ப விருப்பம் இல்லை. செலவிட்ட காசுக்கு ஏற்ப சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்க  விரும்புகிறார்கள். அதனால் முகக்கவசம் அணிவதுடன், சிங்கப்பூர் அரசின் வழிகாட்டுதலையும் முழுமையாகப் பின்பற்றுகிறார்கள்," என்கிறார் சிராஜுதீன்.
81% சிங்கப்பூரர்கள் கொரோனா பாதிப்பு குறித்து அஞ்சுகிறார்கள் - அண்மைய ஆய்வு
இதற்கிடையே, கொரோனா கிருமித் தொற்று குறித்து, சிங்கப்பூரில் வசிப்பவர்களில், 81 விழுக்காட்டினருக்கு அச்சம் இருப்பது அண்மையில் மேற்கொண்ட ஆய்வின்  மூலம் தெரிய வந்துள்ளதாக சிங்கப்பூர் 'ஸ்ட்ரெய்ட் டைம்ஸ்' ஊடகம் தெரிவித்துள்ளது. அதே சமயம் லேசான காய்ச்சல் உள்ளிட்ட சிறு அறிகுறிகள் இருப்பினும்,  முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதைத் தவிர்க்கப் போவதில்லை என 35 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.
 கடந்த பிப்ரவரி 8 முதல் 10ஆம் தேதி வரை, வீடு வீடாகச் சென்று இக்கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 401 வீடுகளில் பல்வேறு வயதினர்,  இனத்தவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் போது, 85.9 விழுக்காடு பெண்கள் தங்களுக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்படுமோ என்று அச்சப்படுவதாகத்  தெரிவித்துள்ளனர். ஆண்களில் 75.5 விழுக்காட்டினர் இவ்வாறு அஞ்சுவதாகக் கூறியுள்ளனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அதை மீறும் வகையில், உடல்நலம்  பாதிக்கப்பட்டிருந்தாலும், திருமணம், தேர்வு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்க தயங்கப் போவதில்லை என 34.9 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக