ஒரு நாட்டு ராஜாவிடம் முத்து என்பவர் வேலை செய்து வந்தார். அந்த ராஜாவுக்கு மிருகங்கள், பறவைகள் பேசும் பாஷை தெரியும். அதனைக் கண்ட முத்துக்கு எப்படி ராஜா விலங்குகள் பேசுவதை அறிந்து கொள்கிறார் என்பது அவருக்கு வியப்பாக இருந்தது. ராஜாவுக்கு வேண்டிய உணவை தினமும் முத்து தான் ராஜாவிடம் கொண்டு சென்று கொடுப்பார்.
ஒரு நாள் முத்து அந்த உணவு பெட்டியைத் திறந்து பார்த்தார். அதில் ஏதோ துண்டு தூண்டுகளாக சமைத்து வைக்கப்பட்டிருந்தன. இது என்னவாக இருக்கும் என்று ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டுப் பார்த்தார். அதை சாப்பிட்டதும் முத்துவுக்கு பறவை மிருகங்களின் பேசும் பாஷை புரிய ஆரம்பித்தது. இப்போது முத்துக்கு ஒரு புதிய சக்தி கிடைத்ததும் அவர் அரண்மனையில் இருந்து புறப்பட்டு வெளியே கிளம்பினார்.
அவர் குதிரையில் செல்லும் வழியில், எறும்புகள் சாரை சாரையாக செல்வதைப் பார்த்தார். எறும்பின் தலைவன் இவரிடம் குதிரையை எறும்புகளை மிதிக்காதபடி செல்லுங்கள் என வேண்டிக்கொண்டது. அவரும் அப்படியே செய்தார். எறும்புகள் நன்றி தெரிவித்து, என்றேனும் உங்களுக்கு உதவுவேன் என்று கூறியது. அடுத்து, அவர் செல்லும் வழியில் குளம் இருந்தது. அங்கு மூன்று மீன்கள் அழும் குரல் கேட்டது. அவை புதருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. குளத்தில் தாவிக் குதிக்கும் போது அவை தவறிப் புதரில் விழுந்திருந்தன. அந்த மீன்களையும் காப்பாற்றினார். மீன்களும் நன்றி தெரிவித்தது.
பிறகு, அவர் கொஞ்ச தூரம் ஒரு காட்டைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தார். சின்னஞ்சிறு காகங்களின் குரல் கேட்டது. தாய் காக்கை அவைகளிடம் நீங்களே உங்கள் உணவைத் தேடிக் கொள்ளுங்கள்! என்று கூறி மரத்தில் இருந்து கீழே தள்ளி விட்டிருந்தது. அவைகளுக்கும் தானியங்களை உணவாக கொடுத்துவிட்டு கிளம்பினார். அவை மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி கூறின.
அதன் பின் காட்டைக் கடந்து அவர் வேறு ஒரு நாட்டுக்குள் நுழைந்தார். அங்கு அந்த நாட்டு இளவரசி தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார். முத்து எப்படியும் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு நாம் இந்த நாட்டின் அரசனாக வேண்டும் என ஆசைப்பட்டார். அதற்காக போட்டியில் கலந்து கொண்டார். போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால் சிறையில் தள்ளிவிடுவார்கள்.
அவரிடம் குளத்திற்குள் ஒரு மோதிரத்தை போட்டு அதனை எடுக்கவேண்டும் என கட்டளையிட்டார்கள். குளத்திற்குள் நீந்த ஆரம்பித்த அவருக்கு ஆச்சரியம். இதோ உங்கள் மோதிரம் என்று ஒரு குரல் கேட்டது. ஒரு மீன் தன் வாயில் மோதிரத்தைக் கவ்விக்கொண்டு வந்திருந்தது. அது அவர் புதரிலிருந்து காப்பாற்றிய மீன் தான். அடுத்து ஒரு மூட்டை அரிசி முழுவதும் தோட்டத்தில் கொட்டப்பட்டு விடிவதற்குள் ஒரு அரிசி விடாமல் சேகரிக்கவேண்டும். இதுவும் நடக்காது நமக்கு சிறை தான் என்று முடிவு செய்து அவர் தூங்கிவிட்டார். அவர் உதவி செய்த எறும்புகள் ஒவ்வொன்றாக அரிசியை எடுத்து ஒரு மூட்டையில் வைத்திருந்தது. அதனால் அதிலும் ஜெயித்து விட்டார்.
இறுதி போட்டியில் ஒரு தங்க ஆப்பிள் காய்க்கும் மரம் காட்டில் இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து ஆப்பிளை எடுத்து வர வேண்டும் என்று கட்டளையிட்டனர். அவர் இருட்டும் வரை தேடினார் பசுமை மரங்கள் மட்டுமே இருந்தன. தங்க மரத்தைக் காணவில்லை என்ற கவலையுடன் தூங்கிவிட்டார். காலையில் எழுந்து பார்த்த பொழுது அவர் அருகில் தங்க ஆப்பிள் இருந்தது.அவரிடம் உதவி பெற்ற காகங்கள் அந்த ஆப்பிளைத் தேடிக்கொண்டு வந்து அவரிடம் போட்டிருந்தன. அவர் அவைகளுக்கு நன்றி தெரிவித்தார். எல்லா போட்டியிலும் ஜெயித்ததால் அவரை இளவரசி மணந்து கொண்டார். அவர் ராஜாவாக அவளுடன் அந்த நாட்டை மகிழ்ச்சியுடன் வெகு நாள் ஆட்சி செய்தார்.
தத்துவம் :
நாம் யாரேனும் ஒருவருக்கு உதவி செய்துவிட்டு மறந்து விட்டாலும்கூட அது பின்னொருநாளில் நமக்கு யார் மூலமாவது திரும்ப கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக