திங்கள், 24 பிப்ரவரி, 2020

பரதன் நாடு திரும்புதல்!

லட்சுமணர், பரதருடைய படைகள் வருவதை கண்டு கோபம் கொண்டு எழுந்தார். பரதர் இராமரின் திருவடியில் வீழ்ந்து அழுதார். இராமர், அப்பா நலமாக இருக்கிறாரா? எனக் கேட்டார். பரதர் தந்தை சத்தியத்தை நிலை நாட்டிவிட்டு விண்ணுலகை சேர்ந்தார் என்ற செய்தியை கூறினார். இச்செய்தியை கேட்ட இராமர் அதிர்ச்சி அடைந்தார். தந்தையரை நினைத்து புலம்பி அழுதார், இராமர். வசிஷ்டர் இராமரை தேற்றினார். பரதர், அண்ணா! தாங்கள் அயோத்திக்கு வந்து ராஜ்யத்தை ஏற்று ஆட்சி புரிய வேண்டும் என்றார். இராமர், தம்பி நான் பதினான்கு ஆண்டு வனவாசம் செல்ல வேண்டும் என்பது தந்தையின் கட்டளை. ஆகவே, இதை நான் கைவிடக்கூடாது. நான் பதினான்கு ஆண்டுகள் கழித்து வந்து அரசு புரிவேன். என் சொல்லை தட்ட வேண்டாம். நீ அயோத்திக்கு சென்று கடமையை செய் என்றார்.

இராமபிரானிடம் எவ்வளவோ வேண்டிக் கொண்டும் அவர் நாடு திரும்பி ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். வேறு வழியின்றி இராமனுடைய பாதுகைகளை பெற்று கொண்டு இராமரை பலமுறை தொழுதுவிட்டு புறப்பட்டார், பரதர். பாதுகைகளை தன் தலைமேல் வைத்துக் கொண்டு அவரை நமஸ்கரித்துவிட்டு சென்றார். அயோத்தியில் அருகில் இருக்கும் நந்தி கிராமத்தில் மணி மண்டபத்தை அமைத்து இராமருடைய பாதுகைகளை வைத்து வழிப்பட்டனர். தினந்தோறும் ஆயிரம் மந்திரங்களால் இராமரின் பாதுகைகளுக்கு அர்ச்சனை செய்து இடையுறாது இராம பக்தியுடன் தவநெறி தவறாமல் ஆட்சி புரிந்தார், பரதர்.
இராமர், தம்பி இலட்சுமணரோடும், சீதையோடும் தெற்கு நோக்கிப் பயணித்தார்கள். அவர்கள் நெடுந்தூரம் நடந்து அத்திரி மகரிஷி வாழும் ஆசிரமத்தை அடைந்தனர். அத்திரி முனிவர் சப்த ரிஷிகளில் ஒருவர். இவருடைய மனைவி அனுசூயை. அனுசூயை என்றால் பொறாமையற்றவள் என்று பொருள். இவள் கலங்கமில்லாத கற்புகரசி ஆவாள். இராமர், இலட்சுமணர், சீதை மூவரும் அத்திரி முனிவரை வணங்கினார்கள். தமது ஆசிரமத்திற்கு வந்திருக்கும் இவர்கள் யார் என்பதை கேட்டறிந்த முனிவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர்களுக்கு காய் கனிகள் கொடுத்து பசியாற செய்தார்.

முனிவரின் மனைவி சீதையை அன்புடன் தழுவி, ஜனக மகராஜரின் குமாரியாகிய நீ மரவுரியுடன் (மரவுரி - முனிவர்கள் உடுத்தும் ஆடை) கணவனை பிரிய முடியாமல் கானகத்துக்கு வந்துள்ளாய்? நீ கற்புகரசி. அணிகலன்கள் இல்லாமல் வெறுமையுடன் இருக்கின்றாயே? நீ சுமங்கலி பெண். அணிகலன்கள் இல்லாமல் இருக்கக் கூடாது. இவை என்னுடைய அணிகலன்கள். நீ என் மருமகள். இந்த அணிகலன்களை அணிந்துகொள் என அன்புடன் கூறி அணிகலன்களை நிரம்ப சீதைக்கு அணிவித்தாள். மகளே! ஒரு சமயம் நீ உன் கணவனை பிரிந்திருக்க கூடும். உனக்கு பசி எடுக்காத வரத்தை அருள்கிறேன். உன் புகழ் வாழ்க எனக் கூறி அருள் புரிந்தாள் அனுசூயை. இராமர், இலட்சுமணர், சீதை மூவரும் அத்திரி முனிவரின் ஆசிரமத்தில் ஓர் இரவு தங்கினார்கள். மறுநாள் காலை அவர்கள் முனிவரை வணங்கி விட்டு தண்டகவனத்தை நோக்கி புறப்பட்டனர்.
தண்டகவனம் வரலாறு : இட்சுவாகு மன்னனின் மகன்களில் ஒருவன் தான் தண்டன். தண்டன் தீய குணங்கள் நிறைந்தவன். எனவே மன்னன் தண்டனை, நாட்டைவிட்டு வெளியேற்றிவிட்டார். பிறகு அவன் தென்னாடு சென்று அங்கே ஓர் பகுதியைப் பிடித்துக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். அங்கு அசுரகுருவான சுக்கராச்சாரியாரின் மகளை தகாத வழியில் காதலித்தான். அதனை அறிந்த முனிவர் தண்டன் அழியவும், நாடு பாழாகவும் சபித்தார். அதனால் அந்த தேசம் காடாக மாறி தண்டகவனம் எனப் பெயர் பெற்றது என்பது புராணக்கதை.

தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்