ஒரு குளத்தில் நிறைய மீன்கள் அச்சத்தோடு வாழ்ந்து வந்தன. ஏனென்றால் ஒவ்வொரு நாளும் காலை பொழுதில், மீனவன் ஒருவன் மீன்களைப் பிடிக்க வலையை விரிப்பதே அச்சத்தின் காரணம். நிறைய மீன்கள் வலையில் சிக்கிக்கொண்டு தவிக்கும்.
சில மீன்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் சிக்கிக்கொண்டு தவிக்கும். ஒளிந்து கொள்வதற்கு இடம் தெரியாமல் சில மீன்கள் மாட்டிக் கொள்ளும். ஆபத்து என்று தெரிந்தும் என்ன செய்வது என்று தெரியாமல் சில மீன்கள் இருக்கும். மொத்தத்தில், பல வகையான மீன்கள் பயத்துடன் அந்த குளத்தில் வாழ்ந்து வந்தது.
ஆனால் ஒரு சிறிய மீன் மட்டும் எப்பொழுதும் மன நிறைவோடு சந்தோஷமாக இருந்தது. அது வலையைக் கண்டு பயப்படவில்லை. உற்சாகமாக, கலகலப்பாக இருந்தது. மற்ற மீன்களுக்கு ஆச்சரியம்!! அனுபவமும், விவேகமும் இருந்தும் கூட ஒன்றுமே புரியவில்லையே என்ற ஆதங்கம்!! ரகசியம் என்னவென்று அறிய ஆவலாக இருந்ததனால், ஒரு நாள் மாலையில், அந்த சிறிய மீனிடம் மற்ற மீன்கள் சென்று பேசத் தொடங்கின.
நாளை மீனவன் வலையை விரிக்க மீண்டும் வருவானே? உனக்கு பயமில்லையா? என்று கேட்டன.
அதற்கு சிறிய மீன், நான் அந்த வலையில் மாட்டிக் கொள்ள வாய்ப்பே இல்லை! என்றது.
உன் தன்னம்பிக்கைக்கும் வெற்றிக்கும் என்ன காரணம்? என்று கேட்ட பொழுது அந்தச் சிறிய மீன் மிக அழகாகப் பதிலளித்தது.
எளிமையான விஷயம். வலையை விரிக்கும் பொழுது மீனவனின் காலடியில் சென்று விடுவேன். சிக்கிக் கொள்ள வாய்ப்பே இல்லை ஏனெனில் வலையை அங்கு விரிப்பது கடினமானது ஆகும். வியக்கத்தக்கதுதான் ஆனால் இதுதான் நாம் மீனவனிடம் இருந்து தப்பித்துக் கொள்ள எளிமையான தீர்வு அல்லவா! என்று கூறியது.
தத்துவம் :
கடவுள் மேல் நம்பிக்கை வைத்து மன நிறைவோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். முடிந்த அளவு முயற்சிகளை எடுத்து விளைவுகளை, எல்லாம் வல்ல இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும். அப்படி வாழ்க்கையை நடத்தி வந்தால், சோதனைகளையும், துன்பங்களையும் சமாளிக்கும் திறன் நமக்கு தானாகவே வந்து விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக