நிலம்,
நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறோம். இந்த
பஞ்சபூதங்களின் இயக்கத்தைக் கொண்டுதான் உலகம் இயங்குகிறது. பரம்பொருளாகிய இறைவன்
இந்த பஞ்சபூதங்களில் கலந்திருந்து நம்மை வழிநடத்துகிறார். ஆன்மிக ரீதியாக
பஞ்சபூதங்களுக்கும் திருத்தலங்களை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். மகா
சிவராத்திரி தினத்தன்று சிவபெருமானின் பஞ்சபூத தலங்களையும், சிவன் தாண்டவம் ஆடிய
பஞ்சசபைகளிலும் தரிசனம் செய்யலாம்.
எல்லா யாகங்களையும் தர்மங்களையும்விட
இந்த மகாசிவராத்திரி விரதம் விசேஷமானது என்றும் மகாசிவராத்திரி விரதமிருக்கும் சிவனடியார்களைக்
கண்டு எமன் அஞ்சுவார் என்றும் சிவபுராணம் கூறுகிறது. இந்த நாளில் விடிய விடிய உறங்காமல்
சிவ புராணம் படித்தும் சிவனை வணங்கியும் வர நன்மைகள் நடைபெறும்.
சிவனின்
பஞ்சபூத தலங்களில் ஆகாயத்திற்குரிய சிதம்பரம் திருத்தலமே முதன்மையானதும்,
பழமையானதும் ஆகும். பஞ்சபூத தலங்களுக்குச் செல்லும்போது, சிதம்பரத்தில் தொடங்கி
ஸ்ரீகாளகஸ்தி, திருவண்ணாமலை, திருவானைக்காவல், காஞ்சீபுரம் சென்று யாத்திரையை
நிறைவு செய்வது மரபு.
நிலம்
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், நீர் ஸ்தலம் திருவானைக்காவல் கோவில், வாயு
ஸ்தலம் ஸ்ரீ காலஹஸ்தி, ஆகாயம் ஸ்தலம் சிதம்பரம் கோவில், நெருப்பு ஸ்தலம்
திருவண்ணாமலை கோவில். அதேபோல சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி,
குற்றாலம் ஆகிய ஐந்து இடங்களிலும் உள்ள சிவாலயங்களில் நடராஜர், தன் நடனத்தால்
சிறப்பித்த சபைகள் இருக்கின்றன. இந்த ஆலயங்களில் நடைபெறும் சிவராத்திரி
விழாக்களிலும் பங்கேற்கலாம்.
சிதம்பர
ரகசியம் - ஆகாயம்
தமிழ்நாட்டின்
நாட்டியத்திற்கும், கட்டிடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகர் சிதம்பரம்.
பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாச வடிவில், சிவன் இருக்கிறார் என்பதைக் குறிப்பால்
உணர்த்தும் வகையில் சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது. திருசிற்றம்பலம்,
சிற்றம்பலமாக மருவி சிதம்பரம் என வழங்கப்படுகிறது. இது தில்லை மரங்கள் நிறைந்த
காடாக முற்காலத்தில் இருந்ததால், தில்லை என்றும் தில்லையம்பலம் என்றும்
அழைக்கப்பட்டது. சிதம்பரத்தில் உள்ள ஆலயம் மிகவும் பழமையானது, பெருமை வாய்ந்தது. சிவபெருமான்,
நடராசராக, சிவகாமியம்மையுடன் வீற்றிருக்கும் ஆலயம். ஏனைய ஆலயங்களில் லிங்க வடிவமாக
இருக்கும் சிவபெருமான், இங்கு நடனமாடும் நிலையில் காட்சியளிக்கிறார். மூலவர்
இருக்கும் இடம் கனக சபை என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ரீ காலஹஸ்தி -
காற்று
பஞ்சபூத
தலங்களில் காற்று தலமாக போற்றப்படுகிறது ஸ்ரீகாளஹஸ்தி. ஆந்திரா மாநிலத்தில்
உள்ளது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய மூன்றும் இத்தலத்தில் சிவலிங்கத்தைப் பூசித்து
முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் ஸ்ரீகாளத்தி எனப் பெயர் பெற்றது. இங்கு
எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும்
அழைக்கப்படுகின்றனர். இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திரு மேனியை
கவனித்தால், கீழ்ப் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி
ஆகியவற்றை காணலாம். கண்ணப்பநாயனார் இத்தல இறைவன்மீது கொண்ட பேரன்பினால் தனது
கண்களை தானம் செய்து முக்தி பெற்றார். கண்தானத்தில் உலகின் முன்னோடியாக கண்ணப்பர்
திகழக் காரணமான தலம் என்னும் சிறப்புடையது. இக்கோவிலில் ராகு, கேது கிரக தோஷம்,
சர்ப்ப தோஷ நிவர்த்திக்கான பரிகார பூசைகள் செய்யப்படுவதால் நாடு முழுவதிலும்
இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
திருவண்ணாமலை -
நெருப்பு
சிவபெருமான்
இங்கு அக்னி ரூபமாக காட்சி அளிக்கிறார். மலையை சிவனாக வணங்குகின்றனர். நெருப்பு
ஸ்தலமான இங்குதான் சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக
அர்ததநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானது என்று புராணங்கள்
கூறுகின்றன. சிவன், கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால்,
பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். பஞ்சபூத தலங்களில் இது அக்னி
தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.
திருவானைக்காவல் -
நீர் ஸ்தலம்
திருவானைக்காவல்
பஞ்சபூத ஸ்தலங்களில் அப்புஸ்தலம், அதாவது நீர்த்தலம் ஆகும். காவேரி ஆற்றுக்கும்
கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட தீவுப்பகுதியில் ஸ்ரீரங்கத்திற்கு அருகே
அமைந்துள்ளது. இங்கு இருக்கும் ஜம்புலிங்கம் அம்பிகையால் செய்யப்பட்டது. ஒருமுறை
பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். காவிரியில் சிறிது நீர்
எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த
லிங்கத்தை வழிபட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புலிங்கம்
என வழங்கப்படுகிறது. மூலஸ்தான லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே
இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். யானையும்,
சிலந்தியும் வழிபட்டு முக்தி அடைந்த தலம் திருவானைக்காவல்.
காஞ்சிபுரம் - நிலம்
பஞ்சபூதங்களில்
நிலம் எனப்படும் மண்ணினை இத்தலம் குறிக்கிறது. இங்குள்ள லிங்கம் பிருத்வி லிங்கம்
என்றழைக்கப்படுகிறது. இத்தலத்தில் இறைவன் ஏகாம்பரேஸ்வரர் எனவும் இறைவி ஏலவார்குழலி
என்றும் அழைக்கப்படுகின்றனர். இத்தலம் முக்திதரும் தலங்களில் ஒன்றாகக்
கருதப்படுகிறது. சைவ சமயக் குரவர்களில் ஒருவரான சுந்தரர் பார்வையிழந்து தவித்தபோது
இத்தல இறைவனின்மீது பாடல்கள் பாடியே இடக்கண் பார்வையைப் பெற்றார். சுயம்பு
மூர்த்தியான இத்தல இறைவனுக்கு அபிஷேகங்கள் நடைபெறுவதில்லை.
திருக்குறிப்புத்தொண்டர், கழற்சிங்கர், ஐயடிகள் காடவர்கோன் போன்ற நாயன்மார்களின்
அவதாரத் தலம் மற்றும் சாக்கிய நாயனாரின் முக்தித்தலமாகும்.
பஞ்சசபைகள்
சிதம்பரம்,
மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஐந்து இடங்களிலும் உள்ள
சிவாலயங்களில் நடராஜர், தன் நடனத்தால் சிறப்பித்த சபைகள் இருக்கின்றன. இவை பஞ்ச
சபைகள் அல்லது ஐம் பெரும் சபைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஐந்து சபைகளும்
பொற்சபை, வெள்ளிசபை, ரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை என்று வழங்கப்படுகின்றன.
மகாசிவராத்திரி நாளில் இந்த ஆலயங்களிலும் நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளில்
பங்கேற்பதன் மூலம் சிவ புண்ணியம் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக