Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரணுமா ?

Image result for அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் ?


 வேலன் என்ற ஏழை மனிதர் ஒருவர் தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தெருவில் பழங்கால நாணயம் ஒன்று கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தார். அந்த நாணயத்தில் ஒரு துளை இருந்தது. துளையிட்ட நாணயம் கிடைத்தால் அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. எனவே, சந்தோஷமாக அதை எடுத்து தன்னுடைய சட்டைப் பையிலே பத்திரமாக வைத்துக் கொண்டார். வீட்டிற்கு சென்ற பின் அதனை ஒரு பாலிதின் கவரில் போட்டு, அதை ஒரு துணி கவரில் சுற்றி, பத்திரப்படுத்திக் கொண்டார்.

பின், தனக்கு வந்த அதிர்ஷ்டத்தை தன் மனைவியிடமும் சொன்னார். அதை எப்போதும் தனது சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அதை தொட்டு பார்த்துக் கொள்வார். ஆனால் அதனை வெளியில் எடுக்கமாட்டார். அந்த நாணயம் தனக்கு வாழ்வில் உயர்வைத் தரும் என்று நம்பி, தனது முழுத் திறனையும் பயன்படுத்தி உழைக்க ஆரம்பித்தார்.

பின்னர் வியாபாரம் செய்ய ஆரம்பித்து அதிலும் வெற்றி பெற்றார். அதன் பின்னர் பல வியாபார முயற்சிகளில் ஈடுபட்டு அனைத்திலும் வெற்றி பெற்றார். பணம், பதவி, புகழ் எல்லாம் அவரை வந்து சேர்ந்தது. அவரை எல்லோரும் பாராட்ட ஆரம்பித்தார்கள். அவர் எதைத் தொட்டாலும் வெற்றி என்ற நிலைமை உண்டானது. எல்லாம் அந்த துளையிட்ட நாணயத்தின் மகிமை என்று நினைத்தார். இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன.

ஒரு நாள் அந்த நாணயத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்தது. அப்போது தன் மனைவியை அழைத்து, ரொம்ப நாளைக்குப் பிறகு என்னுடைய அதிர்ஷ்ட நாணயத்தை இன்றைக்கு வெளியே எடுத்துப் பார்க்கப் போகிறேன் என்று கூறினார்.

உடனே மனைவி, இப்ப அதைப் பார்க்க வேண்டாமே என்று கூறினார். இல்லை, இல்லை! பார்த்தே தீர வேண்டும்! என்று சொல்லி சட்டைப் பையில் கையை விட்டு கவரை திறந்து, நாணயத்தை வெளியே எடுத்தார். அவருக்கு ஒரே ஆச்சரியம். அந்த நாணயத்தில் துளையே இல்லை. அப்படியே குழம்பிப் போய் நின்றார்.

அப்பொழுது அவரது மனைவி, உங்க சட்டை பையில் காசு இருப்பது நினைவில்லாமல் நான் தான் ஒரு நாள் உங்க சட்டை தூசியாக இருக்கு என்று ஜன்னலுக்கு வெளியே உதறினேன். அது தெருவில் எங்கேயோ விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. அது இல்லை என்பது உங்களுக்கு தெரிந்தால் வருத்தப்படுவீர்கள் என்பதற்காக வேறு ஒரு நாணயத்தை அதே போன்று கவரில் போட்டு, துணியைச் சுற்றி சட்டைப் பையில் போட்டு வைத்தேன் என்று கூறினாள். இது எப்ப நடந்தது? என்று அவர் கேட்டார். உங்களுக்கு காசு கிடைத்த மறுநாளே இது நடந்தது என்றாள் மனைவி.

நாம் எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை தளரவிடாமல், தன்னம்பிக்கையோடு எத்தகைய செயலைச் செய்தாலும் வெற்றி நம்மைத் தேடி வரும். வேலனுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. அவருடைய தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சி தான் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது.

தத்துவம் :

தன்னம்பிக்கையும், உழைப்பும் இருந்தால் அதிர்ஷ்டம் கூட உங்களுக்கு கை கொடுக்கும். எனவே அதிர்ஷ்டத்தை நம்பாமல் தன்னம்பிக்கையோடு உழையுங்கள். வாழ்வில் முன்னேறுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக