முனிவர்களின் வேண்டுகோளின்படி நாங்கள் இங்கு தங்குவதாக கூறி, இராமர் முனிவர்களின் பாதங்களை தொட்டு வணங்கினார். அவர்கள் தண்டகவனத்தில் பத்து ஆண்டுகள் தங்கினர். இராமர், நம் வனவாசம் மிகவும் பயனுள்ளதாக ஆயிற்று என்று இலட்சுமணர் மற்றும் சீதையிடம் கூறினார். யார் தன் உயிரை தியாகம் செய்கிறார்களோ அவர்கள் மும்மூர்த்திகளையும் வணங்கத்தக்கவர்கள் ஆகின்றனர். நாம் இந்த தவசீலர்களுக்கு உதவும் பொருட்டு நமக்கு பெரும் பாக்கியம் கிடைத்தது. இது பெரும் புண்ணியம் ஆகும் என்றார். இராமரை பல முனிவர்கள் வந்து வணங்கி சென்றனர். ஆனால் இராமர் அகத்திய முனிவரை கண்டு வணங்க விரும்பினார்.
பிறகு அவர்கள் அகத்திய முனிவரை தரிசிக்க வேண்டும் என்பதற்காக அவ்விடத்தை விட்டு புறப்பட்டு சென்றனர். அகத்திய முனிவரை தரிசிப்பதற்காக சென்று கொண்டிருந்த இராமரை அகத்தியரே எதிர்கொண்டு வரவேற்றார்.
அகத்திய முனிவரை பற்றி.,
தேவர்களின் பகைவனான விருத்திராசுரன் மற்றும் பல அரக்கர்கள் கடலில் புகுந்து ஒளிந்து கொண்டார்கள். இந்திரன், முதலிய தேவர்கள் அகத்திய முனிவரிடம் சென்று வேண்டினர். அவர் ஏழு கடல் நீரையும் ஒரே முறை ஆசமனம் (மந்திரபூர்வமாக நீரை மும்முறை உட்கொள்ளுதல்) செய்து நீர் முழுவதையும் உண்டு விட்டார். தண்ணீர் வற்றியதும், அங்கே அடியில் ஒளிந்துகொண்டிருந்த அரக்கர்கள் அகப்பட்டனர். தேவர்கள் அவ்வரக்கர்களை கொன்று ஒழித்தனர். பிறகு தேவர்கள் முனிவரிடம் வேண்டிக்கொள்ள, முனிவர் மீண்டும் உண்ட நீரை உமிழ்ந்து கடலை நீர் நிறையச் செய்தார் என்பது புராணம்.
அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த அகத்திய முனிவர், தன்னை தேடி வருவது கண்டு மகிழ்ச்சி அடைந்தார், இராமர். அவர்களை தம் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். இந்த பூவுலகம் செழித்து வாழ்வதற்காகத் தன் கையிலிருந்த கமண்டலத்தில் பிரம்ம லோகத்திலிருந்து காவேரி எனும் புனித நீரைக் கொண்டு வந்த அகத்திய முனிவர், இராமனைக் கண்டு கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்க வரவேற்றார். அனைவரும் அகத்தியரின் தவச்சாலை சென்று அடைந்தனர். தவச்சாலையில் முனிவர், இராமரை நன்கு உபசரித்தார். அகத்திய முனிவர் இராமரை இங்கேயே தங்கும்படி வேண்டிக் கொண்டார்.
அதற்கு இராமர் 'முனிவர் பெருமானே! இந்தக் காட்டில் தீங்கு செய்து வாழுகின்ற அரக்கர்களை அழிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. இதற்கு தாங்கள் என்னை ஆசி கூறி அனுப்ப வேண்டும்" என்றார். அகத்திய முனிவர் இராமா! நீ நல்ல காரியம் செய்யத் துணிந்துள்ளாய். உனக்கு வெற்றி உண்டாகட்டும்" என்று ஆசி கூறி சிறந்த வில்லையும், கணைகளையும் இராமரிடம் கொடுத்தார். பிறகு அகத்திய முனிவர் பஞ்சவடி என்னும் இடத்தின் பெருமைகளை கூறி, அங்கு சென்று வாழுமாறு என்று சொல்லி அவர்களை வழியனுப்பி வைத்தார். பிறகு மூவரும் பஞ்சவடி நோக்கி பயணம் செய்ய தொடங்கினர். போகும் வழியில் அவர்கள் பல நதிகளை பல மலைகளை கடந்து சென்றனர்.
காசிப முனிவருக்கு அருண பகவானும், கருட பகவானும் பிறந்தார்கள். இவர்கள் தெய்வப் பறவைகள். பேசும் திறன் கொண்டவர்கள். அருண பகவான் பேராற்றல் படைத்தவர். ஆதித்த பகவானுக்கு ரத சாரதியாக இருந்து தொண்டு புரிபவர். இவருக்கு சம்பாதி, ஜடாயு என இரு புதல்வர்கள். பல ஆண்டுகள் சடை போல் பின்னி கொண்டு நீண்ட காலம் வாழ்ந்ததால் ஜடாயு எனப் பெயர் பெற்றான்.
தொடரும்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக