புதன் மேட்டில் புறங்கைப் பகுதியிலிருந்து சிறு ரேகை ஒன்று இருதய ரேகைக்கு இணையாக வந்து புதன் மேட்டுக்குள்ளேயே முடிந்து விடும். இது திருமண ரேகை என்று அழைக்கப்படுகிறது.
இந்த ரேகை அழுத்தமாகவும், நேர்க்கோடாகவும், கூர்மையான நுனியாகவும் முடிவடைய வேண்டும். அதுமட்டுமின்றி இந்த ரேகையை வேறெந்த ரேகைகளும் வெட்டாமல் இருப்பது நல்லது.
இப்படிப்பட்ட நல்ல ரேகையை உடையவர்கள் சிறப்பான திருமண வாழ்க்கையைப் பெறுவார்கள். இந்த ரேகை நல்ல நிறமுடன் அழகாய் அமைந்திருந்தால் நல்ல மனைவியையோ அல்லது நல்ல கணவனையோ பெறுவார்கள்.
மேலும், குரு மேட்டில் ஒரு பெருக்கல் குறியும் சேர்ந்து அமைந்தால் மகிழ்ச்சிகரமான இல்வாழ்க்கையைப் பெறுவார்கள்.
இந்த ரேகைக்கு இணையாக இரண்டு மெல்லிய ரேகைகள் அமைந்திருந்தால் மனைவி அல்லது கணவனிடத்தில் அதிகப் பாசத்தையோ, அன்பையோ இது காட்டுகிறது.
இரண்டு திருமணங்கள் நடைபெறுவதை, சனி ரேகையில் ஏற்படுகின்ற பிளவுகள் மூலமாகவும், வேறு சில சிறு ரேகைகளின் குறுக்கீடுகள் மூலமாகவும் தான் தெரிந்து கொள்ள வெண்டும்.
விதி ரேகையை ஒட்டி அதற்கு இணையாக சிறு ரேகைகள் செல்வதும், உள்ளங்கைப் பகுதியில் அதிகமாய்ப் பெருக்கல் குறிகள் காணப்படுவதும் ஒருவருக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை எடுத்துக் காட்டும் அடையாளங்களாகும்.
திருமண ரேகையில் பிளவு இருப்பது துன்பத்தை உண்டாக்கும்.
இந்த ரேகையிலிருந்து சில மெல்லிய ரேகைகள் சுக்கிர மேட்டை நோக்கிச் செல்லும்போது தீவுகளுடன் இருந்தால் அது விவாகரத்து, கணவன் - மனைவி பிரிவு இவைகளைக் குறிக்கும்.
திருமண ரேகை மேல் நோக்கி வளைந்தால் அப்படிப்பட்ட நபருக்கு இல்வாழ்க்கை பாதிக்கப்படும். ஒரு சிலர் திருமணமே செய்து கொள்ள விரும்ப மாட்டார்கள்.
திருமண ரேகை கீழ்நோக்கி வளைந்தால் கணவன் அல்லது மனைவிக்கு பாதிப்பு ஏற்படும்.
திருமண ரேகையில் ஒரே ஒரு கரும்புள்ளி காணப்படுவது மிகுந்த துக்கத்தைக் குறிக்கிறது.
திருமண ரேகை, இருதய ரேகைக்கு அருகில் இருந்தால், இளம் வயதில் திருமணம் என்றும், அதிக தூரம் தள்ளி இருந்தால், தாமதமான திருமணம் என்றும் பொருள்.
மேடுகளில் அதிக உயரமாயுள்ள மேட்டையையும், திருமண ரேகையையும், விதி ரேகையையும் பொறுத்தே திருமணத்தின் தன்மை அமைகிறது.
திருமண ரேகை இருந்தும் திருமணமே ஆகாத நபர்கள் இருப்பார்கள். பூதக் கண்ணாடி மூலம் பார்த்தால் இந்த ரேகைகளில் வெட்டுகள் இருப்பது தெரியும். திருமண ரேகையைக் குறுக்கே வெட்டும் கோடுகள் திருமணத்திற்குத் தடை ஏற்படுவதைக் கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக